விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள் என்பது உண்மையா? அறிவியல் சொல்வது என்ன?

விக்கல் ஏன் வருகிறது என்பதற்கான உடல்நலக் காரணங்களும், இது குறித்த சுவாரஸ்யமான உண்மைகளும்.
விக்கல்
விக்கல்Gemini image
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

நமக்கு திடீரென்று விக்கல் வந்தால், “யாரோ உன்னை நினைக்கிறார்கள்”, “யாரோ உன்னைப் பற்றிப் பேசுகிறார்கள்!” என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். இதை நம்பாமல் நாம் "அடப்போங்க பாட்டி தண்ணீர் குடித்தால் விக்கல் நின்றுவிடும்" என வாதம் செய்வோம். இல்லையெனில் ஷாக் ஆகும் படி பயமுறுத்தினால் உடனே விக்கல் நின்றுவிடும்.

உண்மையில் விக்கல் எதனால் வருகிறது? விக்கல் வந்தால் யாரோ நம்மை நினைக்கிறார்களா? எப்படி இந்த நம்பிக்கை வந்தது? அறிவியல் என்ன சொல்கிறது? இந்தப் பதிவில் காண்போம்.

விக்கல் ஏன், எப்படி, எதற்காக வருகிறது?

விக்கல் என்பது நமது உடலில் ஏற்படும் ஒரு தன்னிச்சையான இயக்கம்.

நாம் சுவாசிக்க உதவும் உதரவிதானம் (Diaphragm) என்ற தசை திடீரெனச் சுருங்கும்போது விக்கல் ஏற்படுகிறது. அதைத் தொடர்ந்து குரல்வளைப் பகுதி விரைவாக மூடுவதால், வழக்கமான 'ஹக்' என்ற ஒலி உருவாகிறது.

விக்கல் வருவதற்கான 6 பொதுவான காரணங்களாக மருத்துவம் குறிப்பிடுவது இவைகள்.

1. வேகமாக சாப்பிடும் போது உணவுடன் அதிகக் காற்றையும் விழுங்க நேரிடலாம்.

2. அதிகமாகச் சாப்பிடுவதால் வயிறு அதிகமாக விரிவடைவதால் விக்கல் ஏற்படலாம்.

3. சிலருக்கு காரமான உணவுகள் விக்கலைத் தூண்டலாம்.

4. குளிர்பானங்கள் அருந்துவதால் அதிலுள்ள கார்பனேற்றம் விக்கலை ஏற்படுத்தலாம்.

5. திடீர் வெப்பநிலை மாற்றமாக சூடான உணவுக்குப் பிறகு மிகக் குளிர்ந்த பானம் அருந்துவது சிலருக்கு விக்கலைத் தூண்டலாம்.

6. சிரிப்பு அல்லது உணர்ச்சிவசப்படுதல் நிலையில் அதாவது திடீரெனச் சிரிப்பது, பதற்றம் அல்லது உற்சாகம் போன்றவை விக்கலை ஏற்படுத்தலாம்.

சில நேரங்களில் குறிப்பிட்ட காரணம் எதுவுமின்றியும் விக்கல் வரலாம்.

விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள் என்பது உண்மையா?

அறிவியல் ரீதியாக, இது உண்மையல்ல; ஒரு பாரம்பரிய நம்பிக்கை மட்டுமே. எதிர்பாராத தும்மல் வந்தால் ஆயுசு நூறு என்று ஆசிர்வதிப்பது போல் இதுவும் உளவியல் ரீதியான நம்பிக்கை மட்டுமே. சிலர் இதைச் சகுனமாகக் கருதுகிறார்கள். ஒருவர் நம்மை நினைக்கும்போது அவருடைய எண்ணங்கள் நமக்குத் தொலைவிலிருந்து வந்து விக்கலை ஏற்படுத்துகின்றன என்பதற்கு இதுவரை நிரூபிக்கபட்ட எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

இந்த நம்பிக்கை எப்படித் தோன்றியது என்பதற்கும் உறுதியான வரலாற்று ஆதாரம் இல்லை. இருப்பினும், பல சமூகங்களில் விக்கலைப் பிறர் நினைப்பதோடு தொடர்புபடுத்தும் நாட்டுப்புற நம்பிக்கைகள் காணப்படுகின்றன.

