கோகம் (Kokum) என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு பசுமையான வெப்ப மண்டல மரமாகும். கார்சீனியா இண்டிகா என்ற அறிவியல் பெயர் கொண்ட ஒரு வகை மரம். மங்குஸ்தான் குடும்பத்தைச் சேர்ந்த பழம் தரும் மரமாகும். இது பிரகாசமான சிவப்பு நிறம் மற்றும் புளிப்பு சுவைக்கு பெயர் பெற்றது.
இது இந்திய வட்டார மொழிகளில் வெவ்வேறு பெயர்களில் பிரபலமானது. சமஸ்கிருதத்தில் விருக்ஷம்லா என்றும் கன்னடத்தில் கோகம்மாரா, முருகலா ஹன்னு என்றும், சென்னையில் கோகம் என்றும் அழைக்கப்படுகிறது.
கோகம் பழங்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. இதன் பழங்கள் பழுத்ததும் அடர் ஊதா நிறத்தில் இருக்கும். இதிலிருந்து உண்ணக்கூடிய ஒரு முக்கியமான கொழுப்பு பெறப்படுகிறது. இது சமையல், மருந்து மற்றும் தொழில் துறை பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
1) புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது:
கோகம் பழத்தில் புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தடுக்கும் கார்சினோல் உள்ளது. இது கல்லீரல், கணையம், பெருங்குடல் மற்றும் தோல் புற்று நோய்களுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.
2) ஊட்டச்சத்துக்கள்:
கோகம் பழத்தில் விட்டமின் சி, விட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாசியம், மாங்கனீஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
3) ஒவ்வாமைக்கு சிறந்தது:
உடல் தடிப்புகள், புண்களுக்கும், பூச்சி கடிக்கும், உணவு ஒவ்வாமைக்கும் இதன் பழம் பயன்படுத்தப்படுகிறது. இதயத்திற்கு வலிமை தரும். மூல நோய், சீதபேதி, இதய கோளாறுகளை போக்கும்.
4) எடை இழப்புக்கு உதவுகிறது:
கோகம் பழத்தில் உள்ள ஹைட்ராக்சில் சிட்ரிக் அமிலம் எடை இழப்புக்கு உதவுகிறது. கொழுப்பு அமிலங்களை குறைத்து எடை இழப்பை தூண்டுகிறது. உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை குறைக்கிறது. இதில் கொழுப்பு சிறிதும் கிடையாதுு. கலோரிகளும் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம்.
5) உடல் குளிர்ச்சி அடைய:
உடலில் வெப்ப பக்கவாதம் மற்றும் சூரிய வெளிப்பாடு தொடர்பான அறிகுறிகளை கோகம் சாற்றை உட்கொள்வதால் தடுக்க முடிகிறது. இது வயிற்றுப் புண்ணையும் குணப்படுத்தும். கோடை காலத்திற்கேற்ற புத்துணர்ச்சியூட்டும் சிறந்த பானம் இது.
6) செரிமானத்தை மேம்படுத்துகிறது:
அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான கோளாறுகளை போக்க வல்லது. கோகம் சாற்றை உட்கொள்வது இரப்பை வேலையை ஒழுங்குபடுத்துகிறது. அஜீரண பிரச்சனையை போக்கி பசியை தூண்டக்கூடியது.
7) வெட்டுக்கள், காயங்கள், வீக்கங்களை குணப்படுத்தும்:
கோகம் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. இப்பழத்தில் சில பீனாலிக் சேர்மங்கள் இருப்பதால் புண்கள், வீக்கம், வெட்டுக்கள், தீக்காயங்களுக்கு கூட பயன்படுத்துவது வீக்கத்தை குறைக்கவும், காயங்களை போக்கவும் உதவுகிறது. விதைகளை வெயிலில் உலர்த்தி அரைத்து தயாரிக்கப்படும் எண்ணெய் குதிகால் வெடிப்பு மற்றும் வறண்டு சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது.