
மேன்ஷன் என்றால் மாளிகை, பெரிய வீடு என்று பொருள். இவை பொதுவாக பெரிய அளவில் பிரம்மாண்டமாகக் காணப்படும். ஸ்கை மேன்ஷன்(sky mansion) என்பது வெறும் வீடு மட்டுமல்ல, அது ஆடம்பரம், பிரத்தியேகத் தன்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகும். ஸ்கை மேன்ஷன் என்பது ஆடம்பரமான மற்றும் பெரிய குடியிருப்புக்கான ஒரு சொல்லாகும். ஸ்கை என்பது அந்தக் கட்டடம் மிக உயரமானதாக, வானத்தை முட்டும் அளவுக்கு உயர்ந்து நிற்பதை குறிக்கும். இது பெரும்பாலும் பென்ட்ஹவுஸ் அல்லது ஒரு வானளாவிய கட்டடத்தின் மேல் கட்டப்பட்ட ஒரு பரந்த வீடு ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் ஹெலிபேடுகள் அல்லது தனியார் லிஃப்ட் போன்ற பிரத்தியேகமான வசதிகளையும் கொண்டிருக்கும். பரந்த நகரக் காட்சிகள் மற்றும் உயர்மட்ட வசதிகளுடன் உயர்ந்த வாழ்க்கை அனுபவங்களை வழங்கும் இடமிது.
ஸ்கை மேன்ஷனின் முக்கிய பண்புகள்:
1. உயரமான அமைவிடம்: ஸ்கை மேன்ஷன்கள் பொதுவாக உயரமான கட்டடங்களில், நகரின் மேல் மட்டங்களில் அமைந்து வானளாவிய காட்சிகளை வழங்குகின்றன. இது பொதுவாக ஒரு பென்ட் ஹவுஸாகும். இது மேல் தளத்தையோ அல்லது ஒரு உயரமான கட்டடத்தின் முழுமையான மேல் பகுதியையோ ஆக்கிரமித்திருக்கும். சில நூறு மீட்டருக்கும் அதிகமான உயரமான கட்டடங்களைக் கொண்டுள்ளன.
2. அளவுகோல்: ஸ்கை மேன்ஷன் எனப்படும் வான மாளிகை அதன் பெரிய அளவால் வகைப்படுத்தப்படுகிறது. இவை பெரும்பாலும் ஆயிரக்கணக்கான சதுர அடிகளை உள்ளடக்கியதாக இருக்கும். சிறந்த வடிவமைப்பைக் கொண்ட சமையலறைகள், நேர்த்தியான டெக் இடங்கள் மற்றும் பெரிய பால்கனிகள் போன்ற அம்சங்கள் இதில் உண்டு. ஒரு தளத்திற்கு இரண்டு மாளிகைகள் போன்ற வடிவமைப்புகள் பிரத்தியேகத்தையும் தனிப்பட்ட வாழ்விற்கும் வழி வகுக்கின்றது.
3. ஆடம்பரமான வசதிகள்: இந்த குடியிருப்புகள் பெரிய அளவில் நீச்சல் குளங்கள், பசுமையான தோட்டங்கள், 360 டிகிரி பார்க்கும் தளங்கள், தனியார் லிஃப்ட் மற்றும் ஹெலிபேடுகள் போன்ற உயர்நிலை வசதிகளுடன் காணப்படும். ஒவ்வொரு ஸ்கை மேன்ஷனுக்கும் தனிப்பட்ட லிஃப்ட் வசதி இருக்கும். இது நேரடியாக வீட்டிற்குள் அழைத்துச் செல்லும். இவை அனைத்தும் நேர்த்தியான வடிவமைப்புடன், உயர்தரமான மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும்.
4. சுற்றுப்புற காட்சிகள்: இந்த வானளாவிய வான மாளிகை சுற்றியுள்ள நகரம் அல்லது நிலப்பரப்பின் ஒப்பற்ற மற்றும் தடையற்ற 360 டிகிரி காட்சிகளை வழங்குகின்றன. பெரும்பாலான ஸ்கை மேன்ஷன்கள் தடையற்ற நகர அல்லது கடல் காட்சிகளை வழங்கும் வகையில் அமைந்திருக்கும். அழகாக அலங்கரிக்கப்பட்ட திறந்தவெளிகள் போன்ற அம்சங்கள் நிறைந்து நகர்ப்புற சோலையாக நகர்ப்புறத்தின் மத்தியில் இவை உருவாக்கப்படுகின்றன.
5. பிரத்தியேக கிளப் ஹவுஸ்கள்: ஸ்கை மேன்ஷன்களில் உலகத்தரம் வாய்ந்த வசதிகள், உயர்தர குவாலிட்டி கிளப் ஹவுஸ்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற சமூக வசதிகளை நவீன மற்றும் ஆடம்பரமான அம்சங்களை வழங்குகின்றன.
6. பிரத்யேகத்தன்மை: இவை தனித்துவமான கட்டடக்கலை மற்றும் வடிவமைப்புடன் செழுமையை மறுவரையறை செய்யும் வகையில் மிக நேர்த்தியுடன் உருவாக்கப்படுகின்றன. வான மாளிகைகள் ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகின்றன. இவை பெரும்பாலும் பாரம்பரிய மாளிகைகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில், ஆனால் குறிப்பிடத்தக்க உயரத்தில் பிரத்தியேக வாழ்க்கை அனுபவத்தை வழங்குகின்றன. இவை சொகுசு, கலைநயம் மற்றும் சௌகரியமான வாழ்க்கை அனுபவத்தின் உச்சக்கட்டத்தை வழங்குகின்றன.
விஜய் மல்லையாவின் ஸ்கை மேன்ஷன் பெங்களூரில் அமைந்துள்ள கிங்ஃபிஷர் டவர்ஸ் வானளாவிய கட்டடத்தின் மேல் கட்டப்பட்ட 40,000 சதுர அடி, இரண்டு மாடி வீடு என்ற ஸ்கை மேன்ஷனின் சிறந்த மற்றும் பிரபலமான எடுத்துக்காட்டாகும். அதேபோல் டெல்லியில் உள்ள ஒரு சொகுசு குடியிருப்பு திட்டம், அதன் மேல் தளங்களில் டிரிப்ளெக்ஸ் பென்ட் ஹவுஸ்களை உள்ளடக்கியுள்ளது.