விக்கல் வரும்போது ஏன் யாரோ நினைப்பதாக நம்புகிறோம்?

இதற்குப் பின்னால் மனித மனத்தின் செயல்பாடுகளும் இருக்கலாம்.

விக்கல்
விக்கல்Gemini image

தற்செயலான நிகழ்வுகளைத் தொடர்புபடுத்துதல் இதில் முக்கியமாகிறது. நமக்கு விக்கல் வந்த நேரத்தில் யாராவது நம்மைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தால், இரண்டையும் தொடர்புபடுத்தி நினைக்கலாம். ஆனால், இரண்டும் ஒரே நேரத்தில் நிகழ்வது அவற்றுக்குள் தொடர்பு இருப்பதை நிரூபிக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மனப்பாங்கு காரணமாகலாம்.

இதையும் படியுங்கள்:
சுயமரியாதையே அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வாகும்! எப்படி?
விக்கல்

நாம் ஏற்கெனவே நம்பும் விஷயங்களுக்கு ஆதரவான நிகழ்வுகளை அதிகமாக நினைவில் வைத்துக்கொள்வோம். அந்த நம்பிக்கைக்கு முரணான நிகழ்வுகளைப் பெரும்பாலும் கவனிக்க மாட்டோம்.

பழக்கவழக்கங்கள் மூலம் இந்த நம்பிக்கை பரவுகிறது எனலாம்.

சிறு வயதிலிருந்தே குடும்பத்தினரும் நண்பர்களும் இவ்வாறு சொல்லிக் கொடுத்தால், அது உண்மையாக இருக்கலாம் என்று நம்பத் தொடங்குகிறோம். இவைகளே இந்த நம்பிக்கை சிலரிடம் நிலைத்திருப்பதற்கான சாத்தியமான உளவியல் விளக்கங்களாக கூறப்படுகிறது.

விக்கல் வந்தால் என்ன செய்யலாம்?

பொதுவாக விக்கல் சில நிமிடங்களில் தானாகவே நின்றுவிடும்.

விக்கல் வரும்போது பின்வரும் இந்த எளிய வழிகளை முயற்சி செய்யலாம். மேல் நாக்கில் படும் படி மெதுவாக சிறிது சிறிதாகத் தண்ணீர் குடிக்கவும்.

உணவை நன்றாக மென்று விழுங்கவும்.

ஒரே நேரத்தில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

சீராகவும் மெதுவாகவும் சுவாசிக்கவும்.

விக்கலை நிறுத்துவதற்காக நீண்ட நேரம் மூச்சைப் பிடித்திருப்பது அல்லது ஆபத்தான வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பது தயவுசெய்து வேண்டாம்.

இதையும் படியுங்கள்:
நள்ளிரவில் வீட்டுக்குள் பாம்பு புகுந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
விக்கல்

மருத்துவரை அணுக வேண்டுமா?

பெரும்பாலும் விக்கல்கள் பாதிப்பில்லாதவை. ஆனால், 48 மணி நேரத்திற்கும் மேலாக விக்கல் தொடர்ந்து வரும்போது இயல்பான தூக்கம், உணவு உட்கொள்ளுதல் மற்றும் அன்றாடச் செயல்பாடுகளைப் பாதிக்கலாம் என்பதால் மருத்துவரை அணுகுவது நல்லது.

ஆகவே பாரம்பரிய நம்பிக்கைகள் நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அவற்றை அறிவியல் உண்மைகளிலிருந்து வேறுபடுத்திப் புரிந்துகொள்வது அவசியம். மேலும் விக்கல் என்பது உடலின் இயல்பான செயல்பாடு என்பதை அறிந்து கொண்டால் இது போன்ற நம்பிக்கைகளை கடந்து செல்லலாம்.

வாசகர்கள் விக்கல் ஏற்படுவதற்கான உடல் ரீதியான காரணங்களை தெளிவாகப் புரிந்து கொள்வதோடு, இது தொடர்பான பழங்கால நம்பிக்கைகளை அறிவியல் பூர்வமாகப் புரிந்து கொள்ளும் தெளிவையும் பெற்றுச் செல்வார்கள்.

logo
Kalki Online
kalkionline.com