மண வாழ்க்கை வெற்றியடைய ஒரே மனநிலையுடன் பார்ட்னர் இருவரும் மனக் கசப்பேதுமின்றி மரியாதை கலந்த அன்போடு வீட்டின் பொது வேலைகளிலும், அவர்கள் இருவரின் தனிப்பட்ட விஷயங்களிலும் அக்கறை செலுத்தி வாழ்க்கையை தொடர்வது அவசியம். இவை எதுவுமின்றி வாழ்க்கை வேறு திசையில் பயணித்துக் கொண்டிருந்தால் இப்பதிவில் கூறப்பட்டிருக்கும் 9 அறிகுறிகள் மூலம் அதைக் கண்டு கொள்ளலாம்.
1. ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதில் குறையேற்படுவது: தொடர்ந்து ஒருவர் மீது மற்றவர் மரியாதையின்றியும் மற்றவரின் உணர்ச்சிகளைக் கண்டுகொள்ளாமலும் இருக்கும்போது அங்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை உருவாகும். அப்போது ஒருவருக்கு மற்றவர் மீதான மதிப்பும் அக்கறையும் குறைய ஆரம்பிக்கும். அதே சூழலில் உறவைத் தொடர்வதில் சிரமம் உண்டாகும்.
2. இருவரில் ஒருவர் தொடர்ந்து முயற்சிப்பது: உறவை பலப்படுத்த இருவரில் ஒருவர் தொடர்ந்து முயற்சிக்கும்போது மற்றவர் அதைக் கண்டுகொள்ளாதிருந்தால், கோபமும் மனக்கசப்பும் உண்டாக ஆரம்பிக்கும்.
3. இருவரிடையே உள்ள முக்கிய மதிப்புகளில் வேறுபாடு: பணியிட மதிப்பு, ஆன்மிக சிந்தனை மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றில் இருவருக்கிடையில் அதிக வித்தியாசம் இருக்கும்போது தொடர்ந்து இருவருக்குள்ளும் சண்டை, வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பிரச்னைகள் வளர்ந்துகொண்டே இருக்க வாய்ப்புண்டு. அதனால் அங்கு இணக்கமான சூழல் உருவாவது மிகக் கடிமான ஒன்று எனலாம்.
4. தனிப்பட்ட விருப்பங்களை ஊக்குவிக்காதிருத்தல்: ஒருவரின் ஆசைகள், பொழுதுபோக்குகள் மற்றும் தனிப்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றில் மற்றவர் ஆர்வம் காட்டாதிருக்கும்போது, தனது முழு ஈடுபாட்டையும் செலுத்தி வாழ்க்கையை முழுமையுற்றதாக ஆக்க வேண்டும் என்ற அவரின் எண்ணத்தில் தடை ஏற்பட்டு அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகப் போய்விடும்.
5. அடிக்கடி ஒருவர் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்து விவாதம் புரிவது: பல நேரங்களில் ஒருவர் எடுக்கும் முடிவை மற்றவர் ஏற்க மறுத்து விவாதம் புரிவது, உறவில் அன்பு, நிம்மதி, நம்பிக்கை ஆகியவை அற்றுப் போகவே உதவும்.
6. உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளாது அடக்கியே வைத்திருத்தல்: ஒருவர் தனது உள்ளுணர்ச்சிகளை துணையை மதித்து அவரிடம் பகிர்ந்து கொள்ளாதிருத்தல் இருவரிடையே இணைப்பு உருவாகச் செய்யாது. மாறாக பிரிந்திருப்பது போன்ற உணர்வையும் தனிமையையும் மட்டுமே தரும்.
7. நம்பிக்கையின்மை: ஒருவர் மற்றவர் மீது நம்பிக்கையின்றி அடிக்கடி சந்தேகப்படும்விதமாக நடந்துகொள்வது அன்னியோன்யத்தை வளர்க்க உதவாது. அந்த மாதிரியான சூழ்நிலையில் புரிதலோடு, ஒரு வலுவான, நீண்ட நாள் நிலைத்திருக்கக்கூடிய,உறவு முறையை உருவாக்குவது மிகவும் கடினம்.
8. அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகளை வைத்திருத்தல்: தனது துணையிடமிருந்து நிறைவேற்றித் தர முடியாத செயல்களை எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையும் எரிச்சலையுமே உண்டுபண்ணும். மேலும் உறவில் தேவையில்லாத விரிசலை உண்டுபண்ணவும் செய்யும்.
9. எதிர்காலத்தைப் பற்றின திட்டமிடல் இன்றி வாழ்வது: தம்பதிகள் இருவரும் ஒன்றாக அமர்ந்து, ஆலோசித்து எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடாமல் இருப்பது அவர்களிடையேயான உறவு நீண்ட நாள் நிலைத்திருக்க வாய்ப்பில்லை என்பதையே உணர்த்தும்.