கின்னஸ் உலக சாதனை படைத்த துப்பறியும் கதைகளின் ராணி!

ஜனவரி 12, அகதா கிறிஸ்டி நினைவு தினம்
Agatha Christie Memorial Day
Agatha Christie Memorial Day
Published on

ந்து வயதே நிரம்பிய அந்த சிறுமி, இரவு நேரங்களில் ஒரு முரட்டு மனிதனின் உருவத்தை கனவில் கண்டு வீறிட்டு அலறுவாள். இப்படி ஆரம்பத்தில் அலறிய அந்த சிறுமிதான் 70க்கும் மேற்பட்ட மயிர்க்கூச்சறியும் நாவல்களை எழுதி உலகையே அலற வைத்த நாவலாசிரியை அகதா கிறிஸ்டி, இங்கிலாந்து நாட்டில், 15 செப்டம்பர் 1890ல் பிறந்தார்.

பைபிள் மற்றும் ஷேக்ஸ்பியர் படைப்புகளின் விற்பனைக்குப் பிறகு 2 பில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டது அகதா கிறிஸ்டியின் புத்தகங்கள்தான். அவரது புத்தகங்கள் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. இது அவரை எல்லா காலத்திலும் அதிக மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களின் எழுத்தாளர் ஆக்கியது. தனது 84 ஆண்டு கால வாழ்க்கையில் 66 கிரைம் நாவல்கள், 6 மற்ற நாவல்கள் மற்றும் 150 சிறுகதைகளுடன் அவரது செழுமையான எழுத்து வாழ்க்கை 50 ஆண்டுகளாக நீடித்தது. அகதா கிறிஸ்டி முதன் முதலாக எழுதியது டிராம் தொல்லையைப் பற்றிய ஒரு கவிதை. அப்போது அவருக்கு வயது 11.

அகதா நர்ஸ் பயிற்சி பெற்று ஒரு மருத்துவமனையில் பணியாற்றினார். அப்போது, ‘விஷம்’ என்று குறிப்பிடப்பட்ட மருந்துகளை கையாளும்போது, ‘ஏன் இந்த விஷத்தை வைத்து ஒரு துப்பறியும் நாவல் எழுதக் கூடாது?’ என்று அவர் சிந்தித்து ஒரு கதையை எழுதினார். அதை ஒரு புத்தகமாக வெளியிட அனுப்ப, அது பிரசுரமாகி பரபரப்பாக விற்பனை ஆனது. தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். அகதா கிறிஸ்டி 45 வயதிற்கு மேல்தான் அதிகம் எழுதத் துவங்கினார். அவர் எழுதிய கதைகளுக்கு ஐடியாக்கள் பெரும்பாலும் அவர் பாத்திரங்கள் கழுவும்போது உதித்ததுதானாம். கிறிஸ்டியை அவருடைய தாய் அவரின் 8 வயது வரை எழுதப் படிக்க அனுமதிக்கவில்லையாம்.

இதையும் படியுங்கள்:
தில்லை அம்பலத்தான் நிகழ்த்திய திருவாதிரை திருவிளையாடல்!
Agatha Christie Memorial Day

அவரது இளமைக்காலத்தில் அவர் எழுதிய முதல் கதை, ‘தி ஹவுஸ் ஆஃப் பியூட்டி’, அவர் காய்ச்சலில் இருந்து மீண்டு படுக்கையில் இருந்தபோது அலுப்பைத் தடுக்க எழுதியது. அவர் தனது முதல் துப்பறியும் நாவலான ‘தி மிஸ்டீரியஸ் அஃபேர் அட் ஸ்டைல்களை’ தனது சகோதரி மேட்ஜுடன் பந்தயம் கட்டிய பிறகு எழுதினார். அந்த நாவல் வெளியிடப்படுவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆறு வெளியீட்டாளர்களால் அது நிராகரிக்கப்பட்டது.

அகதா கிறிஸ்டி 1926ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி தன்னுடைய 6வது நாவலை எழுதி முடித்தார். மறுநாள் அவரது காரும், அவருடைய சூவும் மட்டுமே அவரின் வீட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் கிடைத்தது. அவரைக் காணவில்லை. 1000 போலீஸார் மற்றும் 15,000 தன்னார்வலர்கள், சில விமானங்கள் இங்கிலாந்து முழுவதும் சல்லடை போட்டு தேடியும் அவர் கிடைக்கவில்லை. டிசம்பர் 14ம் தேதி சரியாக 10 நாட்கள் கழித்து திடீரென அவர் வீட்டிற்கு வந்தார். அந்த 10 நாட்களாக அவர் என்ன செய்தார்? எங்கே இருந்தார் என்பது இதுவரை யாருக்கும் தெரியாத மர்மமாகவே இருக்கிறது.

இரண்டாம் ராணி எலிசபெத்தின் பாட்டி ராணி மேரி தனது பிறந்த நாளில் ஒரு நாடகம் எழுத கிறிஸ்டியை கேட்டுக் கொண்டார். அது வானொலியில் ‘மூன்று குருட்டு எலிகள்’ என்ற பெயரில் நாடகமாக ஒலிபரப்பானது. அதிலிருந்து உருவானதுதான் உலகில் நீண்ட காலம் நாடகமாக நடத்தப்பட்ட ‘தி மவுசெட் டிராப்’ நாடகம். அகதா கிறிஸ்டி தனது வாழ்நாளில் 30 நாடகங்கள் எழுதியுள்ளார். கோவென்ட் கார்டனில் 2.4 மீட்டர் உயரம் மற்றும் புத்தக வடிவில் அகதா கிறிஸ்டி நினைவகம் உள்ளது. இது, ‘தி மவுஸ்ட்ராப்’பின் 60வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
புதுமணத் தம்பதிகளின் ஒற்றுமைக்கு அவசியமான 5 வழிகள்!
Agatha Christie Memorial Day

அகதா தனது நாவல்களில் ‘ஹெர்கூல் பாய்ரோ’ என்ற துப்பறியும் நிபுணரையும் தொடர்ந்து மற்றும் ஒரு துப்பறியும் கேரக்டர் மிஸ் மார்பிள்யை அறிமுகப்படுத்தினார். இந்த இரண்டு சமமான விரும்பப்படும் கதாபாத்திரங்களை உருவாக்கிய ஒரே குற்றவியல் எழுத்தாளர் அகதா கிறிஸ்டி மட்டும்தான். கிறிஸ்டியின் நாவலான ‘தி பேல் ஹார்ஸ்’ மற்றும் விஷம் பற்றிய தெளிவான விளக்கம் 1971ல் நிஜ வாழ்க்கைத் தொடர் கொலையாளி கிரஹாம் யங்கை கைது செய்ய உதவியது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸின்போது ஒரு நாவலை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார் அகதா. கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்மஸ் ஒரு கிறிஸ்டி நாவல் என்பது வழக்கமாகி விட்டது. அகதா கிறிஸ்டியின் இலக்கியப் பணியைப் பாராட்டி எலிசபெத் மகாராணி 1971ம் ஆண்டு ‘டேம் கமாண்டர்’ என்ற சிறப்பு விருது அளித்து கெளரவித்தார். முழுமையான மிஸ் மார்பிள் கதைகளின் ஒரு தொகுதி பதிப்பு 4,032 பக்கங்களில் உலகின் தடிமனான புத்தகத்திற்கான கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுள்ளது. அகதா கிறிஸ்டி 12 ஜனவரி 1976ல் தனது 85ம் வயதில் மூப்பின் காரணமாக தனது வீட்டிலேயே காலமானார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com