
வாடகை வீட்டில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, சொந்த வீட்டில் வாழ்பவர்களாக இருந்தாலும் சரி... எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு பொதுவான கவலை, மின்சார கட்டணம். குறிப்பாக, வெயில் காலத்தில் ஏ.சி.யை அதிகமாக பயன்படுத்துவதினால் வழக்கமான மின் கட்டணத்தை விட, இருமடங்கு உயரவும் வாய்ப்பு இருக்கிறது.
வெயில் காலத்தில் மின் கட்டணம் அதிகமாக வருவது இயல்புதான். ஆனால் இயல்பாகவே உங்களுக்கு மின் கட்டணம் அதிகமாக இருப்பது போல உணர்ந்தால், கீழே குறிப்பிடப்படும் காரணங்களை அலசி ஆராயுங்கள், மின்கட்டணத்தை குறைத்துவிடலாம்.
பழைய மின்சாதன பொருட்கள் :
மின்சார பயன்பாட்டை உயர்த்தி மின்கட்டணத்தை உயர்த்தும் காரணிகளில் மிக முக்கியமானது, பழைய மின்சாதன பொருட்கள். 10 வருடத்திற்கு முந்தைய மின்சாதன பொருட்களை நீங்கள் இப்போது உபயோகித்து வந்தால், மற்றவர்களை விட உங்களுக்கு கூடுதலான மின் கட்டணம் வருவது இயல்புதான்.
ஏனெனில் கடந்த 4 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட அனைத்து மின்சாதன பொருட்களிலும், மின்சார பயன்பாட்டை குறைக்கும் நவீன வசதிகள் நிறைய நிறைந்திருக்கின்றன. அதனுடன் ஒப்பிடுகையில், பழைய மின்சாதன பொருட்கள் கூடுதலான மின்சார யூனிட்களை எடுத்துக்கொள்ளும்.
பழைய சாதனங்கள் குறைந்த ஆற்றல் திறன் கொண்டவை, அதாவது புதிய மாடல்களைப் போலவே அதே பணிகளைச் செய்ய அவை அதிக மின்சாரத்தை பயன்படுத்துகின்றன. அதாவது சாதனங்கள் பழையதாகும்போது, அவற்றின் செயல்திறன் குறைகிறது. அவை இயங்க அதிக ஆற்றல் தேவைப்படலாம், இதனால் அதிக மின்சார பயன்பாடு ஏற்படும். இந்த அதிகரித்த ஆற்றல் நுகர்வு நேரடியாக உங்கள் மின்சாரக் கட்டணத்தில் அதிக செலவை ஏற்படுத்துகிறது. பழைய சாதனங்கள் புதிய மாடல்களைப் போல பயனுள்ளதாக இருக்காது, இது நீண்ட இயக்க நேரங்களுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி பழைய சாதனங்கள் செயலிழப்புகளை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது, இது ஆற்றல் செயல்திறனையும் பாதிக்கும் மற்றும் மின்சார பயன்பாட்டை அதிகரிக்கக்கூடும்.
பராமரிப்பு இல்லாத ஏ.சி.
ஏ.சி. பயன்பாடு மின்கட்டணத்தை அதிகப்படுத்தும் என்ற பொதுவான கருத்தில் உண்மை இல்லை. ஏனெனில் இப்போது தயாரிக்கப்படும் ஏ.சி.க்கள், மிக குறைந்த மின்சாரத்திலேயே இயங்கும் வகையில் நவீனமாகிவிட்டன. ஆனால் அத்தகைய ஏ.சி.க்களை நிச்சயம் 6 மாதத்திற்கு ஒருமுறையாவது முறையாக பராமரிக்கவேண்டும்.
அதாவது, ஏ.சி. ஏர் பில்டர்களை சுத்தப்படுத்துவது, இன்டோர் யூனிட்டை ஸ்பிரே மூலம் சுத்தமாக்குவது, குளிர்ந்த காற்று வெளிவரும் ஏர் புளோயர் பகுதியில் சேர்ந்திருக்கும் தூசியை சுத்தமாக்குவது... என 6 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், ஏ.சி.யை தூசு அடைத்துக்கொண்டு, அறை குளிர்ச்சியை தாமதப்படுத்தும். வழக்கத்தை விட கம்ப்ரசர் கூடுதல் நேரம் இயங்கி, மின்சார பயன்பாட்டை இரு மடங்காக்கி விடும். அதனால் மின்கட்டணம் இருமடங்காகவும் வாய்ப்பு இருக்கிறது.
மின்சாதன பயன்பாடு
மிக்ஸி வாங்கி அதில் மாவு அரைப்பது, கேஸ் அடுப்பு இருந்தும் மின்சார அடுப்பில் சமைப்பது, சின்ன சின்ன வேலைகளுக்காக ஓவன் மற்றும் டோஸ்டர்களை அடிக்கடி பயன்படுத்துவது போன்றவையும் கூடுதல் மின் கட்டணத்திற்கு ஒரு காரணமாக அமையலாம். முடிந்தவரை, என்ன தேவையோ அதை பூர்த்தி செய்வதற்கான மின் சாதன பொருட்களை மட்டும் வாங்கி பழகுங்கள்.
பிற வழிமுறைகள்
மின்சாரக் கட்டணத்தை குறைக்க, எல்.ஈ.டி பல்புகளைப் பயன்படுத்தவும், மின்விசிறிகளை தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தவும், ஏசி தெர்மோஸ்டாட்டை சரிசெய்வதும், ஃபிரிட்ஜை அடிக்கடி திறக்காமல் இருக்கவும், வாஷிங் மெஷினை முழு லோடு வந்த பிறகு பயன்படுத்தவும். சோலார் பேனலை பயன்படுத்துவது, மின்சார பயன்பாட்டை குறைக்க உதவும். மின்சாதனங்களை முறையாக பராமரிப்பது, அவை அதிக மின்சாரத்தை பயன்படுத்தாமல் இருக்க உதவும். மின்சாதனங்களை ஆன் செய்யாமல் இருக்கும் போது, பிளக்கிலிருந்து அவிழ்த்து விடுவது மின்சாரத்தை மிச்சப்படுத்தும்.