
காலையில் எழுந்ததும் பலருக்கும் காபி குடிக்காவிட்டால் அன்றைய பொழுதே சரியாகப் போகாது. அந்தளவுக்கு காபி குடித்தால் என்பது நம்மில் பலரோடும் இரண்டறக் கலந்து விட்டது. முதன் முதலாக காபி குடிக்கும் பழக்கம் ஆப்பிரிக்காவில் உள்ள எத்தியோப்பியாவில்தான் ஆரம்பமாகியது.17ம் நூற்றாண்டில் காபி ஐரோப்பிய நாடுகளில் பரவியது. பல நாடுகள் காபி கொட்டை பயிர் செய்வதில் ஆர்வம் காட்டின. ஆனால், காபி கொட்டை செடி வெளிநாடுகளுக்குப் போய்விடாதபடி கெடுபிடிகள் பல செய்தன.
தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாடும் இதில் ஆர்வம் காட்டியது. பிரெஞ்சு கயானாவில் இருந்து காபி செடியைக் கடத்தி வருமாறு பிரேசில் நாடு ஒரு இளம் ராணுவ அதிகாரியை நிறைய பணம் கொடுத்து அனுப்பி வைத்தது. அவர் பிரெஞ்சு கயானாவுக்குப் போய் அங்கிருந்த கவர்னரின் மனைவியுடன் பழகினார். அந்த நட்பின் காரணமாக அவள் ஒரு காபி செடியை பூச்செண்டில் வைத்து அந்த ராணுவ அதிகாரிக்குக் கொடுத்து அனுப்பினாள். இவர் மூலமாக காபி ஒவ்வொரு நாடுகளாக பரவி நமக்கும் காபி குடிக்கும் பழக்கம் வந்து விட்டது.
உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 140 கோடி 'கப்'கள் காபி குடிக்கப்படுகிறது. பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் காபி குடிக்கிறார்கள். ஆண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு கப் காபி குடிக்கிறார்கள். பெண்கள் 1.5 கப் காபி குடிக்கிறார்கள். உலகளவில் மிகவும் பிரபலமான காபி எக்ஸ்பிரஸோ காபி. மற்ற காபிகளை விட இதில் காபின் என்ற நச்சு குறைவு. ஒரு எக்ஸ்பிரஸோ காபி போட எத்தனை காபி கொட்டைகள் தேவை தெரியுமா? ஒரு கப் காபி போட 12 காபி கொட்டைகள் தேவை.
உலகில் அமெரிக்காவில்தான் அதிகம் காபி குடிக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 2 கோடி மூட்டை காபி கொட்டை இறக்குமதி செய்யப்படுகிறது. உலகில் மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு இது. ஐரோப்பிய நாடுகளில் காபியை முதல் முறையாக ‘அராபியன் ஒயின்’ என்றுதான் அழைப்பார்கள். ஆப்பிரிக்க நாடுகளில் காபி கொட்டையை தண்ணீரில் ஊற வைத்துதான் பயன்படுத்துவார்கள். கிரீஸ், துருக்கி நாட்டில் வீடுகளில் முதலில் தருவது காபிதான். காபி அருந்த அனுமதிக்காத கணவனை, மனைவி விவாகரத்து செய்ய துருக்கி சட்டம் அனுமதிக்கிறது.
காபியை ஆண்களும், பெண்களும் ரசித்து குடிக்கிறார்கள். ஆனால், காபி பெண்களுக்குதான் அதிகம் நன்மை புரிகிறது என்கிறது ஆய்வுகள். அது பெண்களின் மூளை சக்தியை ஊக்குவிக்கிறதாம். அதேநேரத்தில் ஆண்களின் சிந்தனையைத் தடுமாற வைக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தொடர்பாக ஆய்வை மேற்கொண்ட பிரிட்டன் ஆய்வாளர்கள் காபி சாப்பிட்ட பெண்கள் பிறருடன் இணைந்து செயல்படும்போது அவர்களின் செயல்பாடு ஊக்குவிக்கப்படுகிறது என்கிறார்கள். அதேவேளையில் ஆண்களின் நினைவுத்திறனில் காபி பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவர்கள் முடிவெடுப்பதை தாமதப்படுத்துகிறது என்கிறார்கள். ஏற்கெனவே ஒருவர் மன நெருக்கடியில் இருக்கும்போது காபி கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு நாளைக்கு பால் கலப்படமில்லாத 2 முதல் 3 கப் காபி குடிக்கும் பெண்களுக்கு உடல் எடை மற்றும் தொப்பை தானாகக் குறையும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நற்செய்தி காபி பிரியர்களை மனமகிழ்ச்சி அடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம். பெண்கள் தினசரி பால் கலப்படமில்லாத 2 முதல் 3 கப் காபி குடிக்கிறார்கள் எனில் அவர்களின் உடலின் ஒட்டுமொத்த எடையிலிருந்து சராசரியாக 2.8 சதவிகிதம் எடை குறைவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் காபிக்கு இருப்பதாக அமெரிக்காவில் நடந்த மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கே காபி பயனளிப்பதாகவும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பெண்கள் 3 கப் காபிக்கு மேல் குடித்தால் அது எதிர்விளைவுகளை ஆற்றும் என்கிறார்கள்.
சிறுநீரகக் கற்களுக்கு அடுத்து மனிதர்களுக்கு அதிக தொல்லை தருவது பித்தப்பை கற்கள்தான். இவை கல்லீரலுக்கு அடியில் சேர்ந்து செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும். இக்குறைபாட்டை களைவதில் காபி முக்கியப் பங்காற்றுகிறது என்கிறார்கள் நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் 30 ஆண்டுகளாக கிட்டத்தட்ட 50,000 பெண்களைக் கண்காணித்த புதிய ஆய்வின்படி, நடுத்தர வயதிலேயே காபி குடிக்கும் பெண்கள் வயதாகும்போது அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் காபி குடிக்காத பெண்களை விட மிகவும் சிறப்பாக இருந்தது தெரிய வந்துள்ளது.
தினமும் மூன்று கப் காபி உட்கொள்ளும் பெண்களின், உடல் செயல்பாடு, மன ஆரோக்கியம் மற்றும் அறிவாற்றல் திறன்களைப் பராமரிக்கும் ஆற்றல் சிறப்பாக இருந்ததுடன், அவர்களின் 60 முதல் 70 வயதுகளில் கிட்டத்தட்ட 15 பெரிய நோய்களில் இருந்தும் அவர்களைக் காப்பாற்றி அவர்களின் ஆயுளையும் நீட்டிக்க உதவுகிறது என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இது ஆண்கள் விஷயத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.