தயக்கத்தினால் வந்த வினை!

Life style articles
yoga meditation
Published on

சில நேரங்களில் உறவினர் வீட்டிற்குச் சென்றிருப்போம். அங்கு அவர்கள் செய்யும் சில விஷயங்கள் நமக்கு பிடிக்கும். என்றாலும், அதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வெட்கப்படுவது உண்டு. அதைப் பார்த்து வைத்துக்கொண்டு தன் வீட்டிற்குத் திரும்பியவுடன் செய்து அதிலிருந்து அனுபவங்களை பெற விழைவது எல்லோருக்குள்ளும் இருக்கும் ஆசை. அதுபோல் செய்த போது என்ன ஏற்பட்டது என்பதை இப்பதிவில் காண்போம். 

எனது மகளும், மகனும் சிறுவயது முதலே யோகாசனம் செய்ய கற்றுக்கொண்டார்கள். பிறகு பிராணாயாமம் கற்றுக்கொண்டார்கள். ஆதலால் தினசரி எழுந்ததும் இந்தப் பயிற்சிகளை செய்து விட்டுத்தான் பள்ளிக்குச் செல்வது வழக்கம். அதுபோல் தினசரி செய்து கொண்டிருக்கும் பொழுது, எங்கள் உறவினர் பிள்ளைகள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.

அவர்களும் இவர்கள் செய்வதை தினசரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இப்படி பார்த்துக்கொண்டே இருந்தவர்கள் அவர்கள் வீட்டிற்குச் சென்றவுடன் இதேபோல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும் சரி, பிள்ளைகள் நல்லதுதானே செய்கிறார்கள் என்று கவனிக்காமல் விட்டு விட்டார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு அவர்கள் உடல்நிலை மெலிய ஆரம்பித்து இருக்கிறது. ஏன் என்று காரணம் கேட்டபொழுது ஒன்றும் புரியவில்லை. சொல்லவும் தெரியவில்லை. பிறகு அவர்கள் அடுத்த விடுமுறைக்கு எங்கள் வீட்டிற்கு வரும்பொழுது மிகவும்  மெலிந்திருப்பதைப் பார்த்ததும் ஏன் இப்படி ஆகிவிட்டீர்கள்? உடல்நிலை சரியில்லையா? என்று கேட்டதற்கு என்னவென்று தெரியவில்லை என்று கூறினார்கள்.

இதையும் படியுங்கள்:
லிஃப்ட்களின் உள்ளே முகம் பார்க்கும் கண்ணாடி பொருத்தப்படுவதன் காரணம்!
Life style articles

அடுத்த நாள் என் கணவர், குழந்தைகள் யோகாசனம் செய்ய அமர்ந்தபொழுது இவர்களும் வந்து அமர்ந்து செய்தனர். அப்பொழுது தான் என் கணவர் அதை கவனித்தார். குழந்தைகள் தாறுமாறாக செய்து வந்திருந்தனர். இதனால்தான் அவர்களுக்கு உடம்பு தேறி உற்சாகம் அடைவதற்கு பதிலாக, மாறான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை புரிந்துகொண்டு, பிறகு அவர்கள் இருவரையும் சரியாக அமரவைத்து பயிற்சிகளை சொல்லிக் கொடுத்தார்கள். 

அதன் பிறகு குழந்தைகள் நன்றாக தினசரி செய்ய உடல் ஆரோக்கியம் தேறியது. அன்று முதல் இப்பொழுதும்  யோகாசன பயிற்சிகளை விடாமல் செய்து வருகிறார்கள். இதனால் நன்றாக இருக்கிறார்கள். உற்சாகமுடன் யோகாசனப் பயிற்சிகளை செய்து வருவதால்  தன்னம்பிக்கை வளர்ந்து இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆதலால்  எந்தப் பயிற்சி மேற்கொண்டாலும் அதை செய்பவர்களிடம் முறையாக கேட்டு, பயிற்சி பெற்று, நன்றாக கற்றுக்கொண்ட பிறகு செய்வதுதான் நல்ல ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும், உற்சாகத்தையும் தரும். அதை தப்பும் தவறுமாக செய்யும்பொழுது பிரதிபலன் எதிர்மறையாக ஆகிவிடுவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு என்பதை நினைவில் கொள்வோமாக!.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com