குழந்தைப் பருவத்திலேயே பிள்ளைகளுக்கு நல்லது கெட்டது கற்றுக்கொடுத்து அவர்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கையை வளரச் செய்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். அதுவும் இந்த நவீன காலத்தில் அவர்களின் மனதை திசை திருப்பவும், அவர்களை தீய வழியில் அழைத்துச் செல்லவும் மனித வடிவில் பல தீய சக்திகள் வலை விரித்துக் காத்துக்கொண்டிருப்பதைக் கேட்கவும் பார்க்கவும் செய்கிறோம்.
குழந்தைகள் அப்படிப்பட்ட அபாயகரமான நபர்களை அடையாளம் கண்டுகொள்ள பெற்றோர்கள் அவர்களுக்கு எட்டு விதமான பழக்க வழக்கங்களை கற்பிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.
1. எல்லைக் கோட்டை ஏற்படுத்திக் கொடுப்பது: குழந்தைகளுக்கு எல்லைக் கோட்டை வகுத்துக் கொடுத்து அதை அவர்கள் மீறாதிருக்கவும், கோட்டுக்குள் மற்றவர் எவரையும் அனுமதிக்காமல் பார்த்துக்கொள்ளவும் கற்பிக்க வேண்டும். அவர்களுக்கு சொந்தமான இடத்தை மதிக்கவும், தேவையேற்படும்போது பிறரிடம் தைரியமாக 'நோ' சொல்லவும் கற்றுக்கொடுங்கள்.
2. நடத்தையில் நல்லது கெட்டதை தெளிவாக விளக்குவது: குழந்தைகளுக்கு நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வேறுபாட்டை புரியும்படி எடுத்துச் சொல்லி விளக்குவது அவசியம். தீங்கு தரும் நடத்தை கொண்டவர்களின் பொய் பேசும் குணத்தையும், பிறரை அச்சுறுத்தி அமைதியிழக்கச் செய்யும் குணத்தையும் விவரித்துக் கூறும்போது குழந்தைகள் அப்படிப்பட்ட குணம் கொண்டோரை சந்திக்கும்போது சுலபமாக அவர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
3. உள்ளுணர்வை உணர்ந்து நம்பிக்கை கொள்ளச் செய்தல்: உள்ளுணர்வு என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். ஏதோ ஒரு கெட்ட சம்பவம் நடக்கப்போகிறது என்பதை குறிப்பால் உணர்த்த, வயிற்றுக்குள் பட்டாம் பூச்சி பறப்பது போன்றதொரு உணர்வு உண்டாகும். அந்த மாதிரி நேரங்களில் துணிவோடு, அசௌகரியமான அந்த சூழலிலிருந்து அவர்கள் தானாக விலகிச் செல்ல அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது நல்லது.
4. நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை நடித்துக் காட்டுவது: கடினமான சூழ்நிலைகளை பிள்ளைகள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை பெற்றோர் நடித்துக் காட்டுவது அவர்கள் அதைப் பின்பற்றி செயல்படுத்த உதவும். பியர் பிரஷர் (Peer pressure) அல்லது தந்திரமான பேச்சுக்களை எவ்வாறு சமாளிப்பது என கற்றுக்கொடுப்பது அவர்களின் தன்னம்பிக்கையையும் எடை போடும் திறனையும் வளர்க்க உதவும்.
5. வெளிப்படைத் தன்மையை உருவாக்குதல்: குழந்தைகளுக்கு வெளிப்படைத்தன்மை கொண்ட மற்றும் நம்பிக்கையூட்டக்கூடிய சூழலை உருவாக்கித் தருவது உங்களுடன் அவர்கள் எந்த விஷயத்தையும் பகிர்ந்துகொள்வது பாதுகாப்பளிக்கும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள உதவும்.
6. சூழ்ச்சித் திறத்துடன் தந்திரமாக அணுகுபவரை கையாளும் முறையை கற்பித்தல்: தந்திரமாக மிரட்டி குற்ற உணர்வுகொள்ளச் செய்யும் நபர்களை கையாளும் முறையை பெற்றோர்கள் குழந்தைக்கு சொல்லிக்கொடுப்பது அவசியம். அப்படிப்பட்டவர்களைக் கண்டறியவும் அவர்கள் கூறும் பொய்யான வாக்குறுதிகளை நம்பாமல் அவர்களுக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பதையும் கற்றுத் தர வேண்டும்.
7. நம்பிக்கை வைக்க வேண்டிய நபர்களை அறிமுகம் செய்து வைத்தல்: பள்ளிக்கூட டீச்சர், நண்பர்கள் மற்றும் உறவினர் வட்டத்தில் நம்பகமானவர்களை குழந்தைக்கு அறிமுகம் செய்து வைப்பதின் மூலம் குழந்தைகள் யார் யாரிடம் பேசுவது பாதுகாப்பானது, யார் யாரிடமிருந்து விலகியிருப்பது நல்லது என்பதை தெரிந்துகொள்ள உதவும்.
8. தன்னம்பிக்கையை வளர்த்தல்: குழந்தைகள் எதிர்காலத்தில் தான் விரும்புவதை சாதிக்க முடியும் என்ற நேர்மறையான நம்பிக்கையை அவர்களுக்குள் படிப்படியாக வளர்த்துக்கொள்ளும் விதத்தில் நல்லது கெட்டதை அவர்களுக்குக் கற்பித்தல் அவர்கள் எந்த நிலையிலும் தடம் மாறிச் செல்லாமல் சிறந்த குடிமகனாக வளர உதவும்.