

நம் ஊரின் பல இடங்களை அடுக்கு மாடிக் கட்டடங்கள் ஆக்கிரமித்து விட்டதை நாம் அறிவோம். தற்காலத்தில் பலரும் தனி வீடுகளைத் தவிர்த்து அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் குடியிருப்பதையே விரும்புகின்றனர். அதில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் அடங்கியிருப்பதையும் மறுப்பதற்கில்லை.
அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடுகளில் அமைந்திருக்கும் சிறிய வகை பால்கனியானது அனைவரையும் கவர்ந்திழுக்கும் சிறப்பு அம்சம் எனலாம். அம்மாதிரியான பால்கனிகளில் சிலர் துவைத்த துணிகளை காயப்போட்டு வைத்திருப்பர். வேறு சிலர் சிறு சிறு தொட்டிகளில் சிறிய வகைப் பூச்செடிகள் மற்றும் மூலிகைச் செடிகளை வைத்து வளர்ப்பதும் உண்டு. இன்னும் சிலர் அங்கு இரண்டு நாற்காலிகளைப் போட்டு அமர்ந்துகொண்டு, காற்றாட பேப்பர் படிப்பது, காபி குடிப்பது, பௌலில் நறுக்கிய பழத் துண்டுகள் அல்லது செரியல் வகைகளைப் போட்டு உண்பது போன்ற பழக்கங்களைப் பின்பற்றுபவர்களாக இருப்பர்.
சமீபத்தில், அம்மாதிரியான பால்கனிகளில் வரிசையாக மூன்று, நான்கு பிளாஸ்டிக் பாட்டில்கள் கட்டித் தொங்க விட்டிருப்பதை அவ்வழியே செல்பவர்களால் காண முடிந்தது. அந்த பாட்டிலின் மேற்பாகத்தில் இரண்டு அங்குல சதுர அளவுக்கு பிளாஸ்டிக் வெட்டி எடுக்கப்பபட்டு ஓட்டை அமைக்கப்பட்டிருந்தது. பலருக்கும் அந்த பாட்டில்கள் எதற்காக அங்கு தொங்கவிடப்பட்டிருக்கின்றன? என்ற கேள்வி மனதில் எழுந்தது. சிலர் 'பறவைகள் மற்றும் சிறிய வகை விலங்குகள் குடிப்பதற்கு அதில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கலாம்' என்று தனக்குத்தானே கூறிக்கொண்டனர்.
பால்கனியில் அமர்ந்து காபி குடிக்கும்போது அல்லது வேறு ஏதாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் டஸன் கணக்கில் ஈக்களும், சிறிய தேனீக்கள், வண்டுகள் மற்றும் ஃபுரூட் ஃபிளை போன்றவையும் படையெடுத்து வந்து அவ்விடத்தில் அமர விடாமல் துன்புறுதியது கூடுதல் விசாரணையில் தெரிய வந்தது. அவற்றை விரட்டுவதற்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் முக்கால் பாகம் தண்ணீர் கலந்த வினிகரை ஊற்றி, கைப்பிடி தடுப்புகளில் கட்டி தொங்க விட்டபின் பல பூச்சிகள் பாட்டில் அருகே சென்று உள்ளே விழுந்து இறந்து விடுவதும், ஒன்றிரண்டு பாட்டில் மீது ஊர்ந்து செல்வதையும் காண முடிந்திருக்கிறது.
அப்புறமென்ன காற்றில் பரவியுள்ள கடுமையான வினிகர் வாசனையால் கவரப்பட்ட பூச்சிகள் பாட்டில் பக்கமே செல்ல ஆரம்பிக்க, துன்பத்திற்கு உள்ளாயின. அபார்ட்மெண்ட்வாசிகள் நிம்மதிப் பெருமூச்சு விடலாயினர். அதிக செலவில்லாமல் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட வினிகர் கரைசல், பூச்சி தொல்லையிலிருந்தும் விடுபட உதவியது பெரிய விடுதலை என்றும் கூறுகின்றனர்.
ஒன்றிரண்டு பால்கனிகளில் காணப்பட்ட இந்த வினிகர் கரைசல் அடங்கிய பாட்டில்கள் பிறகு பலரது பால்கனிகளில், பிளாஸ்டிக் பாட்டில்களால் அமைத்த வேலி போல ஒன்றிற்கும் மேற்பட்ட எண்ணிக்கைகளில் காணப்படுகின்றன. நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.