முகலாயர்கள் காலத்தில் ஏசி இல்லை... ஆனாலும் அரண்மனை குளு குளு என இருந்த மாயம்!

மின்சாரம் மற்றும் நவீன ஏசி வசதிகள் இல்லாத பழங்காலத்தில், பிரம்மாண்டமான அரண்மனைகளை இயற்கை வழிகளில் குளிர்ச்சியாக வைத்திருந்த மன்னர்களின் ஆச்சரியமூட்டும் கட்டிடக்கலை ரகசியங்கள்.
Ancient Indian architecture
Ancient Indian architecture
Updated on

தற்போதைய கொளுத்தும் கோடைகாலத்தில் ஏசி இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. ஆனால் மின்சாரமோ, மின்விசிறியோ, ஏசியோ இல்லாத அந்த பழங்காலத்தில் வாழ்ந்த ராஜாக்களும் மகாராஜாக்களும் எப்படி அக்னி நட்சத்திர வெயிலை மிக எளிதாக சமாளித்தார்கள் என்பது மிகப்பெரிய ஆச்சரியம் தான். 

அவர்கள் எந்த ஒரு நவீன இயந்திரங்களையும் தங்களின் வசதிக்காக நாடவில்லை. இயற்கை வளங்கள், தங்களின் அற்புதமான கட்டிடக்கலையை மட்டுமே முழுமையாக நம்பினார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய சில சூப்பரான இயற்கையான குளிரூட்டும் ரகசியங்களை இப்போது பார்க்கலாம்.

இயற்கை காற்றோட்டம்!

ராஜாக்கள் எப்போதுமே தங்களின் பிரம்மாண்ட அரண்மனைகளை ஏரிகள், குளங்கள், மலைகள் மற்றும் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதிகளில் தான் பார்த்துப் பார்த்து கட்டுவார்கள். இயற்கையான நீர்நிலைகளின் மீது பட்டு வரும் காற்று பெரிய அளவிலான குளிர்ச்சியை அரண்மனைக்குள் நேராக கொண்டு வரும்.

அழகிய பெரிய நீரூற்றுகளை அரண்மனையின் மையப்பகுதிகளில் அமைத்தார்கள். முற்கால முகலாயர்கள் தங்கள் அறைகளுக்குள் பெரிய பெரிய தண்ணீர் பாத்திரங்களை வைத்து அறையின் வெப்பநிலையை வெகுவாகக் குறைத்தார்கள்.

தடிமனான சுவர்கள்!

பாட்கிர் (Baadgir) என்று அழைக்கப்படும் சிறப்பு காற்று பிடிப்பான்கள் அரண்மனையின் மேற்கூரைகளில் மிக உயரமாக அமைக்கப்பட்டன. ஈரானின் யாஸ்ட் (Yazd) நகரத்தில் உருவான இந்த பழங்கால தொழில்நுட்பம், பாலைவனப் பகுதிகளில் குளிர்ந்த காற்றை மட்டும் உள்ளே இழுத்து சூடான காற்றை வெளியேற்றியது.

அதேபோல அரண்மனையின் சுவர்கள் சாதாரண செங்கற்களால் கட்டப்படாமல் சேறு, சுண்ணாம்பு மற்றும் மணற்கற்களால் மிக தடிமனாக அமைக்கப்பட்டன. இது பகல் நேரங்களில் வெப்பத்தை தடுத்து இரவில் இதமான சூழலை தக்கவைக்க பெரிதும் உதவியது.

ஜாலி ஜன்னல்கள்!

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற ஹவா மஹால் (Hawa Mahal) கட்டிடத்தில் உள்ள ஜாலி எனப்படும் சல்லடை போன்ற ஜன்னல்கள் இந்த கட்டிடக்கலைக்கு மிகச்சிறந்த உதாரணமாகும். இந்த பிரத்யேக ஜன்னல்கள் கடுமையான சூரிய ஒளியை தடுத்து, குளிர்ந்த காற்றோட்டத்தை மட்டும் உள்ளே அனுமதித்தன. மேலும் படிக்கிணறுகள் என்று அழைக்கப்படும் பாவ்லிகள் (Baolis) சுற்றியுள்ள வெப்பத்தை பெரிய அளவில் குறைத்து இயற்கையான குளிரூட்டும் மண்டலங்களாக சிறப்பாக செயல்பட்டன.

இதையும் படியுங்கள்:
எங்க போனாலும் சாப்பாடு முக்கியம் பாஸ்! அப்போ நீங்க போக வேண்டிய இடம் இதுதான்!
Ancient Indian architecture

ஹம்பியில் உள்ள லோட்டஸ் மஹால் (Lotus Mahal) மற்றும் ஆக்ரா கோட்டை (Agra Fort) போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் சுவர்கள், மேற்கூரைகளுக்குள் மறைக்கப்பட்ட களிமண் குழாய்கள் அமைக்கப்பட்டன. இதன் வழியே தொடர்ந்து தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும்படி செய்து முழு கட்டிடத்தின் சுவர்களையும் குளிர்ச்சியாக வைத்திருந்தார்கள். அதேபோல அரண்மனையின் அறைகள் மிக அதிக உயரமான மேற்கூரைகளுடன் திறந்த முற்றமாக கட்டப்பட்டன. 

சூடான காற்று எப்போதுமே மேல்நோக்கி செல்லும் என்பதால் மக்கள் வசிக்கும் கீழ் பகுதி எப்போதும் நல்ல குளுமையுடன் இருக்கும். சஜ்ஜாஸ் (Chajjas) என்று அழைக்கப்படும் சாய்வான சன்ஷேடுகள் நேரடி வெயிலை தடுத்து மழையிலிருந்து சுவர்களை பாதுகாத்தன.

நவீன ஏசி இயந்திரங்கள் 1930-களில் தான் இந்தியாவிற்கு வந்தன. ஆனால் அதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். மின்சாரக் கட்டணம் மற்றும் உலக வெப்பமயமாதல் மிக வேகமாக அதிகரித்து வரும் இந்த நவீன காலத்தில், கட்டிடக் கலைஞர்கள் பலரும் இந்த பழங்கால தொழில்நுட்பங்களை மீண்டும் ஆர்வமாக படிக்கத் தொடங்கியுள்ளனர். 

இதையும் படியுங்கள்:
இசைஞானி 50... நூறாண்டு தாண்டி வாழி!
Ancient Indian architecture

இயற்கை தந்த இந்த அருமையான ஐடியாக்களை நாமும் நமது எதிர்கால வீடுகளில் பயன்படுத்தி மின்சாரத்தை மிச்சப்படுத்தி சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com