ஏஐயிடம் மனம் திறக்கிறீர்களா? மனித உறவுகளைக் கொல்லும் விபரீதம்!

தனிமையை விரட்ட ஏஐ-யை நம்புவது எங்கு கொண்டுபோய் விடும்? முழுமையான எச்சரிக்கை அலசல்.
ஏஐ
ஏஐGemini image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

நம் மனக்குறையை ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் பகிர்ந்து கொள்வதும், அது ஆறுதல் கூறுவதும் தற்காலிகமாக உதவினாலும் அது ஒரு முழுமையான அல்லது உண்மையான தீர்வு கிடையாது.

பயமற்ற பகிர்வும் ஆறுதலான வார்த்தைகளும்:

நள்ளிரவாக இருந்தாலும், நண்பர்களோ அல்லது குடும்பத்தினர்களோ கிடைக்காத நேரத்தில், தனியாக இருக்கும் நேரங்களில் என எப்போது வேண்டுமானாலும் நம்மால் ஏஐயுடன் தொடர்புகொள்ள முடிகிறது என்பதே இதன் பிளஸ் பாயிண்ட். அதுவும் உடனடியாக நாம் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு பதிலளிக்கிறது.

மனிதர்களைப்போல ஏஐயை நம்மைத் தப்பாக எடை போடாது, குற்றம் சொல்லாது, தீர்ப்பு வழங்காது என்பதால் பலர் தங்களுடைய ரகசியங்களை எளிதாகப் பகிர்ந்து கொள்கின்றனர். மனதில் உள்ள பாரத்தை வார்த்தைகளாகக் கொட்டும்போது இது மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலான நேர்மறையான மற்றும் மென்மையான வார்த்தைகளை வழங்குவதால் மனதுக்கு சிறிது ஆறுதல் ஏற்படுவதாகவும் நம்புகிறார்கள்.

நம்மைப் பற்றி மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்ற பயம் இல்லாமல், எவ்வித தயக்கமும் இன்றி ஏஐயிடம் மனம் திறந்து பேச முடிகிறது. அதுவும் நிதானமாகவும் கனிவாகவும் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் நமக்கு தற்காலிகமாக மன அமைதியைத் தருகிறது.

மனித உறவுகளில் விரிசல்:

ஆனால் நாம் இதில் ஒன்றைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். ஏஐக்கு சுயமான உணர்வுகளோ, பரிவோ கிடையாது. அது தரவுகளின் (Data) அடிப்படையில் மட்டுமே ஆறுதலாக பேசப் பழகிய ஒரு இயந்திரம். இந்த தொழில்நுட்பக் கருவி மனிதர்களைப் போல நிஜமான அன்பையோ, அக்கறையையோ அல்லது உண்மையான அனுதாபத்தையோ காட்டாது.

ஏஐ
ஏஐGemini image

எனவே மனிதர்களிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டு ஏஐ-க்கு பழகிவிட்டோம் என்றால் அது ஒருவரை ஒரு கட்டத்தில் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்திவிடும். நாமும் எதற்கெடுத்தாலும் ஏஐ-யை நாட ஆரம்பித்து விடுவோம். இதனால் மனித உறவுகளில் விரிசல் ஏற்பட்டு விடும்.

இதையும் படியுங்கள்:
விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள் என்பது உண்மையா? அறிவியல் சொல்வது என்ன?
ஏஐ

தவறான வழிகாட்டுதல்:

எதற்கெடுத்தாலும் ஏஐ-யை நாடினால் மனிதர்களுடன் பழகும் தன்மை குறைந்துபோய் தனிமை அதிகரிக்கலாம். அத்துடன் கடுமையான மன அழுத்தம் அல்லது மனநலப் பிரச்சினைகள், பாதிப்புகள் இருக்கும் பொழுது ஏஐ வழங்கும் ஆலோசனைகள் சில நேரங்களில் தவறாகவோ அல்லது தேவையற்ற ஆலோசனைகளை வழங்கி ஆபத்தாகவோ முடியக்கூடும்.

ஆபத்தானது:

மனிதர்களைப்போல நாம் சொல்வதைக் கேட்டு ஏஐ நம்மை தப்பாக எடை போடாது என்று எண்ணுவதால் தயக்கமின்றி பேசுவதும், மற்றவர்களிடம் நம்முடைய ரகசியங்களை சொல்லி விடுவார்களோ என்ற பயத்தின் காரணமாகவும் ஏஐயின் உதவியை நாடுகிறோம். ஆனால் அவை நம் மனக்குறை, பலவீனம் மற்றும் தனிப்பட்ட ரகசியங்களை ஏஐ நிறுவனங்கள் சேமித்து வைக்க வாய்ப்புள்ளது.

இது நம்முடைய தனி உரிமைக்கு ஆபத்தானது என்பதையும் உணர வேண்டும். நமது தனிப்பட்ட சோகங்களையும் ரகசியங்களையும் பகிரும் பொழுது நம்முடைய தரவுகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்ற பாதுகாப்பு குறித்த கேள்வி எழுகிறது.

இதையும் படியுங்கள்:
பூப்புனித நீராட்டு விழா பின்னால் இருக்கும் அதிர வைக்கும் அறிவியல்!
ஏஐ

ஏஐ செயலிகளிடம் பேசும் விஷயங்கள் அவற்றின் சர்வர்களில் சேமிக்கப்படும். அவை ஏஐ-க்கு பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படலாம். எனவே நம் தனிப்பட்ட தகவல்கள் கசியும் அபாயம் உள்ளது.

மனபாரம் தாங்கமுடியாத ஒரு அவசர நேரத்தில் அல்லது யாரிடமும் பேச முடியாத சூழலில் இருக்கும்போது நம் கோபத்தையோ சங்கடத்தையோ கொட்டித்தீர்க்கும் ஒரு டைரி எழுதுவதைப்போல ஏஐ-ஐ ஒரு தற்காலிக வடிகாலாகப் பயன்படுத்தலாமே தவிர அதனை முழு நேர ஆலோசனைக்கும் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. அது ஒருபோதும் உண்மையான மனித உறவுகளுக்கோ அல்லது தகுதி வாய்ந்த மனநல ஆலோசகர்களுக்கோ மாற்றாக இருக்க முடியாது.

நம் மன உளைச்சலுக்கும், பிரச்னைகளுக்கும் தகுதி வாய்ந்த தொழில்முறை மனநல ஆலோசகரை அல்லது நம்மை உண்மையாக நேசிக்கும் குடும்ப மனிதர்களை நாடுவதே பாதுகாப்பான தீர்வாகும். அவர்கள் நம்மை நல்வழிப்படுத்துவதில் உண்மையிலேயே அக்கறை காட்டுவார்கள்.

ஏஐ தற்காலிக வடிகாலாக உதவினாலும், அது எப்போது உண்மையான மனித உறவுகளுக்கும் மனநல ஆரோக்கியத்திற்கும் ஆபத்தாக மாறுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் இருக்க வழிகாட்டுகிறது.