
பிறந்தவை அனைத்தும் நீண்ட நாள் வாழ விரும்புவது இயற்கையே! அதிலும் மனிதர்களாகிய நாம் நீண்ட நாள் வாழ விரும்புகிறோம். ஆனால், அப்படி வாழ்வதற்கு வேண்டிய உபாயங்களை ஒழுங்காகச் செய்கிறோமா என்று கேட்டால், முழுமையாக, ‘ஆம்’ என்றோ, மொத்தமாக. ‘இல்லை’ என்றோ சொல்லிவிட முடியாது! வாழ்க்கையை ஓட்ட நாயாய் அலைபவர்களும், வாழ்நாளை நீட்ட நாயுடன் ‘வாக்’ போகின்றவர்களும் உண்டு.
‘உடலை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே!’ என்பது முதுமொழி. ’சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்!’ என்பதும் நமது முன்னோர்கள் சொல்லி வைத்ததுதான். அதன் அடிப்படையில்தான் உயிரை நீண்ட நாட்கள் தக்கவைத்துக்கொள்ள உடம்பைப் பேண வேண்டியிருக்கிறது. அவ்வாறு பேணக் கைகொடுப்பது உடற்பயிற்சிகளே. அந்த உடற்பயிற்சிகளில் எல்லா வயதினருக்கும் ஏற்றதும், எளிதானதும் நடைப்பயிற்சியே. யோகாசனப் பயிற்சிகளும், மனப் பயிற்சிகளும் இன்னும் பிறவும் இருந்தாலும், எல்லாமும் உடலை மையமாக வைத்தே! சலனம் இருக்கும் வரையே சந்தோஷம். உடலை ஆக்டிவாகவும், உள்ளத்தை உற்சாகமாகவும் வைத்துக்கொள்பவர்களை நோய்கள் மட்டுமல்ல, முதுமை கூடத் தீண்டுவதில்லை.
சுற்றுலா ஆசையும் ஆய்வு நோக்கமும் கொண்ட நமது இந்தியக் குழுவினர், ஜப்பானின் ஒரு சிறிய தீவுக்குச் சென்று, அங்குள்ளவர்களைப் பேட்டி கண்டதைச் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. பத்துப் பதினைந்து பேர் கொண்ட ஜப்பானியர்களில் மிகவும் இளையவரின் வயதே 89. ஆம்! 104 வயதுப் பாட்டி சாரி, பெண்மணிக்கு அன்று பிறந்த நாளாம். நீண்ட நாள் வாழ்வதற்கான காரணங்களாக அவர்கள் கூறியவற்றுள் முக்கியமானவையாக, வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வேலையை விருப்பமுடன் செய்தல்; எல்லா வீடுகளிலுமே காய்கறித் தோட்டம் அமைத்து அதில் அன்றாடம் உழைத்தல்; சொந்த காய்கறிகளை மட்டுமே அன்றாடம் சமைத்து உண்ணல்; ஊரின் வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் செயல்படல்; கலாசாரம், பண்பாட்டைப் பாதுகாப்பதில் ஈடுபடல் மற்றும் அவரவர்க்கு ஏற்ற, விருப்பமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளல்.
நமது வாழ்க்கை முறையோ வித்தியாசமானது. நன்கு படித்துப் பொறுப்பான பதவி வகிப்பவர்களில் பெரும்பாலானோர், பணி ஓய்வு பெற்றதுமே வாழ்க்கை முடிந்து விட்டதாகப் புலம்ப ஆரம்பித்து விடுகின்றனர். 60 வயதைத் தாண்டியவர்களுக்குச் சிறு ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டால்கூட, ‘அவ்வளவுதான் வாழ்வு’ என்ற மைன்ட் செட்டுக்கு வந்து விடுகிறார்கள். பொருளாதார நிறைவு பெற்ற சில குடும்பங்களில், நன்றாகவே ஓடியாடும் நிலையில் உள்ள பெரியவர்களை வீட்டிலேயே அடைத்து வைத்து, நோயாளிகள் ஆக்கும் நிலையும் சமுதாயத்தில் காணப்படுகிறது. இப்படிப் பலவற்றை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சரி, இனி செய்ய வேண்டியதைப் பார்ப்போம்.
‘வலுவுள்ளவையே வாழும்’ (Survival of the Fittest) என்பதே உலக நியதி. உடலையும் மனதையும் இளமையுடன் வைத்திருக்க, எல்லோருக்கும் உதவுவது நடைப்பயிற்சியே. நமது இரண்டு கெண்டைக் கால்களிலும், மேலும் இரண்டு இதயங்கள் செயல்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவ்விதயங்கள் உறுதியானால் மார்பக இதயம் மிக நன்றாகச் செயலாற்றி நம் ஆயுளைக் கூட்டுமாம். டாக்டர்கள் சொல்வது மாதிரி 45 நிமிடங்கள் நடக்க முடியாதேன்னு வருத்தப்படறீங்களா? அந்த வருத்தத்தை மூட்டை கட்டி குப்பையில போடுங்க! உங்களால எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் நடந்தா போதும். அதுக்கான பலன் நிச்சயமா உண்டு.
எப்படி செய்யற தர்மத்துக்குத் தகுந்த மாதிரி புண்ணியம் சேருமோ, அது மாதிரிதான் இதுவும்! ஒரு நிமிடம் நடந்தா ரத்த ஓட்டம் அதிகரிக்கும்; 5 நமிடங்கள் நடந்தா நல்ல மூடு வந்திடும்; 10 நிமிடங்கள் நடந்தா தேவையற்ற ஹார்மோன்களின் சுரப்பு குறையும்; 15 நிமிட நடையில் ரத்தச் சர்க்கரை அளவு குறையும்; 30 நிமிடங்கள் தொடர்ந்து நடக்கையில் கொழுப்பு எரிக்கப்படுவது ஆரம்பமாகும்; எடை குறையும்; 45 நிமிடங்கள் நடக்கும்போது தேவையற்ற சிந்தனைகள் குறைந்து, உடலும்,மனமும் அமைதியாகும்!