
தனிமை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு கட்டத்தில் ஏற்படும் ஒரு அனுபவம்தான். அவ்வப்பொழுது தனிமையை உணர்வது இயற்கையானதுதான் என்றாலும் நாள்பட்ட தனிமை நம் மனதிலும் உடல் நலத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
தனிமை என்பது சமூகத்தில் மற்றவர்களுடன் தொடர்பில்லாமல் தனிப்பட்ட முறையில் உணரும் ஒரு உணர்வு. இது சில நேரங்களில் ஒரு நல்ல அனுபவமாக இருக்கலாம். ஆனால் அதிகப்படியான தனிமை மனநலத்தையும், உடல் நலத்தையும் பாதிப்பதுடன் சமூக தொடர்புகளிலும் சிக்கல்களை உண்டாக்கும்.
தனிமையிலிருந்து வெளிவர நிறைய நண்பர்கள் வட்டத்தையும், உறவினர்களுடன் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்வது சிறந்த பலனைத் தரும். அத்துடன் நம்முடைய தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதும் தனிமையை விரட்டும். நமக்கு விருப்பமான புத்தகங்களை படிப்பது, வரையும் திறமை இருந்தால் ஓவியங்கள் வரைவது, நடனம், பாட்டு போன்றவற்றை செய்ய கற்றுக்கொண்டால் தனிமை என்பது விலகிவிடும்.
தனிமை என்பது கொஞ்சம் வித்தியாசமான சூழல்தான். அதை நாமே எடுத்துக்கொண்டால் இனிக்கும்; மற்றவர்கள் நமக்கு அதை கொடுத்தால் கசக்கும். தனிமை என்பதுதானே வருவதில்லை. ஒன்று மற்றவர்களால் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லது நாமே நம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கலாம்.
தனிமையிலே இனிமை காணும் சிலர் இருக்கலாம். தனிமை என்பது மிகவும் கொடியது என்று எண்ணுபவர்களும் சிலர் இருக்கலாம். தனிமையினால் தலைவலி, டென்ஷன், மன அழுத்தம் ஏற்படும். அத்துடன் தேவையில்லாமல் எதையாவது பற்றி தீவிரமாக யோசிக்க தோன்றும்.
தனிமையிலிருந்து வெளிவர வேண்டும், மீண்டு வரவேண்டும் என்று எண்ணுபவர்கள் தங்கள் எண்ணங்களை தம் வசப்படுத்துவது நல்ல தீர்வாக இருக்கும். தனிமையில் இருக்கும் சமயங்களில் இனிய நினைவுகளும் எண்ணங்களும் மனதில் ஓடிக்கொண்டிருந்தால் நாம் தனியாக இருக்கவில்லை என்ற எண்ணத்தை தோற்றுவிக்கலாம்.
தனிமையை கையாள சிறந்த வழி எல்லாவற்றிற்கும் பிறரை சார்ந்து இருப்பதை தவிர்த்து நாமே களத்தில் இறங்கி வேலை செய்வது நம்மை தனிமையில் இருந்து விடுபட உதவும்.
தனிமையை கையாள மற்றொரு சிறந்த வழி நம் ரசனைகளை வெவ்வேறு வழிகளில் விரிவுபடுத்திக் கொண்டே இருப்பதுதான். இசையை ரசிப்பது, செல்லப்பிராணிகளை வளர்ப்பது, அவற்றுடன் விளையாடுவது கூட நம்மை தனிமையில் இருந்து மீட்கும். இப்பொழுதெல்லாம் பிறரை தொடர்புகொள்ள நிறைய வசதிகள் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற எத்தனையோ வசதிகள் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்தி தனிமையை விரட்டலாம்.
அளவான தனிமை ஆரோக்கியம் தரும். அளவுக்கு அதிகமான தனிமை நம் உடல் மற்றும் மனநலத்தை பாதிக்கும்.