அடுக்கு மாடிக் கட்டடங்களில் வசிப்போரின் எண்ணிக்கை தற்போது பெருகிக்கொண்டே வருகின்றது. ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பு வாங்கி அதை முறையாகப் பராமரிப்பதோடு, அதன் பாதுகாப்பு குறித்த விஷயங்களில் நிச்சயம் கவனமாக இருந்தால் மட்டுமே நீண்ட காலம் அந்தக் குடியிருப்பில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் நீண்ட காலம் வசிக்க முடியும். அதற்கான ஆலோசனைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. முறையான பராமரிப்பு மற்றும் ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து பெயிண்ட் அடிப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக, விரிசல் ஏற்பட்டிருந்தால் அந்த இடைவெளிகளை நிரப்புவதும் மிகவும் முக்கியம். ஏனெனில், விரிசல்கள் அதிகமாக ஆக ஆக நீர்க்கசிவுகள் வெளியேறி கட்டடத்தை வீணாக்கி விடும்.
2. விரிசல்கள் அதிகமானால் கட்டட வரிசையில் செடிகள் மற்றும் புல் ஆகியவை வெகு எளிதாக வளர்ந்து விடும் வாய்ப்பு உண்டு. சிறிது காலத்திற்குப் பிறகு இவை அதிகமாகி சுவர்களையே பாதித்துவிடும். எனவே, கட்டடத்தில் எந்த வகை செடிகளும் விரிசல்களில் வளராமல் தடுத்து விட வேண்டியது அவசியம்.
3. மரமோ, கான்கிரீட்டோ கரையான் பாதிக்காத கட்டடம் எதுவும் இல்லை. கரையான் தாக்குதலுக்கு எதிராக போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். விலை உயர்ந்த மரச் சாமான்கள், துணிமணிகள், புத்தகங்கள், ஆவணங்கள் போன்றவற்றில் வெகு கவனம் தேவை. சரியான ஆலோசனையுடன் கரையான் பாதுகாப்பு பெற வேண்டியது அவசியம்.
4. அடுக்கு மாடிக் கட்டடம் என்பது கட்டுமான நிறுவனம் ஒன்றின் கீழ் கட்டப்படுவது என்பதால் அதைக் கட்டிய நிபுணர்களை கலந்து ஆலோசிக்காமல் எலக்ட்ரிக்கல், பிளம்பிங் போன்றவற்றில் மாற்றம் செய்யாதீர்கள். ஆணி அடிக்கவும், சுவரில் ஸ்க்ரூ செலுத்துவது போன்ற மாற்றம் செய்ய வேண்டுமென்றால் அந்தக் கட்டடத்தின் கட்டுமான நிறுவனத்தை தொடர்புகொள்ள வேண்டும். சுயமாக செய்வது தவறாகி விடும்.
5. ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை வாங்கி விடுகிறோம். பின் அதில் இருக்கும் டைல்ஸ்கள் நமக்குப் பிடிக்கவில்லை என்பதால் புதிய டைல்ஸ்களை பதிப்பது சரியல்ல. அது கட்டடத்தின் சுமையை அதிகரிக்கும்.
6. சுவரில் தோட்டம், பால்கனியில் தோட்டம் அல்லது மொட்டை மாடியில் தோட்டம் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு உங்கள் கட்டடம் வடிவமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே தோட்டத்தை உருவாக்க வேண்டும். இல்லையெனில் நீர் கசிவுக்கும் துருப்பிடித்தலுக்கும் அவை காரணமாகி பாதிப்பு தரும்.
7. உங்கள் வீட்டுக்கும் அதில் உள்ள விலைமதிப்புள்ள சாதனங்களுக்கும் சேர்த்தே இன்சூரன்ஸ் எடுப்பது நல்லது. இன்சூரன்ஸ் கம்பெனியிடம் வகை வகையான திட்டங்கள் உண்டு. அனைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து குடியிருப்புக்கு ஏற்றது போல் இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது.
8. டாய்லெட், குளியலறை குழாய் சமையலறை சிங்க் போன்ற பிளம்பிங் பாதைகள் அடைப்பு இல்லாமல் சுத்தமாக வைக்கப்பட வேண்டும். முக்கியமாக சானிடரி நாப்கின்கள், துண்டு துணிகள், குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் துடைப்பான், முடிகளை தனியே எடுத்து குப்பையில் போடுவது வீட்டுப் பராமரிப்பில் மிகவும் முக்கியமானவையாகும்.