தற்காலத்தில் ஓட்டல்களில், தேநீர் கடைகளில் தேநீர் அல்லது காபி கேட்டால் கடைக்காரர், ‘சர்க்கரை போடலாமா சார் ?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு நாம் சொல்லும் பதிலுக்கேற்ப சர்க்கரையின் அளவை கூட்டியோ குறைத்தோ கலந்து தேநீர், காபி முதலானவற்றைத் தயாரித்துத் தருகிறார்கள். ஏனென்றால் சர்க்கரை வியாதி என்பது தற்காலத்தில் பரவலாகப் பலருக்கும் இருக்கிறது.
நமது உடலில் உள்ள கணையம் என்ற உறுப்பானது இன்சுலினை உற்பத்தி செய்யும் பணியினைச் செய்து வருகிறது. இன்சுலினானது நமது உணவின் மூலமாக பெறப்படும் குளுக்கோஸ் சக்தியை இரத்தத்தின் மூலமாக உடல் செல்களுக்கு அனுப்பப் பெரிதும் உதவுகிறது. இன்சுலின் சுரப்பது குறையும்போது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் செல்களால் கிரகிக்கப்படுவது குறைந்து அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதையே நாம் டயாபடீஸ் அல்லது சர்க்கரை வியாதி என்று சொல்கிறோம்.
காலையில் சாப்பிடுவதற்கு முன்பு எடுக்கப்படும் இரத்த பரிசோதனையில் சர்க்கரையின் அளவு 70 முதல் 100 வரை இருந்தால் சர்க்கரை வியாதி இல்லை என்று பொருள். இதுவே 101 முதல் 125 வரை இருந்தால் அதையே ப்ரீ டயாபடீஸ் என்று கூறுகிறார்கள்.
125க்கு மேல் இருந்தால் சர்க்கரை வியாதி இருக்கிறது என்று பொருள். சர்க்கரையின் அளவைத் தெரிந்து கொள்ள HBA1C என்றொரு பரிசோதனை இருக்கிறது. இதில் 5.7 என்ற அளவிற்குக் கீழ் இருந்தால் சர்க்கரை வியாதி இல்லை என்று பொருள். 5.7 முதல் 6.4 வரை இருந்தால் ப்ரீ டயாபடீஸ் வரையறைக்குள் இருக்கிறீர்கள் என்று பொருள். 6.5 ம் அதற்கு மேலும் இருந்தால் சர்க்கரை வியாதி உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
நமது உடலில் சர்க்கரை அளவு நார்மல் அளவை விட சற்று அதிகமாக, அதாவது 101க்கு மேல் 125க்குள் இருந்தால் அதை ப்ரீ டயாபடீஸ் என்று அழைக்கிறார்கள். நமது உடலில் இன்சுலின் சுரப்பது குறைவதாலேயே ப்ரீ டயாபடீஸ் நிலை ஏற்பட்டு அதுவே பின்னர் டைப் 2 டயாபடீஸாக மாற பெரும் வாய்ப்பு இருக்கிறது.
ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ளவர்களுக்கு டைப் 2 டயாபடீஸ் விரைவாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த நிலையில் இருப்பவர்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் டைப் 2 டயாபடீஸ் நோய் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.
முப்பது வயதைக் கடந்தவர்கள் கட்டாயம் வருடத்திற்கு ஒரு முறையும் நாற்பது வயதைக் கடந்தவர்கள் வருடத்திற்கு இரு முறையும் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைகளைச் செய்வது அவசியம். வருமுன் காப்பது சிறந்ததல்லவா?
சர்க்கரை நோய் என்பது பரம்பரையாகவோ அல்லது நமது உணவு முறை மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதாலேயே ஏற்படலாம். சர்க்கரை நோய் நம்மைத் தாக்காமல் நம்மால் காத்துக்கொள்ள முடியும். தினந்தோறும் ஒரு மணி நேர நடைப்பயிற்சி மற்றும் நீச்சல் தெரிந்தவர்கள் அரை மணி நேரம் நீச்சல் பயிற்சியினைச் செய்தால் நல்ல பயன் கிடைக்கும். கொழுப்புகள் நிறைந்த மற்றும் எண்ணெயில் பொரிக்கப்படும் உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.
அதிக அளவில் காய்கறிகளையும், கேரட், ஆரஞ்சு, மாதுளை முதலான பழங்களையும் சாப்பிடலாம். ஒரே சமயத்தில் வயிறு நிறைய சாப்பிடாமல் சற்று குறைத்து சாப்பிட வேண்டும். முடிந்தால் மாலை வேளைகளில் நடப்பதும் நல்லது. வீட்டிற்கு அருகிலுள்ள இடங்களுக்கு மோட்டார் வாகனங்களில் செல்லாமல் நடந்தோ அல்லது சைக்கிளிலோ செல்லுவது சர்க்கரை வியாதி நம்மைத் தாக்குவதை நிச்சயம் குறைக்கும். அதிகப்படியான உடல் எடையைக் குறைப்பதும் மிகமிக அவசியம்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை, அதிக பசி மற்றும் தாகம் எடுக்கும் நிலை, சோர்வு ஏற்படுதல் முதலானவை சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். இத்தகையவர்கள் உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசித்து மருத்துவர் பரிந்துரைக்கும் சர்க்கரை நோய் பரிசோதனையைச் செய்து பார்ப்பது நல்லது.
நோய் பிரச்னை வந்த பின்னர் அவதிப்படுவதைவிட, வருமுன்னால் காப்பது சிறந்ததல்லவா? சர்க்கரை வியாதி நம்மை அணுகாமல் நம்மால் காத்துக்கொள்ள முடியும். முயற்சி செய்து பார்ப்போம். சர்க்கரை வியாதியை முற்றிலுமாக அகற்ற ஒன்றிணைவோம்.