

"உணவே மருந்து", "அன்னம் பரப்பிரம்மம்" என்று உணவை தெய்வமாக வணங்கிய கலாச்சாரம் நம்முடையது. ஆனால், இன்றைய நவீன உலகில் நாம் உணவை மதிக்கும் விதம் பெருமளவு மாறிவிட்டது என்பதை மறுக்க முடியாது. பசி என்று வருபவர்களுக்கு உணவளித்த தேசம், இன்று உணவை குப்பையில் கொட்டுவதில் உலக நாடுகளுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் பிரிவு வெளியிட்டிருக்கும் அறிக்கையானது, நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலேயே எவ்வளவு பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறோம் என்பதை முகத்தில் அறைந்தாற்போல சுட்டிக் காட்டுகிறது.
உலகலாவிய நிலவரம்: உலகம் முழுவதும் உணவுப் பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடினாலும், மறுபக்கம் கோடிக்கணக்கான டன்கள் உணவு வீணாக்கப்படுவது முரண்பாடான உண்மையாக உள்ளது. ஐ.நா வெளியிட்டுள்ள தகவலின்படி, உலக அளவில் ஒரு சராசரி மனிதன் ஆண்டுக்கு சுமார் 79 கிலோ உணவை குப்பையில் வீசுகிறான்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால், நாம் சற்று சிக்கனமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் புள்ளிவிவரங்கள் வேறு கதையைச் சொல்கின்றன. இந்தியாவில் ஒரு நபர், ஒரு வருடத்திற்கு சராசரியாக 55 கிலோ உணவுப் பொருட்களை வீணாக்குவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் நாம் சாப்பிட்டு மீதமாக்கிய உணவு மட்டுமல்லாது, சமைக்கும்போது நீக்கப்படும் காய்கறித் தோல்கள், ஃப்ரிட்ஜில் வைத்து கெட்டுப்போன உணவுகள் என அனைத்தும் அடங்கும்.
ரஷ்யா, மாலத்தீ: இந்த உணவு வீணாக்குதல் பட்டியலில் நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு நாடு ரஷ்யா. அங்குள்ள மக்கள் உணவை கையாள்வதில் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள் போலும்! ரஷ்யாவில் ஒரு நபர் ஆண்டுக்கு வெறும் 33 கிலோ உணவை மட்டுமே வீணாக்குவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இது உலக சராசரியை விட மிகக் குறைவு.
அதேவேளையில், நம் அண்டை நாடுகள் மற்றும் சில தீவு நாடுகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகிலேயே தனிநபர் உணவு வீணாக்குதலில் மாலத்தீவு முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு நபர் ஆண்டுக்கு கிட்டதட்ட 207 கிலோ உணவை குப்பையில் போடுகிறார். இதற்கு அடுத்தபடியாக எகிப்து, ஈராக் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளன. பாகிஸ்தானில் ஒரு நபர் 130 கிலோ உணவை வீணாக்குவது கவனிக்கத்தக்கது.
குவியும் மற்ற குப்பைகள்: நாம் பேசுவது வெறும் உணவுக் கழிவுகளைப் பற்றி மட்டும்தான். ஆனால், நமது தினசரி வாழ்க்கையில் காகிதம், பிளாஸ்டிக் கவர்கள், பழைய துணிகள் என பலவற்றையும் குப்பையாக மாற்றுகிறோம். இந்தியாவில் ஒரு நாளைக்கு ஒருவர் உருவாக்கும் மொத்த குப்பையின் அளவு அரை கிலோவிற்கும் அதிகமாக உள்ளது. இதை ஆண்டு கணக்கில் பார்த்தால், ஒரு தனிநபர் மூலமாக மட்டும் 125 முதல் 200 கிலோ வரை குப்பைகள் பூமியில் சேர்கின்றன.
இது போதாதென்று, பழுதடைந்த செல்போன்கள், சார்ஜர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் என ஆண்டுக்கு 2 கிலோ அளவுக்கு 'மின் கழிவுகளையும்' (E-waste) நாம் சத்தமில்லாமல் உருவாக்கி வருகிறோம்.
இந்த அறிக்கை நமக்குச் சொல்வது வெறும் எண்களை மட்டுமல்ல, நமது பொறுப்பின்மையையும் தான். நாம் வீணாக்கும் ஒவ்வொரு பருக்கையும், உலகின் ஏதோ ஒரு மூலையில் பசியால் வாடும் ஒருவருக்கு கிடைக்க வேண்டிய உணவாகும்.