
மத கலாசாரங்களில் மிகவும் முக்கியமானது வழிபாடு. ஒவ்வொரு வீட்டிற்கும் அழகு சேர்ப்பதில் அவரவர் மதம் சார்ந்த பூஜை அறைகள் அடங்கும். உருவ வழிபாடு அல்லது வேறு எந்த வழிபாடு என்றாலும் அங்கு முக்கியத்துவம் பெறுபவை மலர்களும் பிரசாதமாக தூய நீரும் அதை வைப்பதற்கான உபகரணங்களும்தான். கிறிஸ்தவ மதம் என்றால் இயேசு கிறிஸ்து, மேரி மாதா போன்ற படங்களும் உருவச் சிலைகளும் மெழுகுவர்த்தி ஸ்டாண்டுகளும் இன்ன பிற பொருட்களும் முக்கியமானதாக பூஜை மேஜையில் இடம் பெறுகின்றன. அதேபோல், இஸ்லாம் மதத்திலும் சில விதிமுறைகளைப் பின்பற்றுவதுண்டு.
ஒவ்வொரு வீட்டிலும் உள்ள குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடுவது ஏதேனும் விழாக்களிலும் அல்லது பண்டிகை நேரங்களிலும்தான். அப்போது சுவாமியை வழிபடுதல் என்பது இந்து மத கலாசாரத்தின்படி மிக முக்கியமான ஒன்றாக மாறுகிறது. நமது உறவுகளிடையே அமைதியையும் ஆன்மாவில் நிம்மதியும் தரக்கூடிய இடமான பூஜை அறையை அழகாகவும் நன்கு பராமரித்தும் வருவது மிகவும் அவசியம். தூய்மையான இடமே ஆன்மாவின் ஒழுக்கத்தை சுட்டிக்காட்டும். ஆகவே, பூஜையறையை எப்படி பராமரிப்பது அழகுபடுத்துவது என்பதை இந்தப் பதிவின் மூலம் காண்போம்.
1. உங்கள் வீட்டின் இட வசதிக்கேற்ப பூஜை அறையை வடிவமைக்கவும். தற்போது இடத்தை அடைக்காத வகையில் சுவற்றில் மாட்டும் அழகான வடிவமைப்பு கொண்ட மர பூஜையறைகள் எளிதாகக் கிடைக்கின்றன.
2. உங்கள் மதம் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப கடவுள் சிலைகளை தேர்வு செய்யவும். யாரோ சொல்கிறார்கள் என நிறைய வாங்கி அடுக்கினால் தூய்மை செய்வதில் உங்களுக்கே சிரமம் ஏற்படும்.
3. அந்த சிலைகளை காட்சிப்படுத்த ஒரு உறுதியான, அழகாக வடிவமைக்கப்பட்ட பீடம் அல்லது மேடையைத் தேர்ந்தெடுக்கவும். அதற்குரிய பீடங்கள் எளிதாகக் கடைகளில் கிடைக்கின்றன.
4. அழகிய பிரேமிட்ட தஞ்சாவூர் பெயிண்டிங் தெய்வ உருவங்கள் மற்றும் பிற தெய்வங்களை மரச்சட்டங்களின் அளவுக்கு ஏற்ப வரிசைப்படுத்தி வீட்டில் மாட்டுங்கள். முக்கியமாக, பூக்கள் வைக்க வசதியாக ஆணிகள் அடிப்பது அவசியம்.
5. அமைதியான சூழ்நிலையை உருவாக்க வாய்ப்பு நேரம் இருந்தால் தினமும் விளக்குகளை மென்மையான ஒளி தவழும்படி ஏற்றுங்கள்.
6. மனதில் புத்துணர்வுடன் இறையனுபவம் பெற மணம் கமழும் தூபக் குச்சிகள் மற்றும் கற்பூர தீபங்களைப் பயன்படுத்தலாம்.
7. தினசரி பூஜை செய்பவராக இருந்தால் பூக்கள், பழங்கள் மற்றும் பிரசாதம் போன்ற அத்தியாவசிய பூஜை பொருட்களை இருப்பில் வைத்திருப்பது அலைச்சலைக் குறைக்கும்.
8. வாரம் ஒரு முறை பூஜையறையில் உள்ள கடவுள் சிலைகள் மற்றும் பூஜைக்கு உதவும் ஆரத்தித்தட்டு நீர்க்கலசம் போன்றவற்றைக் கழுவித் துடைத்து தூய்மைப்படுத்துவது நல்லது.
9. தினசரி வைக்கும் பூக்கள் காய்ந்ததும் உடனுக்குடன் அகற்றி புதுப் பூக்கள் சூடுவதும் விளக்குகளில் உள்ள எண்ணெய் கீழே வழியாதவாறு பார்த்துக்கொள்வதும் முக்கியம்.
10. சாம்பிராணி மற்றும் ஊதுபத்திகளிலிருந்து விழும் சாம்பல்களை சேகரித்து அவ்வப்போது அகற்ற வேண்டும். தற்போது சாம்பல் உள்ளேயே விழும்படியான ஸ்டேண்டுகள் கடைகளில் கிடைக்கின்றன.
11. அமைதியான சூழ்நிலையை உருவாக்க பூஜையறையை வெள்ளை, பழுப்பு அல்லது வெளிர் மர டோன்கள் போன்ற அமைதியான வண்ணங்களால் வடிவமைக்கவும்.
12. பூஜையறையை மரியாதையுடனும் பய பக்தியுடனும் அணுகுவது முக்கியம். அந்நேரத்தில் தேவையற்ற சத்தம் அல்லது கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும்.
13. பூஜையறையில் நேர்மறை மற்றும் அமைதியான ஆற்றலைப் பராமரிக்க தொடர்ந்து வழிபட்டு ஒருமுக சிந்தனையுடன் பிரார்த்தனை செய்வது நன்மை தரும்.
14. பூஜையறையின் அமைதியான சூழ்நிலையை மேம்படுத்த இயற்கையான தாவரங்கள் அல்லது நீர் நிறைந்த மலர் அம்சம் போன்றவற்றைப் பயன்படுத்துவது அழகியலை மேம்படுத்தும்.
15. நமது அன்றாட அலுவல்களில் இருந்து விடுதலை உணர்வு தரும் பூஜை அறையின் தூய்மை, அழகு மற்றும் பராமரிப்பு ஆன்மிகத்துடன் நமது நேரங்களை மிகவும் நெருக்கமாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் என்பதில் சந்தேகமில்லை.