
கோபத்தில் எவ்வளவு கலாட்டா செய்தாலும் உங்கள் வீட்டில் பொறுத்துக்கொள்வார்கள். விட்டும் கொடுப்பார்கள். ஆனால் நண்பர்கள் வட்டத்தில் எல்லாருமே உங்கள் வயதை ஒத்தவர்கள் என்பதால், யார் விட்டுக்கொடுப்பது என்பதில் வீம்பு வரும். அதிலும், எவ்வளவுதான் நட்புக்காக உயிரைக் கொடுப்பவராக நீங்கள் இருந்தாலும், கோபத்தில் பேசும் கடும் வார்த்தைகளால் நம்பிக்கை தளரும். நீங்கள் செய்த நல்ல விஷயங்கள் மறந்துவிடும். பேசும் வார்த்தைகள் மட்டும் தழும்பாகப் பதிந்துவிடும்.
இதைப்பற்றித் தெளிவாக புரிவதற்காக இந்தக்கதை. குமார் என்ற சிறுவன் மிகவும் முன்கோபக்காரன். கோபத்தில் பிறர் மனது புண்படும்படி பேசிவிடுவான். அதனால் அவன் அப்பா, அவன் ஒவ்வொரு முறை கோபப்படும்போதும் அவனை சுவற்றில் ஒரு ஆணியை அறையச்செய்தார்.
சில நாட்களில் சுவரே நிரம்பிவிட்டது. அதைப் பார்த்து வருத்தப்பட்ட குமார், இனி கோபத்தைக் கட்டுப்படுத்துவது என்று முடிவெடுத்தான். இதைக் கேட்டு மகிழ்ந்த அவனுடைய அப்பா, ஒவ்வொரு முறை கோபத்தைக் கட்டுப்படுத்தும் போதும் அடித்த ஆணிகளை சுவற்றிலிருந்து ஒவ்வொன்றாகப் பிடுங்கிவிடுமாறு சொன்னார். அப்படிச் செய்யத் தொடங்கி சில நாட்களில் எல்லா ஆணிகளும் நீக்கப்பட்டன.
அதைப் பார்த்து பெருமைப்பட்ட அவனுடைய அப்பா, ஆணியிருந்த இடத்தில் சுவற்றின் மீது விழுந்த துளைகளைப்போல நீ சொன்ன கடும் சொற்கள் பிறர் மனதில் ஏற்படுத்திய காயமும் ஆறாது என்பதை மகனுக்கு உணரவைத்தார். இதிலிருந்து கோபத்தை தவிர்ப்பது எவ்வளவு சிறப்பானது என்பது புரிந்திருக்கும்.
கோபம் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும்?
கோபத்தை கஷ்டப்பட்டு அடக்க முயலாதீர்கள். அடக்கி வைத்தது வேறொரு சமயம் விஸ்வரூபமெடுத்து வெளியே வரும். கோபம் வரும்போது அந்த இடத்தைவிட்டு அகன்றுவிடுங்கள். இது வாய் வார்த்தைகள் வலுப்பதைத் தவிர்க்க உதவும்.
பலவருடங்கள் வளர்த்த குணம் ஒரே தடவையில் மாயமாய் மறையாது.அதனால் மனதைத் தளரவிடாமல் 'இந்த பாழாப் போன கோபம் ஒழிய மாட்டேங்குதே' என்ற குற்ற உணர்ச்சி கொள்ளாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
தியானம், விளையாட்டு, மெல்லிய இசை, எல்லாரிடத்திலும் அன்பு, மனதை லேசாக வைப்பது போன்றவை உங்கள் மனதை மென்மையாக்கும். 'கோபம் உங்கள் அன்புக்குப் பாத்திரமானவர்களைக் காயப்படுத்தி, உங்களையும் வருத்தப்பட வைக்கும். அது தேவையா?' என்று சிந்தித்து செயல்படுங்கள்.