
அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது பணம், புகழ், அந்தஸ்து போன்றவற்றைப் பெற்று வாழ்வது அல்ல. பெரும்பான்மையான மக்களும் இந்த மூன்றையும் தேடித்தான் தினம் தினம் ஓடுகிறார்கள். அவைதான் வாழ்க்கையின் லட்சியங்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் அர்த்தமுள்ள வாழ்க்கை என்பது பணமோ, புகழோ, பதவியோ அல்ல. பெரிய கார், வீடு, பதவி போன்றவற்றை அளவுகோலாக வைத்து பணக்காரர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் போன்றவர்களை மதித்தும் மரியாதை செய்தும் வருகிறார்கள். வெளிப்புற சாதனைகளால் வெற்றியை அளவிடுகிறார்கள்.
ஆனால், உண்மையில் மனநிறைவு என்பது இவற்றால் வருவது அல்ல. யார் உண்மையான மனதிற்கு சொந்தக்காரர்களோ, பிறரிடம் பணிவையும் இரக்கத்தையும் காட்டுகிறவர்களோ அவர்கள்தான் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறார்கள். பிறருடைய மனதில் இடம்பிடித்து அவர்கள் வாழ்க்கையில் ஒரு நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கி, மாறுதலைக் கொண்டு வரும் மனிதர்கள்தான் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள்.
சமூகம் பெரும்பாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை நிதி, வெற்றி மற்றும் அங்கீகாரத்துடன் ஒப்பிடுகிறது. அதிக சம்பளம் பெறும் பெரிய வேலையில் இருப்பவர்கள், செலிபிரிட்டிகள் போன்றவர்களை பின்தொடர நாம் கற்பிக்கப்படுகிறோம். ஒரு மனிதனின் அர்த்தமுள்ள இருப்பு என்பது நிரம்பி வழியும் வங்கிக் கணக்கிலோ அல்லது திரைப்பட நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் கொண்டிருக்கும் ரசிகர் பட்டாளத்திலோ இல்லை.
சாதாரண மனிதர்கள் அனைவருமே தம்மால் இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்யலாம். அதற்கு நிறைய பணம் செலவழிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உடலால் உதவி செய்யலாம். வார்த்தைகளால் ஆறுதல் படுத்தலாம். புன்னகையால் அவர்கள் மனதை மகிழ்விக்கலாம். ஆலோசனை தேவைப்படுபவர்களுக்கு அதை வழங்கலாம். அக்கறையுடன் செயல்படும்போது பிறருடைய வாழ்க்கையில் ஒரு சிறிய முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம்.
உண்மையாக இருப்பது என்பது தனது குறைபாடுகளுடன் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதுதான். தேவையில்லாத முகமூடிகளை அணிந்து கொண்டு பொய்யாக வேஷம் போடத் தேவையில்லை. உண்மையான இயல்புடன் பழகும்போதுதான் நல்ல உறவுகளையும் நண்பர்களையும் பெற முடியும். ஒருவரின் நம்பகத்தன்மையால் மக்கள் ஈர்க்கப்படுகிறார்கள். இதனுடன் கைகோர்த்து வருவதே பணிவு.
பணிவு என்பது தன்னைப் பற்றி குறைவாக நினைப்பது அல்ல, அமைதியான தன்னம்பிக்கைதான் பணிவு எனப்படுகிறது. பிறரிடம் காணப்படும் சிறப்பான நல்ல விஷயங்களை மனமார பாராட்டி அங்கீகரித்தல், தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளுதல், தான் மட்டும்தான் சிறந்தவர், தான் சொல்வதுதான் சரி என்கிற ஈகோ இல்லாமல் இருத்தல் போன்றவை பணிவின் அடையாளங்கள். பணிவான நபர்கள் தன்னை மட்டுமே நிரூபிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். பிறரை மனம் திறந்து பாராட்டுவார்கள். சேவை செய்ய ஆர்வமாக இருப்பார்கள். உண்மையான பெரிய மனிதர்கள் பணிவு என்கிற ஒன்றை எப்போதும் கைவிடுவதே இல்லை.