வீட்டிற்குள் எலி நுழைந்து விட்டால், வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் கடித்து சேதப்படுத்தி விடும். புத்தகங்கள், துணிகள் தொடங்கி, நாம் பாதுகாத்து வைத்திருக்கும் முக்கியமான விஷயங்கள், உணவுப் பொருட்கள் என அனைத்தையும் எலிகள் வேட்டையாடி குதறிவிடும். இவை தவிர, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் வயர்களைக் கூட விடாமல் கடித்து நாசப்படுத்தும்.
அப்பொழுது நமக்கு வரும் கோபம் இருக்கிறதே அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு கோபம் வரும். ‘என்னதான் செய்வது தெரியவில்லையே? இந்த எலி பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது’ என புலம்பித் தள்ளி விடுவோம். இதனால் வீட்டில் கொசு பிரச்னையை விட எலி பிரச்னை பெரும் பிரச்னையாக இருக்கும்.
எலிகளை அடிக்காமல், கொல்லாமல் வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டே எளிதாக விரட்டலாம். வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே, தொல்லை கொடுக்கும் எலிகளை ஓட விட முடியும். வீட்டில் இருக்கும் எலி தொல்லைக்கு ஒரே இரவில் எப்படித் தீர்வு காண்பது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒரு பழைய பிளாஸ்டிக் கிண்ணத்தை எடுத்து அதில் 2 ஸ்பூன் கோதுமை மாவு, அத்துடன் 1 ஸ்பூன் கடலை மாவு சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் துணி துவைக்கப் பயன்படுத்தும் பவுடரையும் சேர்க்க வேண்டும். அதோடு 4 பச்சை மிளகாய்களை இடித்து அத்துடன் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்குக் கொண்டு வர வேண்டும்.
பின்னர், அதை சிறிய உருண்டைகளாக உருட்டி எலிகள் நடமாடும் இடங்களில் வைத்து விட வேண்டும். இவற்றை எலிகள் சாப்பிட்டால் மீண்டும் வீட்டிற்குள் எலிகள் வராது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, குழந்தைகள் இதை எடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இது கிராமப்புறங்களில் வழக்கமாகக் கடைபிடிக்கப்படும் நடைமுறையாகும். எலிப்பொறி வைத்து எலியைப் பிடிப்பது, எலி பேஸ்ட் வைத்து எலியைக் கொல்லுவது என பல நடைமுறைகளை நகரப் பகுதிகளில் நாம் செய்து வருகிறோம். ஆனால், மிகவும் எளிமையான முறையில் மேற்கண்ட வழியை பின்பற்றி எலிகளை ஓட ஓட விரட்டலாம்.