
சிலர் மிக அமைதியாக இருப்பார்கள். அவர்கள் எல்லோரிடமிருந்தும் சற்று விலகியே இருப்பார்கள். இதனால் மற்றவர்களுக்கு இவர்களைப் புரிந்து கொள்ளவும், அவர்களது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் கடினமாக இருக்கும்.
இன்னும் சிலர் மிகவும் குறைவாகவே பேசுவார்கள். என்ன கேட்டாலும் மேம்போக்கான பதில்களையே கூறுவார்கள். இதனால் மற்றவர்களுக்கு இவரின் எண்ணம் பற்றிப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கும்.
மேலும் சிலர் தங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தங்கள் உணர்வுகளையும் அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்வதால் மற்றவர்களுக்கு இவர்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாது.
உரையாடும்போது அதிகமாகப் பேசாமல், பேசுபவர்களை மட்டுமே கவனிப்பதால் இந்த மௌனம், அவர்கள் எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற எரிச்சல் உணர்வையே தரும்.
சிலர் உரையாடும்போது பேச்சை திசை திரும்புவார்கள். இதனால் அடுத்தவர்களுக்கு இவர்களது எண்ணங்கள் புரியாமலேயே போகும்.
மேலும் சிலர் தங்கள் உணர்வுகளை மன அழுத்தத்தால் வெளிக்காட்டாமல் இருப்பார்கள். இந்த நிலையற்ற தன்மையால் மற்றவர்களுக்கு இவரின் உள்நோக்கம் என்ன என்பது அனுமானிக்க முடியாமல் போகும்.
மற்றும் சிலர் நூல் பிடித்தாற்போல் அளவாக எதற்கும் பிடி கொடுக்காமல் அளந்ததுபோல் செயல்படுவார்கள். இந்த அளந்தது போன்ற செயல்பாட்டினால் அவரோடு பேசுபவர்களுக்கு தெளிவின்மை ஏற்படும்.
அதோடு, அவர்களை முழுவதுமாக புரிந்துகொள்ள இயலாமல் போகும். மற்றவர்கள் தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படுவோர்களைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
சிலர் உரையாடல்களின்போது அனாவசியமாக, குதர்க்கமாக பேசுவது மற்றும் வேண்டாத சமயத்தில் நகைச்சுவை கூறுவது போன்ற பழக்கம் மற்றவர்களை எரிச்சல் படுத்தும். இவர்களது உள்மனநிலையை புரிந்து கொள்ள இதுவே தடையாக இருக்கும்.
மேலும் சிலர் தங்களுக்கென்று சில எல்லைகள் வகுத்துக் கொள்வார்கள். அது மட்டுமின்றி, அவர்களுடைய உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொள்வார்கள். இதனால் அவர்கள் மற்றவர்களிடமிருந்து விலகியே நிற்பார்கள். இந்த விலகல் மற்றவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ள மிகவும் கடினமானவர் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தும்.