
எந்த ஒரு விசேஷத்திலும், பண்டிகை நாட்களிலும், சாப்பாடு பரிமாறுவதற்கென ஒரு முறை உண்டு. எப்படி வேண்டுமானாலும் பரிமாற மாட்டார்கள்.
முதலில், வாழை இலைபோட்டு, தண்ணீர் தெளித்து இலையை சுத்தம் செய்து, எல்லா அயிட்டங்களையும் வைத்த பிறகுதான் சாப்பிட ஆரம்பிப்பது வழக்கம்.
அதாவது, சிறிது பாயசம், பச்சடி, கறி, கூட்டு, வறுவல், அப்பளாம், ஊறுகாய், ஸ்வீட், வடை, பருப்பு, நெய், சாதம் ஆகியவைகளைப் பரிமாறிய பிறகு, சாம்பார், ரசம், பாயசம், தயிர் அல்லது மோர் விட்டு சாப்பிடுவது வழக்கம். இந்த ஆர்டரைத்தான் பலர் பின்பற்றி வருகின்றனர்.
ஆனால், எதனால் இப்படி ஒரு ஆர்டர் ? என்பது அநேகம் பேர்களுக்குத் தெரியாது. இதன் விளக்கத்தை ஸ்ரீ மகாபெரியவா அற்புதமாக கூறியிருப்பதைத் தெரிந்து கொள்ளலாமா?
இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையாக இருப்பதாக நினைத்து அதில் மயங்கிடாதேன்னு தண்ணீரைத் தெளிக்கிறார்கள்.
அப்பறம் பாயசம், அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைப்பது -
"பாயசத்தால் பிறந்த ஸ்ரீராமனையும், தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
முதலில் குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசணி, பரங்கி, கத்திரி, முருங்கைக்கா என கறிகாய்கள் இருக்குமே! அதுதான் ''தான்'' என்பது. நாம் எல்லாரும் பிறந்து வெவரம் தெரிஞ்சதுமே ''தான் '' என்கிற அகங்காரம் மனசில் வந்து விடுகிறது. அதனால் நாம் ''குழம்பி'' ப் போய் விடுகிறோம். அந்தத் ''தானை'' கொஞ்சமாக சாப்பிட்ட பிறகு, அடுத்த கட்டத்துக்குப் போகிறோம்.
அப்போது, ''தான்'' இல்லாததால் ஒரு தெளிவு வருகிறது. அதாவது ''ரச'' மான மனநிலை. அதுதான் ரசம்.
''தான்'' இல்லாம தெளிவாக இருக்கற மனசில் ''ரச'' மான எண்ணம் வருகிறது. அது வந்ததும், எல்லாமே இனிப்பான பாயசமாகவும், பட்சணமாகவும் ஆகிறது.
கடைசியாக, மோர். மோர் என்கிறது என்ன? எப்படி கிடைக்கிறது?
பாலில் இருந்து தயிர் கிடைக்க, அதிலிருந்து வெண்ணெய் எடுத்து, அதைக் காய்ச்சுகையில், நெய் வருகிறது. இவைகளை எடுத்தபின் மிஞ்சி இருப்பதே மோர். அதாவது, மோரிலிருந்து எதையும் பிரிச்சு எடுக்க முடியாது. மோருக்கு அடுத்த பிறவி இல்லை. இந்த போஜன ஸம்ப்ரதாயத்திலிருந்து என்ன புரிகிறது...என்றால்...
நாமும் அகங்காரத்தைவிட்டு மனசு தெளிஞ்சு ரசமா வாழ்க்கையை அனுபவிச்சு, யாருக்கும் எந்த உபத்திரவமும் பண்ணாமல், எல்லாருக்கும் இனிமையாக வாழ்ந்து கடைசியில் பரமாத்மாவுடன் கலந்துவிட்டால். அதுக்கு அப்புறம் எதுவுமே இல்லை. அதாவது 'நோ மோர்!"
சாதரணமான மக்களுக்கும் இந்த அடிப்படை விஷயம் போய்ச் சேரணும். ஒவ்வொரு நாளும் போஜனம் செய்கையில், ஒரு நிமிஷமாவது இதை நினைத்துப் பார்த்து எல்லாரும் பகவானோட திருவடியைப் பற்றிக்கொள்ள வேண்டும். தினமும் அனுசரிக்கற போஜன முறையே மனிதர்களின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துகிற வகையில்தான் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதாகும்.