
ஒருவருக்கு நம் மீது நட்பு பாராட்ட விருப்பம் இல்லை என்றால் வலிய சென்று பேசுவது அவர்களை ஒருவிதமான தொந்தரவு செய்வதாகத்தான் எண்ணத்தோன்றும். இதனால் அவர்கள் நம்மை தொந்தரவாக எண்ணி மேலும் ஒதுங்கி செல்வது நம் தன்மானத்தையும் கெடுத்துவிடும். ஒருவர் நட்பு பாராட்ட விரும்பவில்லை என்றால் அவர்களை வற்புறுத்தாமல் விலகி விடுவதுதான் நல்லது.
ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதும், அனுசரித்துச் செல்வதும், மரியாதை கொடுப்பதும், பெறுவதும், ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வைப்பதும், பச்சாதாபம் கொள்வதும், ஆதரவு காட்டுவதும், விசுவாசம் கொள்வதும்தான் ஒரு நல்ல நட்பின் அடையாளங்கள். அந்த நல்ல நட்பை எப்படி வளர்ப்பது என்பதை தெரிந்து கொண்டால் நாமே வலிய சென்று நட்பை பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை.
புது மனிதர்களை சந்திப்பதும், புதிது புதிதாக நண்பர்களைத்தேடி நட்பு வட்டத்தை விரிவாக்குவதும், மற்றவர்களின் மீது அன்பு, கருணை, பாசம், அக்கறை போன்றவற்றை காட்டுவதும் நல்ல நட்பை வளர்க்க உதவும். அத்துடன் பயனுள்ள தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல நட்பை எளிதாகப் பெறலாம். தன்னலமற்ற பண்புதான் நட்பில் சிறந்தது.
சொந்தங்களிடம் பேச தயங்குவதைக் கூட நண்பர்களிடம் நம்மால் உரிமையாக பேச முடியும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் கருத்துக்களையும், உணர்வுகளையும், மனக்கஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ள ஏற்ற இடம் அது. உன்னதமான உறவுகளில் நட்பு தலையாயது. "உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு" என்ற திருக்குறள் படி நண்பர்கள் அமைவது சிறப்பு.
நம் நலனில் அக்கறை கொண்டவர்களும், நாம் தவறு செய்யும் பொழுது தட்டிக் கேட்டு கேள்வி எழுப்புவதும் சிறந்த நண்பர்களால் தான் முடியும். சிலர் நம்மிடம் இனிக்கு இனிக்க பேசி நாம் இல்லாத போது, நம் முதுகுக்குப் பின்பு தவறாக பேசுவது என இருப்பவர் களிடம் கவனமாக இருக்கவேண்டும்.
சிலர் பொய்யான நட்பு பூண்டு அதில் ஆதாயம் தேடுபவர்களாக இருந்தால் அவர்களை விட்டு விலகி வருவது நல்லது. சிலர் வலிய வந்து நட்பு பாராட்டி அவர்கள் தேவை தீர்ந்ததும் சென்று விடுவார்கள். இப்படிப்பட்ட காரியவாதிகளிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.
நம் சுக துக்கங்களில் முன் நின்று ஆறுதல் படுத்துவதும், சந்தோஷ கொண்டாட்டங்களில் பொறாமை கொள்ளாது கலந்து கொள்வதும் உண்மையான நட்பால்தான் முடியும். உண்மையான நட்பை கண்டறிவது எப்படி என்கிறீர்களா? சிறிது கஷ்டம்தான். ஆனால் சிறிது முயற்சித்தால் கண்டறியலாம். நாம் கஷ்டப்படும் பொழுது நம்முடன் இருப்பவர்கள், ஆபத்து காலங்களில் ஓடோடி வந்து உதவுபவர்கள், சொந்தங்களே உதவாத நேரங்களில் கூட கை கொடுக்கும் நண்பர்கள்தான் உண்மையிலேயே சிறந்த நண்பர்கள்.
நமக்குள் இருக்கும் திறமைகளை ஊக்குவித்து வளர்த்து அவற்றை வெளியில் கொண்டுவர முயற்சிப்பவர்களும், உலகமே நம்மை விட்டு விலகினாலும், நம்மை தனிமைப்படுத்தி ரசித்தாலும் எவர் ஒருவர் கடைசிவரை நம்மை விட்டு விலகாமல் இருக்கின்றார்களோ அவர்களே சிறந்த நண்பர்கள். இவர்களை நாம் வலியச் சென்று தேடவேண்டிய அவசியமில்லை. நம் உள்ளம் நல்லதாகவும் உண்மையானதாகவும் இருந்தால் தானாகவே நம்மைத்தேடி வருவார்கள்.
இரு மனங்களுக்கு இடையே உள்ள ஒரு ஆத்மார்த்தமான உணர்வுதான் நட்பு. உண்மைதானே நண்பர்களே!