
இன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட வயதை எட்டிய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்குச் சமூகத்திடமிருந்தும், குடும்பத்தினரிடமிருந்தும் அடிக்கடி ஒரு “கல்யாணம் எப்போ?” கேள்வி வந்துகொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபடவும், தங்கள் தனிப்பட்ட இலக்குகளை அடைவதிலும் கவனம் செலுத்தவும் பலர் திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள்.
பட்டம் பெறுவது, உயர்கல்வி படிப்பது, சொந்தத் தொழில் தொடங்குவது, நல்ல வேலையில் சேர்ந்து நிலைத்து நிற்பது போன்ற தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளை எட்டுவதிலேயே இன்றைய இளைஞர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள். திருமணம் தங்கள் முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக அமைந்துவிடுமோ என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதனால், திருமண வயதாகியும் அதைத் தள்ளிப் போடும் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால், சமூகமும், உற்றார் உறவினர்களும் "காலாகாலத்தில கல்யாணம் பண்ணா தான் சரி", "வயசானா துணை கிடைப்பது கடினம்" எனத் தொடர்ந்து வற்புறுத்துவது பலருக்குப் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இந்தச் சமூக அழுத்தம் இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல, இது உலகளாவிய பிரச்சனை. குறிப்பாக சீனா போன்ற நாடுகளிலும் இது அதிகமாக உள்ளது. இந்தச் சூழலைச் சமாளிப்பதற்காக, சீன இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய நடைமுறை உருவாகி வருகிறது. அதுதான் 'நட்புத் திருமணம்' (Friendship Marriage). இந்தப் புதிய திருமண ஏற்பாட்டில், ஒரு ஆணும் பெண்ணும் பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் சட்டப்படி திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், அவர்கள் கணவன்-மனைவி போல ஒன்றாக வாழ்வதில்லை. படுக்கையறையைப் பகிர்ந்து கொள்வதில்லை, தாம்பத்திய உறவும் கிடையாது.
சட்டம் மற்றும் இரு குடும்பங்களும் இந்தத் திருமணத்தை அங்கீகரித்தாலும், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை மாறாது. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்தது போல் சுதந்திரமாக வாழலாம், தனிப்பட்ட ஆர்வங்களைத் தொடரலாம். இந்தத் திருமணத்திற்கு வெளியேயும் மற்றவர்களுடன் டேட்டிங் செல்வதற்குத் தடையில்லை. வழக்கமான திருமண வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகள் அல்லது துணையுடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இதில் இல்லை என இதைத் தேர்ந்தெடுப்பவர்கள் கருதுகின்றனர்.
இந்த வகை நட்புத் திருமணத்திலும் குழந்தைகள் குறித்து முடிவெடுக்கலாம். இருவரும் விரும்பினால் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கலாம் அல்லது செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் குழந்தையைப் பெற்று கூட்டாக வளர்க்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நடைமுறை முதன்முதலில் ஜப்பான் நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கி, தற்போது சீனாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.