கட்டுக்கோப்பான உடல் வேண்டுமா? இதைச் செய்தாலே போதும்!

கட்டுக்கோப்பான உடல் வேண்டுமா? இதைச் செய்தாலே போதும்!

‘ஆரோக்கியமான உணவு, மகிழ்ச்சியான மனநிலை - இருந்தும் உடல் மட்டும் கட்டுக்கோப்பாக இல்லையே’ என்று கவலைப்படுபவர்கள் நிறைய பேர் உண்டு. காரணம், தொப்பையும் உடல் பருமனும்தான். ‘வீட்டு வேலைகளும் அலுவலக வேலைகளும் பிள்ளைகளை வளர்ப்பதுமே நேரத்தை எடுத்துக்கொள்ளும்போது உடலை கவனிக்க எங்கே நேரம் இருக்கு’ என்பவரா நீங்கள்? ஜிம்முக்கு போகாமலேயே உடல்கட்டுக்கோப்பாக இருக்க என்னதான் செய்ய வேண்டும்? இதோ உங்களுக்காகவே சில எளிய டிப்ஸ்.

1. அதிகாலை 5 - 5.30 மணிக்கு எழுந்து விடுதல். இதனால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். ஆரம்பத்தில் சோம்பலாக இருக்கும். பழகி விட்டால் தானாகவே எழுந்து விடுவீர்கள். முக்கியமான விஷயம், இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கப் போவது அவசியம்.

2. காலை எழுந்து பல் துலக்கியதும் மூன்று டம்ளர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். இரவு முழுவதும் செயலற்று இருந்த உடலுக்கு நீர்ச்சத்து கிடைத்ததும் எனர்ஜி வரும்.

3. அரை மணி நேரமாவது வியர்வை வரும்படி (வராவிட்டாலும் பரவாயில்லை) முடிந்த உடற்பயிற்சி செய்தல். உடலை வருத்தும் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் மிதமான நடைப்பயிற்சியையாவது செய்யலாமே. இதனால் உடல் பலம் பெறும்.

5. கூடுமானவரை குளிர்ந்த நீரில்  குளித்தால் உடல் வெப்பம் குறைந்து, லேசான உணர்வை பெறலாம். குளிர்ந்த நீர் மன வலிமையையும் உற்சாகத்தையும் உடனே தரும்.

6. எந்த மதமாயினும் இறை நம்பிக்கை அவசியம் தேவை. நாள்தோறும் ஒரு பத்து நிமிடமாவது ஆண்டவனுடன் ஒன்றிப்போவது நமது கவலைகளை எல்லாம் இறக்கி புத்துயிர் ஊட்டும். நம்பிக்கை மனதில் மட்டுமல்ல, உடலுக்கும் தெம்பு தரும்.

7. முறையான‌, அளவான உணவுப் பழக்கம் மற்றும் தேவையான தண்ணீர் அருந்துதல் அவசியம். நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

8. நமது பாரம்பரிய உணவு முறைகளைக் கூடுமானவரை கடைப்பிடித்தல் உடலுக்கு நலம் தரும். துரித உணவுகள் மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை இயன்றவரை தவிர்த்தல் நல்லது.

9. எவ்வளவு வேலைகள் இருந்தாலும் மனதை உற்சாகப்படுத்தும் பாடல்களைக் கேட்பதுடன், முடிந்தால் ஒரு ஆட்டமும் போட்டால் ஆனந்தத்துடன் நலமும் பெறலாம்.

10. உங்களுக்குத் தோட்ட வேலை செய்யப் பிடிக்கும் என்றால் அதைச் செய்து பாருங்கள். குனிந்து செடிகளோடு பேசிப்பாருங்கள். மனம் எவ்வளவு உற்சாகமாகிறது என்பதை உணர்வீர்கள்.

இதுபோல் உங்களுக்கு ஈடுபாடுள்ள ஏதோவொரு விஷயத்தில் கவனத்தைச் செலுத்துதலினால் முதல் நாள் கவலைகள் மறந்து, மனம் இலகுவாக மாறத் தொடங்கும். மனம் லேசாக மாறியதை உணர்ந்தாலே உடலும் ஊக்கத்துடன் வேலை செய்யத் தொடங்கும். ஊக்கத்துடன் வேலை செய்யும் உடல் எத்தனை வயதானாலும் கட்டுக்கோப்பாகத் திகழும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com