மனித வாழ்க்கையின் அஸ்திவாரமே குடும்பங்கள்தான். பழங்காலத்தில் கூட்டுக்குடும்ப முறையில் வாழ்ந்து வந்தோம். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அத்தை, சித்தப்பா என.... தடுக்கி விழுந்தால் கூட குடும்ப உறுப்பினர் மேலதான் விழ வேண்டிய நிலை இருந்தது. அப்படி ஒரு கூட்டுக்குடும்ப வாழ்க்கை சொர்க்கமாய் இருந்து வந்தது.
எந்த ஒரு நிகழ்வுக்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்வோம் எந்த ஒரு செயலை செய்தாலும் அனைவரிடமும் ஆலோசனையை கேட்டு செய்வதற்கு முன்னுரிமை தரும் மனோபாவத்துடன் வாழ்ந்தோம். அந்த நிலையை விரும்பி ஏற்றுக் கொண்டு வாழ்ந்தோம். குறிப்பாக தாய் தந்தைக்கு நிகராக அனைத்து உறவுகளுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தோம்.
காலங்கள் மாறின தொழில் முறை, தனிமையை விரும்புதல், இடப்பெயர்ச்சி உத்தியோகம் போன்ற காரணங்களால் தனிக்குடித்தனம் செல்வது சகஜமானது.
இதன் பிறகு பிள்ளைகளுக்கு தாத்தா மடியில் உட்கார்ந்து அரட்டை அடிப்பது, பாட்டி ஊட்ட நிலாச்சோறு சாப்பிட்டு கதை கேட்பது ஆகிய மகிழ்ச்சியான தருணங்கள் கிட்டாமல் போயின. அது அவர்களுடைய கோபம், பொறாமை கட்டுப்பாடின்மை, பொறுமையின்மை சகிப்புத்தன்மையின்மை போன்றவற்றை வளர்த்ததுடன் பலவிதமான மனநோய்களுக்கும் ஆளாக்கின.
குடும்பங்களே கோயில்களாய் இருந்த தேசத்தில் அந்த அமைப்பு சிதைந்ததால் கோயில்களும் படிப்படியாக சிதையை தொடங்கி இருக்கின்றன. இளம் வயதில் உண்மையை கற்காமல் பொய்யில் திளைத்தவர்களால் அதுவே நிஜம் என்ற பொய் பரப்புரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் தேசம் மோசமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
தாத்தா, பாட்டி, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா என்ற உறவுகள் படிப்படியாய் மறைந்து வருகின்றன. சித்தியோ, அத்தையோ ஆன்ட்டி தான். சித்தப்பாவோ, மாமாவோ அங்கிள் தான். பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளோ கஸின் பிரதர் என்றாகிப் போனது. நம் கிளைகள் எங்கெங்கு பரவினாலும் அதன் ஆணி வேர் குடும்பங்கள் தானே? கூடுகளாய் இருந்த மனம் கூண்டுகளுக்குள் சிக்கிக் கொண்டது. இயந்திர மயமாகிப்போன உலகில் இதயங்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.
இது ஒரு புறம் இருக்க சமீப கால குடும்பங்கள் தொலைபேசியிலேயே தங்களை தொலைத்து விட்டு ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாதவர்களாய் ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வந்தவுடன் அவரவர்களுக்கு என்ன வேலையோ அதை செய்துவிட்டு தொலைபேசியில் நேரத்தையும் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். சாப்பிடும் போதும் பேசுவதில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஒவ்வொருவரும் இதை உணர்ந்து தன்னை மாற்றிக் கொள்ளாத வரை அவரவர் வாழ்க்கையை அவரவர் அழித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம் என்பதுதான் நிதர்சமான உண்மை.