
ஃபுரூட் ஃபிளை என்பது நம் கிச்சனில் இருக்கும் பழுத்த பழங்கள், காய்கறிகள் போன்றவற்றின் மீது கூட்டமாக அமர்ந்து கொண்டும் பறந்துகொண்டும் இருக்கும் மிகச் சிறிய அளவிலான ஈக்களாகும். பழங்கள் மீது மட்டுமின்றி, அவை கிச்சனில் சிந்தியிருக்கும் ஒரு சொட்டு காப்பி அல்லது பிரட் துகள்கள் மீது அமர்வது மற்றும், ஸிங்கை சுற்றியுள்ள ஈரமான பகுதிகளில் அமர்ந்து முட்டைகள் இடுவது போன்ற அசுத்தமான செயல்களில் ஈடுபட்டு, நம் ஆரோக்கியதிற்கு பங்கம் விளைவிக்கும் வேலையை படு ஸ்மார்ட்டாகப் பண்ணிக்கொண்டிருக்கும் எதிரி.
வீட்டுக்குள் வரும் ஒரு பெண் ஈ ஒரே நேரத்தில் 500 முட்டைகளை இடக்கூடும். அவை 24 மணி நேரத்தில் குஞ்சுகளாகப் பொரித்து வீடு முழுவதையும் ஆக்ரமித்துக் கொள்ளும். இந்த அபாயத்திலிருந்து எவ்வாறு விடுபடலாமென்று இப்பதிவில் பார்க்கலாம்.
1. இந்த ஈக்களுக்கு அழுகிய பழ வாசனையை ஒத்திருக்கும் ஆப்பிள் சிடார் வினிகர் வாசனை மிகவும் பிடிக்கும். ஒரு சிறிய பௌலில் ஆப்பிள் சிடார் வினிகரை ஊற்றி அதனுடன் சில துளிகள் டிஷ் சோப்பைக் கலக்கவும். பின் அந்த பௌலை ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றி மூடவும். பிளாஸ்டிக் பேப்பரின் மேற்பரப்பில் நான்கைந்து துளைகள் போடவும். இப்போது ஈக்கள் அனைத்தும் துளை வழியே உட்சென்று விழுந்து உயிரிழக்கும்.
2. நன்கு பழுத்த பழத் துண்டுகள் சிலவற்றை ஒரு ஜாரின் உள்ளே போடவும். பின் ஒரு பேப்பர் கோன் (cone) செய்யவும். கோனின் குறுகிய பகுதியில் சிறு ஓட்டை இருக்குமாறு செய்து அப்பகுதி ஜாரின் உள்ளே இருக்கும்படி செட் பண்ணி இரவில் வைக்கவும். துவாரத்தின் வழியே ஜாரினுள் செல்லும் ஈக்கள் சுலபமா வெளியேற முடியாமல் இறந்துவிடும். மொத்த ஈக்களையும் கவர்ந்திழுத்து அழிக்க சுலபமான வழி இது.
3. கிச்சனின் கவுன்டர் (counter) பகுதியை தினமும் சாயங்கால வேளையில் சிறிது வினிகர் அல்லது லெமன் ஜூஸ் தெளித்து நன்கு துடைத்து சுத்தப்படுத்தி விடவும். சிங்க்கை சுற்றி துளி ஈரமின்றி எப்பொழுதும் காய்ந்த நிலையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். அழுகிய நிலைக்குச் சென்றுவிட்ட பழங்களை உடனடியாக அப்புறப்படுத்திவிடவும்.
4. கிச்சனிலிருக்கும் குப்பைக் கூடையில் பழத்தோல் மற்றும் காய்கறிக் கழிவுகளைப் போட்டு நீண்ட நேரம் வைத்துவிடாமல் அவ்வப்போது அப்புறப்படுத்துவதும். குப்பைக் கூடையை குறிப்பிட்ட இடை வெளிகளில் டீப் கிளீன் செய்வதும் ஃபுரூட் ஃபிளைகளின் படையெடுப்பை தடுக்க உதவும் சிறந்த வழியாகும்.
5. சிறு சிறு கிண்ணங்களில் இலவங்கம், துளசி இலைகள், லாவென்டர் ஸ்ப்ரிக்ஸ் (sprigs) போன்ற ஃபுரூட் ஃபிளைகளுக்குப் பிடிக்காத வாசனை தரும் பொருட்களைப் போட்டு ஆங்காங்கே வைப்பதும் இந்த எனிமிகளிலிருந்து விடுதலை பெற உதவும்.
6. கொதிக்கும் நீரில் சிறிது பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து சிங்க் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் ஊற்றி நன்கு தேய்த்து கழுவி விட்டால் ஈ முட்டைகள், பொரிக்கும் முன் அவற்றை அழித்து விடலாம்.
7. பழங்களை வலை மூடி உபயோகித்து மூடி வைப்பது அல்லது ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாப்பது மற்றொரு சிறந்த வழியாகும்.
மேற்கூறிய வழி முறைகளைப் பின்பற்றி வீட்டை ஃபுரூட் ஃபிளை இல்லாத இல்லமாக மாற்றுவோம். ஆரோக்கியம் காப்போம்.