மன அழுத்தத்தை விரட்டும் 8 எளிய வழிகள்: இதோ உங்களுக்கான ரகசியம்!

Stress relief tip
Stress relief tipAI Image
Updated on

ற்கால பர பரப்பான சூழலில் அதிக வேலைப்பளுவின் காரணமாக மன அழுத்தம் மற்றும் ஆற்றல் இழப்பு (burnout) உண்டாகும் நிலை பலருக்கும் ஏற்படுவதை கேள்விப்படுகிறோம். காலையில் எழுந்ததிலிருந்து படுக்கைக்கு செல்லும்வரை உடலில் உள்ள அதிகபட்ச சக்தியை உழைக்கவும் ஓடவும் செலவழித்துவிட்டு தனக்கான நேரத்தை அனுபவிக்க சக்தியின்றி உறங்கிவிடுகிறோம்.

இப்பழக்கம் நாளடைவில் ஸ்ட்ரெஸ் மற்றும் அதீத சோர்வை கொண்டு வந்து சேர்த்துவிடும். இதைத் தவிர்க்க ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய எட்டு விதமான  வாழ்வியல் முறைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

காலை சூரிய வெளிச்சம்: காலையில் கண் விழித்ததும் ஜன்னல் கதவை திறந்து வைத்து சூரிய ஒளி அறைக்குள் வர அனுமதியுங்கள். அந்த வெளிச்சத்தில் சிறிது நேரம் அமைதியாய் அமர்ந்திருங்கள். அப்போது உங்கள் உடலின் மந்த நிலை மாறி சுறு சுறுப்பும் புத்துணர்வும் உடலுக்குள் பரவுவதை உணரமுடியும்.

கடைக்கு சென்று வருதல்: வீட்டுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் ஆன்லைனில் வாங்கிக் கொண்டிராமல் அவ்வப்போது பக்கத்திலிருக்கும் கடைக்கு நடந்து சென்று வாங்கி வாருங்கள். அது உங்களுக்கு பல தரப்பட்ட மனிதர்களை பார்க்கவும் பழகவும் வாய்ப்பு உண்டாக்கி தரும். அப்போது உங்கள் ஸ்ட்ரெஸ் லெவல் குறையும். மனம் அமைதி பெறும்.

காலை காபி: காலையில் தினமும் ஒரே இடத்தில் அமர்ந்து காபி குடிக்க வேண்டாம். வராண்டா, பால்கனி, கார்டன், மொட்டை மாடி என இடத்தை மாற்றிக்கொண்டே இருங்கள். அப்போது மெல்லிய காலைத்தென்றல் முகத்தை வருடிச்செல்வது, இலைகளின் அசைவு, பறவைகளின் 'கீச்' ஒலி, மனித நடமாட்டம் போன்ற இயற்கையோடிணைந்த நிகழ்வுகளை நீங்கள்  உணரவும் ஒருவிதமான அமைதி மனதிற்குள் குடி புகவும் வாய்ப்பு உண்டாகும்.  

சிறந்த முறையில் உடையணிதல்: எப்பொழுதும் ஏனோ தானோவென்று டிரஸ் பண்ணாமல், உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரவும், அணிந்துகொள்ள வசதியாகவும், தன்னம்பிக்கை உணர்வை கூட்டுவதாகவும் உள்ள ஆடைகளை அணிந்து, பிடித்தமான பெர்ஃப்யூமையும் ஸ்பிரே பண்ணிக்கோங்க. இவ்வித சுய கவனிப்பு உங்கள் மன நிலை சீராகவும், சக்தியின் அளவு அதிகரிக்கவும் உதவும்.

பிடித்த உணவு: பிடித்தமான உணவை நீங்களே வீட்டில் தயாரித்து உண்பது உங்களுக்கு மன நிம்மதி தரும் அனுபவமாக அமையும். மேலும் அது, ஒரு செயலை நிதானமாகவும் கவனச் சிதறலின்றியும் செய்ய கற்றுத்தரும்.

இதையும் படியுங்கள்:
ஒரே இரவில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் 5 ரகசியங்கள்!
Stress relief tip

மகிழ்ச்சியான தருணங்களை ரசிப்பது: உங்களுக்காக நேரம் ஒதுக்கி துணையுடன் அமர்ந்து படம் பார்ப்பது அல்லது மொட்டை மாடிக்கு சென்று நிறம் மாறும் ஆகாயத்தையும் மேகங்களையும் ரசிப்பது மனதுக்கு மகிழ்ச்சியும் திருப்தியான உணர்வும் தரும். 

சின்ன இடைவெளி: தொடர்ந்து கணினித் திரையில் மூழ்கிக் கிடப்பதை விடுத்து அவ்வப்போது சிறிய பிரேக் எடுத்து வராண்டாவில் நடப்பது, கேன்டீன் சென்று ஒரு கப் காபி அருந்துதல், நண்பர்களுடன் சினிமா, ஸ்போர்ட்ஸ் போன்ற விஷயங்களைப் பற்றி கலந்துரையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு மீண்டும் வேலையை தொடர்வது மனதுக்கு புத்துணர்வு தரவும், ஸ்ட்ரெஸ் குறையவும் வழி காட்டும்.

உணவை மெதுவாக உண்ணுதல்: நாள் முழுக்க அலுவலக வேலை, சொந்த வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், சாப்பாட்டையும் வாயில் அள்ளி திணித்துக்கொண்டு ஓடுவதே பலரின் வழக்கம்.

ஆரோக்கியமற்ற இப்பழக்கம் உணவின் சுவையை உணரவோ, ரசித்து அனுபவிக்கவோ அனுமதிக்காது. சாப்பிடுவதற்கென்று நேரம் ஒதுக்கி நிதானமாக உணவை உட்கொள்வதே ஊட்டச்சத்துக்கள் உடலில் சேர உதவிபுரியும். மேலே கூறிய எட்டு பழக்கங்களையும் தவறாது பின் பற்றுபவர்களுக்கு மன அழுத்தம் வரும் வாய்ப்பு குறைவு.

logo
Kalki Online
kalkionline.com