
ஒரு வீட்டிற்கு அழகு சேர்ப்பது வீட்டில் அமைந்துள்ள அழகான தோட்டமாகும். ஒவ்வொரு வீட்டிலும் சின்னதோ பெரியதோ ஒரு தோட்டம் அவசியம் தேவை. அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்பவர்களாக இருந்தாலும் சிறு சிறு தொட்டிகளிலாவது செடிகளை வைத்து பராமரிப்பது உடலுக்கும் மனதிற்கும் சிறந்த பயிற்சியாகும்.
வீட்டில் போதிய இடமில்லை என்றால் சிறிய அளவிலான மாடித்தோட்டம் அமைக்கலாம். குடியிருப்பில் இருக்கிறோம் இடமில்லை என்று நினைக்க வேண்டிய அவசியமில்லை. இடப்பற்றாக்குறை என்பது பெருநகரங்களில் ஒரு பெரிய விஷயமே இல்லை. சிறிதளவு இட ஒரும் இருந்தாலே போதும் நம் அன்றாட தேவைகளுக்கான கீரைகள் காய்கறிகளை பயிரிட்டு நம் தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
நம் வீட்டைச் சுற்றி சிறிதளவு இடம் இருந்தால் கூட போதும் அழகாக தோட்டம் அமைத்து நம் தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம்.
அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் தொட்டிகளில் பயனுள்ள மூலிகைச் செடிகளையும், அன்றாட தேவையான கொத்தமல்லி, கருவேப்பிலை, புதினா, காய்கறிகளில் தக்காளி, வெண்டைக்காய், கத்தரிக்காய் என பயிரிட்டு ரசாயன உரம் கலக்காத உணவை சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாம்.
தோட்டக்கலை என்பது மிகச் சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. உடற்பயிற்சி நிலையத்தில் நேரத்தையும் பணத்தையும்் செலவிட்டு உடற்பயிற்சி செய்வதை விட நம் வீட்டு தோட்டத்தில் குறிப்பிட்ட நேரம் செலவு செய்ய கை, கால், முட்டி, இடுப்பு என உடலின் அனைத்து பாகங்களுக்கும் சிறந்த பயிற்சியாக அமைகிறது. விடுமுறை நாட்களில் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து தோட்ட வேலைகள் செய்ய மனமும் உடலும் லேசாகும்.
தோட்ட வேலைகளில் ஈடுபட காலை அல்லது மாலைதான் சிறந்த நேரம். தினமும் சிறிது நேரம் தோட்டத்தில் செலவு செய்ய நம் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். தோட்ட வேலையில் ஈடுபடும்போது உருவாகும் அதிகப்படியான வியர்வை நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவும். இதனால் நம் ஆரோக்கியம் மேம்படும்.
மன அமைதி பெறுவதுடன் உடல் நலனும் பாதுகாக்கப் படும். புதிதாக தோட்டம் அமைப்பவர்கள் என்றால் எடுத்தவுடன் அதிகப்படியாக குனிந்து நிமிர்ந்து அதிக எடையுள்ள தொட்டிகளை தூக்கி வேலை செய்வது என்றில்லாமல் சிறிது சிறுதாக தோட்ட வேலைகளில் ஈடுபடலாம்.
1) செங்குத்து தோட்டம்:
அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இடம் குறைவாக இருக்கும் பொழுது பால்கனியில் செங்குத்து தோட்டம் அமைக்கலாம். இந்த தோட்டங்களை தொங்கும் தோட்டங்கள், சுவரில் பொருத்தப்பட்ட அலமாரிகள் அல்லது மரத்தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்கலாம்.
2) தொங்கும் செடிகள்:
பால்கனியில் செடிகளை குறிப்பாக துளசி, புதினா போன்ற மூலிகை செடிகளையும், வண்ணமயமான பூச்செடிகளையும் தொங்கும் தொட்டிகளில் வைத்து வளர்க்க செழித்து வளர்வதுடன் இடத்தையும் அடைக்காது.
3) பாக்கெட் பிளாண்டர்கள்:
இந்த துணி பிளாண்டர்களை சுவர்களில் தொங்கவிட்டு சிறிய தாவரங்களை வளர்க்கலாம். இவை சதைப்பற்றுள்ள தாவரங்களை வளர்ப்பதற்கு ஏற்றவை. பார்க்கவும் அழகாக சுவர் முழுவதும் பசுமை நிரம்பி காணப்படும்.
4) பாலேட் தோட்டங்கள்:
மரத்தாலான பலகையை சுவரில் கட்டி, அதை மண் மற்றும் செடிகளால் நிரப்பவும். செடிகள் வளரும் பொழுது அழகாக கண்ணை கவரும் வகையில் இருக்கும். இடத்தையும் அடைக்காது. இவ்வகையான தோட்டங்கள் இடத்தை மிச்சப் படுத்துவதுடன், இயற்கையான காற்று சுத்திகரிப்பானாகவும் செயல்பட்டு நம் குடியிருப்பின் சூழலை மேம்படுத்தும்.
ஒரு பால்கனியை தோட்டமாக மாற்றுவது என்பது மிகவும் ரசனையான விஷயம். இடத்தையும் அடைக்காமல் நம் வீட்டிற்கு ஒரு அழகான தோற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். அன்றாட சமையலுக்கு தேவையான காய்கறிகளையும், கொத்தமல்லி, புதினா போன்ற மூலிகைகளையும் பெறலாம்.