
நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது போல, நாம் குடியிருக்கும் வீட்டையும் அழகுற வைத்துப் பராமரிப்பது மிகவும் அவசியம். அது பிறரிடம், நமக்குள்ள மதிப்பையும் மரியாதையையும் அதிகரிக்கவும், நம் வீட்டை சுகாதாரமாக வைத்துப் பேணவும் உதவும். இதற்கு நாம் செய்யவேண்டியது என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. வீட்டின் உள்ளேயும் வெளியேயும், கண்களை உறுத்தாத 'அடர்நிற' கலரில் வருடத்திற்கு ஒருமுறை பெயிண்ட் அடிப்பது, ஜன்னல் மற்றும் பாதுகாப்பு கிரில் கதவுகள் மற்றும் பாத்ரூம், சமையல் அறையில் உள்ள காபினட்களுக்கும் பெயிண்ட் அடித்து புதுப்பிப்பது அவசியம்.
2. ஆங்காங்கே ஒழுங்கின்றி சிதறிக் கிடக்கும் விளையாட்டுச் சாமான்களை, ஒரு மூடி போட்ட மூங்கில் பெட்டிக்குள் அடுக்கி, மூடி அழகாக அறையில் ஓரிடத்தில் வைத்து விடலாம். உடைந்த, தேவையற்ற சாமான்களை உடனுக்குடன் குப்பையில் சேர்த்து விட்டால் அறையின் தோற்றம் பெரிதாகத் தெரிய வாய்ப்பு உண்டாகும்.
3. அறையின் ஜன்னல்களுக்குப் போட்டிருக்கும் திரைச்சீலைகளை வாரம் ஒருமுறை துவைத்து, காய்ந்ததும் இஸ்திரி போட்டு அழகாக ஸ்கிரீன் ஹோல்டரில் தொங்கவிடலாம். புத்தக அலமாரியில் கசமுசா வன பரத்திக் கிடக்கும் புத்தகங்களை வரிசையாக அழகுற அடுக்கி வைக்கலாம். இதே முறையில், தினசரி உபயோகத்திலிருக்கும், துவைத்த துணிகளை அடுக்கி வைக்கும் அலமாரிகளையும் பராமரிப்பது அதிக இடம் கிடைக்கவும் அழகான தோற்றம் தரவும் உதவும்.
4. நுழைவு வாயில் கதவு மற்றும் உள் அறை கதவுகளின் கைப்பிடி, இழுப்பறைகள் (Drawers) மற்றும் காபினட் கதவுகளின் கைப்பிடி ஆகியவற்றையும், கறை படிந்துள்ள குளியலறை குழாய்கள், ஷவர் போன்ற உபகரணங்களையும் மாற்றிவிட்டு நவீன டிசைன் உள்ள பொருட்களைப் போடும்போது குறைந்த செலவில் நவீனமான தோற்றத்தைக் கொண்டுவர முடியும்.
5. வீட்டில் உள்ள அனைத்துப் பழைய மாடல் மின் விசிறிகள், டியூப் லைட்கள், முட்டை பல்புகள், சுவிட்ச் போர்டுகள் போன்றவற்றை மாற்றி அவற்றிற்குப் பதிலாக நவீன வகையறாக்களை வாங்கி மாட்டலாம். இதற்கு அதிக செலவாகாது. அந்த மாற்றம் தரும் தோற்றம் காண்போர் கண்களை நிச்சயம் கவரும். வீட்டின் உள்ளேயும் வெளியேயும் உபயோகமில்லாமல் தொங்கிக் கொண்டிருக்கும் வயர்களை நீக்கிவிட்டு, தேவைப்பட்டவற்றை மட்டும் சுவற்றுக்குள் மறைவாகப் பதித்து வைக்கும் முறையைப் பின்பற்றலாம். இதனால் சுவர்களின் அழகு பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம்.
6. நவீன டிஜிட்டல் மயமாக்கல் கான்செப்ட் அடிப்படையில், எலட்ரானிக்ஸ் வகையறாக்களான டி.வி., ஷெல்ப், கம்ப்யூட்டர் இத்யாதிகளை வைக்க ஒரு தனி இடம் அமைத்துக்கொள்வது வீட்டின் நவீனத்தை எடுத்துக்கட்டும்.
7. வீட்டின் முன்பகுதி காம்பௌண்ட் சுவரின் பில்லர் மீது ஒருபுறம் வீட்டின் பெயரையும் இன்னொரு புறம் உரிமையாளர் பெயரையும் காட்டும் பெயர்ப் பலகை வைக்கலாம். பில்லர் மீது மின் விளக்குகளும் பொருத்தலாம்.
8. வராண்டாவில் சிறு சிறு பூந்தொட்டிகளை தொங்க விட்டு அழகு படுத்தலாம். வெளிப்புற அழகை கூட்ட வீட்டின் முன்புறமும் பூந்தொட்டிகளை வைக்கலாம்.
9. வீட்டிற்குள் டேபிள் லாம்ப், ஃபுளோர் லாம்ப் போன்றவற்றை வாங்கி வைத்து சூழலை ஒளிமயமாக்கலாம்.
10. படுக்கையறையில் பழைய படுக்கை விரிப்பு மற்றும் தலையணை உறைகளை மாற்றி புதிய மாடல், புதிய டிசைன்களில் நான்கு செட் வாங்கி, மாற்றி மாற்றிப் போட்டு உபயோகிக்கலாம். ஷேட் லைட் மற்றும் ஃபால்ஸ் சீலிங் போடுவது உயர்தர தோற்றமளிக்க உதவும்.
11. தரை முழுக்க குறைந்த விலை கார்ப்பெட்களை வாங்கி போட்டுவிட்டால், வீட்டின் அமைப்பில் தோற்றப் பொலிவு உண்டாகும். மேலும், பிளைனாக இருக்கும் சுவர்களில் நவீன டிசைன்களில் உருவாக்கப்பட்ட வால் பேப்பர்களை வாங்கி ஒட்டி அழகாக்கலாம். அந்தந்த அறைகளுக்குப் பொருந்தும் வகையில் ஃபர்னிச்சர்களை வாங்கிப்போடுவதும் அவசியம்மானதொன்று.