வயதாக வயதாக இரவில் தூக்கம் குறையும். திடீர் திடீரென படுக்கையிலிருந்து எழுந்துகொள்வார்கள். அதனைத் தவிர்க்க சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இதை சரி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
வயதானவர்கள் இரவில் தூங்கச்செல்லும் முன் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக எந்த திரவ உணவுகளையும் எடுக்காதீர்கள். தண்ணீர் குடிக்காதீர்கள். தூங்கச்செல்லும் முன் உங்கள் சிறுநீர் பையை காலி செய்துவிட்டுத் தூங்குங்கள்.
முதியவர்கள் பகலில் அதிக நேரம் வெளிச்சத்தில் இருந்தால் அவர்களின் உடலில் தூங்க வைக்க உதவும், ‘மெலடோனின்’ அதிகம் சுரக்கும். பொதுவாக, முதியவர்களுக்கு இரவில், ‘மெலடோனின்’ சுரப்பது குறையும். அதை இது சரி செய்யும் என்கிறார்கள். பகலில் 20 முதல் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குங்கள்.
தூங்கச்செல்லும் முன் உங்களையும், உங்கள் உடலையும் ரிலாக்ஸாக வைத்திருக்க முயலுங்கள். இதமான வெந்நீரில் ஷவரில் குளிக்கலாம். யோகா செய்யலாம். இரவில் ஆழ்ந்த தூக்கம் வர மாலை 4 மணி முதல் 7 மணிக்குள் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள். 20 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம் அல்லது தோட்டத்தில் வேலை செய்யலாம்.
உங்கள் படுக்கை அறையை இதமான சூட்டில், இதமான சூழ்நிலையில் வெளிச்சம் இல்லாத அளவுக்கு ஒரு குகையைப் போன்ற சூழலில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் இரவு தூக்கத்தைக் கெடுப்பது 15 சதவீதம் நீங்கள் பயன்படுத்தும் செல்போன், லேப்டாப் போன்றவைதான். அவற்றை உங்கள் படுக்கையிலிருந்து தள்ளி வையுங்கள்.
நள்ளிரவில் எழும் வாய்ப்பு ஏற்பட்டால் சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து விடாதீர்கள். அப்படி சட்டென்று படுக்கையிலிருந்து எழும்போது மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவாக இருக்கும். சில நேரங்களில் இருக்காது. இதனால் இதய செயலிழப்பு ஏற்பட்டு மயக்கமுற்று கீழே விழுந்து விடலாம். இதனைத் தவிர்க்க நீங்கள் எழுந்ததும் ஒன்றரை நிமிடங்கள் படுக்கையில் இருங்கள். அடுத்து படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்கள் கால்களை இறக்கி படுக்கையின் விளிம்பில் உட்கார்ந்து கொள்ளுங்கள். இப்படி நிதானமாகச் செய்தால், மூளைக்கு இரத்த ஓட்டம் சரியாகிவிடும். படுக்கையிலிருந்து எழும்போது எப்போதும் இதை கடைபிடியுங்கள்.
தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச்செல்லுங்கள். முதுமையில் பெருபாலானோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்னைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. முதியவர்களுக்கு 5 மணி நேரம் தூக்கம் கூட போதுமானதுதான். ஆனால், அந்த 5 மணி நேரம் எந்த தொந்தரவுமின்றி ஆழ்ந்து தூங்குவது அவசியம். தூக்கம் குறைவாக இருக்கும்போதுதான் உடலும், மனமும் பாதிக்கப்படுகிறது.