
வெப்பமான சீதோஷ்ண பகுதியில் வசிக்கும் நாம் அனைவரும் தினசரி குளிப்பதை ஒரு அவசியக் கடமையாகவே வைத்திருக்கிறோம். அந்தக் காலத்தில் பலரும் ஆறு, குளம், கிணறு போன்ற நீர் நிலைகளில்தான் குளித்தனர். ஆனால், இன்று அனைவரும் குளிப்பது என்பது பைப், பாத் டப் என்று மாறி விட்டது. உடல் அழுக்கு போக குளிக்க சோப் உபயோகிப்பதைப் போலவே ஸ்க்ரப், லிக்விட் என பல விதங்களில் உடலை சுத்தம் செய்துகொள்ள பொருட்கள் வந்துவிட்டன.
தற்போது பலரும் லூஃபா ஸ்பாஞ்ச் கொண்டு குளிப்பதை தினசரி வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அக்காலத்தில் உலர்ந்த பீர்க்கங்காய் கூடுகளைக் கொண்டு சருமத்தை தேய்த்துக் குளித்து வந்தனர். இதனால் இயற்கையான முறையில் சருமத்தின் இறந்த செல்களை நீக்க அது உதவியது. அதோடு, உடல் அழுக்குகள் நீங்கி ஆரோக்கியம் தந்தது.
தற்போது மெல்லிய சிந்தடிக் இழைகளால் ஆன லூஃபா எனப்படும் ஸ்பாஞ்ச் கொண்டு குளிப்பதைப் பலரும் விரும்புகின்றனர். இந்த ஸ்பாஞ்ச் கொண்டு நுரை வர குளிக்கலாம். அதோடு, இதை பலமுறை பயன்படுத்தலாம். பாடி வாஷ் கொண்டு குளித்து வர, உடல் பளபளப்பையும், புத்துணர்வை தருவதாகவும் உணர்கின்றனர்.
பல்வேறு நிறங்களிலும், வெவ்வேறு வாசனைகள் கொண்டதாகவும் லூஃபாக்கள் தற்போது கிடைக்கின்றன. இது பல ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக இருந்தாலும் இந்த லூஃபாக்கள் சுத்தமாக பராமரிக்கவில்லை என்றால் பூஞ்சை தொற்றைக் கொடுத்து விடும். ஈரமான குளியலறையில் நன்றாக பராமரிக்காத லூஃபா ஸ்பாஞ்ச்கள் உடலுக்கு நோய் தொற்று மற்றும் அரிப்பைத் தருகிறது.
உலர்ந்த ஸ்பாஞ்ச்கள் கொண்டு குளிக்கும்போதுதான் சுத்தமாக இருக்கும். மேலும், இந்த ஸ்பாஞ்ச் கொண்டு அழுத்தித் தேய்த்துக் குளித்து வர சருமத்தில் சிராய்ப்பு, சிவத்தல், தடித்தல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுத்து விடும். ஆகவே, லூஃபா ஸ்பாஞ்ச் கொண்டு குளிக்கும்போது கவனமாக, மென்மையாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும்.
சருமத்தில் எரிச்சல் இருந்தால் ஸ்பாஞ்ச் உபயோகிப்பதைத் தவிர்த்து விடலாம். இரத்த ஓட்டத்தை அதிகரித்து குளியலை சுகமாக்கும் என்று லூஃபா ஸ்பாஞ்ச் குளியலை சொல்லலாம். முறையாகப் பயன்படுத்தி ஆரோக்கியமாக அதைப் பராமரிக்க இந்த ஸ்பாஞ்ச் குளியல் தூய்மையோடு, புத்துணர்வையும் தரும் என்பதை மறுப்பதற்கில்லை.