அதீத சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 9 ஜப்பானிய உத்திகள்!

9 Japanese Techniques to End Overthinking
9 Japanese Techniques to End Overthinkinghttps://www.onlymyhealth.com

சிலர் எப்போதும் எதைக் குறித்தாவது சிந்தனை செய்துகொண்டே இருப்பார்கள். அதாவது, கவலைப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். இதனால் எதிர்மறையான எண்ணங்கள் அதிகம் அவர்களிடத்தில் இருக்கும். ‘ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாது’ என்று கிண்டலாக சொல்லப்படுவதும் உண்டு. எந்த விஷயத்தையும் அதீதமாக சிந்தனை செய்தால் அது மனதை மட்டுமல்ல, உறவுகளையும் ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சியையும் பாதிக்கும். இந்தப் பதிவில் ஒன்பது விதமான ஜப்பானிய உத்திகளை பயன்படுத்தி அதீத சிந்தனைக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

1. கெய்சன் தத்துவம்: ஒரு பெரிய வேலை அல்லது பணியை செய்யவேண்டி இருந்தால் அதை நினைத்து மலைப்பாக இருக்கும். ‘எப்படி செய்து முடிக்கப் போகிறோமோ’ என்ற கவலையும் எழும். அதை சிறுசிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக செய்து முடித்ததும் மன பாரமும் குறையும். படிப்படியான வளர்ச்சியும் வந்து சேரும்.

2. இக்கிகை முறை: இக்கிகை என்பது சந்தோஷமான, நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் ஒரு ஜப்பானிய முறை. ஒருவர் தனக்கு மிகப்பிடித்த விஷயத்தை செய்து அதனால் தானும் மகிழ்ச்சி அடைந்து உலகமும் பயனடையும் விதத்தில் செயல்படுவதே இதன் பொருள். இதனால் அதிக சிந்தனையோ கவலையோ இல்லாமல் ஒருவரால் சுதந்திரமாக செயல்பட முடியும்.

3. கிண்ட்சுகி: உடைந்த மட்பாண்டங்களை புதிய கலைப்பொருளாக மாற்றுவது கிண்ட்சுகியின் ஒரு முறையாகும். இது நம்மிடம் உள்ள குறைகளைக் கொண்டாட சொல்லித் தருகிறது. ஒருவர் தனது உடலில் அல்லது மனதில் உள்ள குறைகளை எண்ணி கவலைப்படாமல் அவற்றை எப்படிப் பயனுள்ளவையாக மாற்றலாம் என்கிற வித்தையை சொல்லித் தருவது. இதனால் நாம் செய்யும் செயலில் தோல்வி வந்து விடுமோ என்கிற பயம் இல்லாமல் ஒருவரால் செயல்பட முடியும். தன்னுடைய பிழைகளையும் ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொள்ள முடியும்.

4. ஷிரின் - யோகா: இயற்கையோடு இணைந்து காடுகளில் உள்ள பசுந்தாவரங்களோடு ஒருவர் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு அங்குள்ள இயற்கையை கண்களால் ரசித்தும் சத்தங்களை காதால் கேட்டும் உணர்தலே இந்த ஷிரின் யோகா முறை. இது ஒருவருடைய மன அழுத்தத்தை நன்றாகக் குறைக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என மருத்துவ ஆய்வுகள் சொல்லுகின்றன.

5. ஜாஜென் (Zazen): ஜென் பௌத்த பாரம்பரியத்தின் முதன்மையான ஒரு தியான முறை இது. ஒருவர் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அவருக்குள் எழும் எண்ணங்களை எந்தவிதமான குறுக்கீடும் இல்லாமல் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தியானத்தை தொடர்ந்து பயிற்சி செய்யும்போது ஒருவர் தனது மனதை அதீத சிந்தனையிலிருந்து விலக்கி வைக்கவும், உள் மனதின் ஆழ்ந்த அமைதியை அனுபவிக்கவும் முடியும்.

6. யுஜென் முறை: இந்தப் பிரபஞ்சத்தின் அழகையும் புதிரையும் ரசித்து அனுபவித்தல். ஆனால், அவற்றை வார்த்தைகளால் முழுமையாக வெளிப்படுத்த முடியாது என்பதே இந்த முறையின் தத்துவம். இதைப் பின்பற்றி வருங்காலத்தில் என்ன நடக்குமோ என்று கவலைப்படாமல் நிகழ்கால வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும்.

7. மோனோ நோ (Mono No Aware) விழிப்புணர்வு: இந்த உத்தி வாழ்வின் நிலையாமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தற்போதைய வாழ்க்கையை உணர்ந்து வாழ்தலும் பிறரிடத்தில் அன்போடு நடந்து கொள்வதையும் வாழ்க்கையின் அற்புதத்தை ரசிக்கவும் சொல்லித் தருகிறது. இதனால் மனதில் உள்ள பாரம் குறைந்து அதீத சிந்தனையில் இருந்து விடுபட்டு எல்லாவற்றின் மீதும் ஒரு ஈர்ப்பு உண்டாகும்.

இதையும் படியுங்கள்:
தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?
9 Japanese Techniques to End Overthinking

8. வாபி – சாபி: வாழ்வின் நிலையாமை, பரிபூரணத்துவம் இல்லாமை மற்றும் எளிமையில் அழகை காணும் ஜப்பானிய தத்துவமே வாபி - சாபி. இந்தத் தத்துவத்தை பின்பற்றும்போது வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொண்டு திருப்தியுடன் வாழ சொல்லித் தருகிறது. தேவையில்லாத சிந்தனைகள் தடுக்கப்படுகின்றன.

9. ஷோகனை: தன்னால் கட்டுப்படுத்த முடியாத சூழலை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என்பதுதான் ஷோகனையின் பொருள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம் என்பதுதான் இதன் பாடம். இதனால் ஒருவருடைய தேவையில்லாத கவலைகள், சிந்தனைகள் மாற்றம் அடைந்து அமைதியும் சந்தோஷமும் கிட்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com