
வீட்டில் சொல் பேச்சை கேட்காத பிள்ளைகளை பெற்றோர் அடிக்கும்போது, ‘அடி உதவுவது போல் அண்ணன், தம்பி உதவ மாட்டார்கள்’ என்று கூறுவதைக் கேட்டிருப்போம். இந்தப் பழமொழியை நாம் எல்லோருமே ஒரு வன்முறையாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறோம். யாராவது கடன் வாங்கி கொடுக்கவில்லை என்றால் கடன் கொடுத்தவர், இரண்டு மூன்று முறை போய் கேட்பார்கள். காரியம் ஆகவில்லை என்றால் அடியாட்களோடு வந்து கடன் வாங்கியவரை அடித்து விட்டுப் போவார்கள். கடன் வாங்கியவரும் பயந்து கொண்டு எப்படியோ கடனை திருப்பி கொடுத்து விடுவார், உடனே கடன் கொடுத்தவரும் இந்தப் பழமொழியை சொல்லிக் காண்பிப்பதைக் கேட்டிருப்போம்.
ஆக, இந்தப் பழமொழியில் கூறப்பட்டுள்ள அடி என்கிற சொல்லிற்கு வன்முறை என்கிற கருத்தைதான் எல்லோரும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒன்றை மட்டும் நாம் யோசிக்கவில்லை. நம் முன்னோர்கள் நல்வழிக்காகவும் நற்பண்புக்காகவும்தான் பழமொழிகளை உருவாக்கினார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் அவர்கள் எதற்காக வன்முறையை தூண்டும் முறையில் இந்த பழமொழியைக் கூற வேண்டும்? நிச்சயமாக வன்முறையை தூண்டும் முறையில் இதைக் கூறவில்லை.
இந்த பழமொழிக்கான உண்மையான விளக்கம்: நாம் எப்போதும் இறைவனின் திருவடியைப் பற்றினால் நமக்கு நன்மையே உண்டாகும். நாம் துன்பத்திலோ அல்லது இக்கட்டான சூழ்நிலையிலோ அல்லது ஆபத்திலோ இருக்கும்போது இறைவனின் திருவடியை பற்றினால் போதும், நம் பிரச்னைகள் அகன்று விடும். ஆபத்பாந்தவனாகிய இறைவனால் மட்டும்தான் உதவி புரிந்து, நம்மைக் காக்க முடியும்.
உடன் பிறந்த அண்ணனோ, தம்பியோ எப்போதுமே நம்முடன் இருக்க மாட்டார்கள். கடவுளைப் போல அவர்களால் உதவ முடியாது. பந்தம் பாசம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதுதான் இந்த இறையடி. அதைத்தான் முன்னோர்கள், ‘அடி உதவுவது போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்’ என்று அழகாகக் கூறி இருக்கிறார்கள்.
இந்தப் பழமொழிக்கு இதைத் தவிர, இன்னொரு விளக்கமும் இருக்கிறது. அதாவது, ராமாயணத்தில் பரதன் நாடாள வேண்டும் என்று கூறிவிட்டு, ராமரும் லட்சுமணனும் வனவாசம் சென்று விட்டார்கள். வனவாசம் செல்வதை கைவிட்டு நாடாள வர வேண்டும் என்று பரதன் ராமரிடம் கேட்டு கொண்டார். ஆனால், ராமரோ அதை மறுத்து விட்டார். அதனால் பரதன் அவரின் பாதணிகளை பெற்று தனத தலையில் வைத்துக் கொண்டு அயோத்தி வந்தடைந்தார்.
ராமர் திரும்பி வரும் வரை அரியணையில் அவருடைய பாதணிகளை வைத்து, பரதன் நாடாண்டார். பரதனுக்கு ராமரின் திரு அடி உதவியது போல, அண்ணன் (ராமர்), தம்பி (லட்சுமணன்) உதவவில்லை என்ற கருத்துதான் ராமாயணம் மூலமாக நமக்கு இந்த பழமொழிக்கான பொருளாகக் கருதப்படுகிறது. ஆகவே, இனியாவது இந்தப் பழமொழியை உபயோகப்படுத்தி வன்முறையை செய்யாமல் இறைவனடியைப் பற்றுங்கள்!