
மழைக்காலம் தொடங்கி விட்டது. சிறிது தூரல் போட்டாலே வீட்டிற்குள் கொசுக்கள் வரத் தொடங்கி விடும். அதிலும் சிறு குழந்தைகள் வீட்டில் இருந்தால் கொசுக்கடியினால் பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். கொசுக்கடியிலிருந்து தப்பிக்க சில எளிய வீட்டு உபயோகங்களை இந்தப் பதிவில் காண்போம்.
தற்காலத்தில் கொசுக்கள் இல்லாத இடமே இல்லை என்றாகிவிட்டது. கொசுக்களால் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. இந்நிலையில், நம் வீட்டு சமையலறை பொருட்களை கொண்டே கொசுக்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
வேம்பு: வேப்ப எண்ணையின் வாசம் கொசுக்களை விரட்டச் செய்யும் ஆற்றல் கொண்டது. தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணையை சம அளவு கலந்து கை, கால்களில் தேய்த்துக் கொள்ளலாம். இரவில் கொசுக்கடியிலிருந்து தப்ப இயற்கையான வழி இது. பகலில் வீட்டு ஜன்னல், கதவுகளில் வேப்ப எண்ணெய் தெளிக்கலாம். இதனால் மற்ற பூச்சிகளின் பெருக்கமும் கட்டுப்படுத்தப்படும்.
கற்பூரம்: கற்பூர வாசனைக்கு கொசுக்கள் வீட்டில் வராது. மாலையில் கற்பூரத்தை ஏற்றி வைக்க கொசுத் தொல்லை இருக்காது. கற்பூரத்தை டர்பெண்டைன் எண்ணையுடன் கலந்து ஆங்காங்கே தெளிக்க அந்த வாசனைக்கு கொசுகள் ஓடி விடும். கற்பூரம் வைத்து எரிக்கும் மின்னணு எந்திரங்களும் தற்போது உள்ளன. அதையும் வாங்கி உபயோகிக்கலாம்.
லெமன் கிராஸ்: லெமன் கிராஸ் செடியையும், அதன் சாறையும் கொசுக்களை விரட்டும் மருந்தாகப் பயன்படுத்தலாம். குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ள இடத்தில் இதைத் தவிர்க்கலாம். தொடர்ச்சியான இதன் வாசனை சிலருக்கு ஒத்துக் கொள்ளாது.
ரோஸ்மேரி: இந்தச் செடியும் கொசு விரட்டியாக செயல்படக் கூடியது. இது மூலிகையாகவும், மசாலா பொருளாகவும் பயன்படக் கூடியது. ரோஸ்மேரி செடியை வீட்டின் உள் அலங்காரச் செடியாக வளர்க்கலாம். சமையலறையில் வைத்து வளர்க்க வாசத்தோடு, கொசுவிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும்.
மிளகுக் கீரை: புதினா வகையைச் சேர்ந்த மிளகுக் கீரை செடியும் கொசுக்களுக்கு எதிரியாக விளங்கும். இது வேகமாக வளரக் கூடியது. இதனை வீட்டில் வைத்து வளர்க்க அவ்வப்போது வெட்டி விட, புதர் போல் மண்டாது. மிளகுக் கீரை எண்ணையாகவும் பயன்படுத்தலாம். இதன் வாசனை கொசுக்களை அண்ட விடாது.
பூண்டு: கொசுக்களை விரட்ட பூண்டு மற்றும் வெங்காயச் செடி பயன்படுகிறது. பூண்டு மற்றும் வெங்காயத் தண்டு பகுதியிலிருந்து வெளிப்படும் வாசம் கொசுக்கள், பூச்சி இனங்களுக்கு எதிராக செயல்படும். இவற்றிலிருந்து எளிய வகையில் கொசுக்களிடமிருந்து பாதுகாப்புப் பெறலாம்.
இவை தவிர, வீட்டில் காய்ந்த நொச்சி இலைகள், காய்ந்த பூண்டு தோல் போன்றவற்றில் சாம்பிராணி போடுவது போல புகை போட கொசுக்கள் வீட்டிற்குள் வராது. வீட்டை அடைசல் இன்றி சுத்தமாக வைத்திருக்க, தோட்டத்தில் தண்ணீர், குப்பை சேராமல் பராமரித்தாலே கொசுக்கள் வீட்டில் அண்டாது. கெமிக்கல் கொசு விரட்டிகள் உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். மூச்சு விடுவதில் சிரத்தை தரும். இதன் தொடர்ச்சியான பயன்பாடு சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தி விடும். எனவே, இயற்கை வழிகளை பின்பற்றி கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.