

நம் முன்னோர்களால் சில பழக்க வழக்கங்கள் காலம்காலமாக பின்பற்றப்பட்டு அவை இன்றும் இடைவிடாது தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதை நாம் காண்கிறோம். முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவை. அறிவுப்பூர்வமானவை. அப்படிக் கடைபிடிக்கப்பட்டு வந்த சில விஷயங்கள் தற்காலத்திய சூழ்நிலையில் தேவையில்லை என்றாலும் இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முற்காலத்தில் மாலை ஆறு மணியானால் ஜோதிடம் பார்க்க மாட்டார்கள். இது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். தற்காலத்திலும் இவ்வழக்கம் பல ஜோதிடர்களால் பின்பற்றப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். ஜோதிடம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமாகும். இதில் தவறு ஏதும் நேரக் கூடாது என்று ஜோதிடம் பார்ப்பவர் முதல் பார்க்க வருபவர் வரை என அனைவரும் விரும்புவர்.
எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் ஒரு விஷயம் ஜோதிடம். தற்காலத்தில் ஜாதகத்தைக் கணிக்க திருமணப் பொருத்தம் பார்க்க கணினி மென்பொருட்கள் வந்துவிட்டன. ஆனால், அக்காலத்தில் பல நாட்கள் கணக்குகளைத் துல்லியமாகப் போட்டு ஜாதகத்தைக் கணித்துக் கொடுப்பார்கள். திருமணப் பொருத்தம் பார்ப்பார்கள்.
முற்காலத்தில் பெரும்பாலும் வயதானவர்களே ஜோதிடம் பார்ப்பார்கள். மின்சார வசதி இல்லாத அக்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதி வைக்கப்பட்டிருக்கும் ஜோதிடக் குறிப்புகளைப் படிக்க நல்ல வெளிச்சம் தேவை. விளக்கு வெளிச்சத்தில் ஓலைச்சுவடிகளைப் படிப்பது மிகவும் கடினம். தவறுகள் நேரக்கூடும். இத்தகைய காரணங்களுக்காகவே முற்காலத்தில் மாலை ஆறு மணிக்கு மேல் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லும் ஜோதிடம் மற்றும் ஜாதகம் பார்ப்பதைத் தவிர்த்தார்கள். முன்னோர்கள் சொன்னால் அது அர்த்தமுள்ளதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கம் தற்காலத்திலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
காலையில் கடை முதலாளிகள் கடைகளைத் திறக்கும்போது கடை சாவியைக் கொண்டு கடை ஷட்டர் மீது தேய்ப்பதைப் பார்க்கலாம். அப்போது ஒருவித வித்தியாசமான சத்தம் எழும். அக்காலத்தில் ஷட்டர்கள் கிடையாது. மரப்பலகையினால் ஆன ஐந்து அல்லது ஆறு நீளமான கதவுகளைப் பொருத்திப் பூட்டுவார்கள், திறப்பார்கள். இரவு முழுவதும் பூட்டப்பட்ட கடைக்குள் விஷ ஜந்துக்கள் ஏதேனும் நுழைந்திருக்கலாம்.
எதிர்பாராதவிதமாக அவை கடையின் கதவின் அருகில் இருந்து கடையைத் திறக்கும்போது அவை திறப்பவர்களை கடிக்கக்கூடும். இதை கருத்தில் கொண்டே கதவைத் திறப்பதற்கு முன்னால் கடை சாவியைக் கொண்டு கதவின் பலகைகளைத் தட்டி ஓசை எழுப்புவார்கள்.
இதன் மூலம் எழும் ஓசையால் விஷஜந்துக்கள் கடையின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து ஓடிவிடக்கூடும். இதை கருத்தில் கொண்டே அக்காலத்தில் இந்த வழக்கத்தை நம் முன்னோர்கள் கடைபிடித்திருக்கலாம். முன்னோர்களால் தொடங்கப்பட்ட இந்த வழக்கம் இன்றும் பலரால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அடுத்ததாக, இரவு நேரங்களில் கடையை பூட்டும்போது கற்பூரத்தைக் கொளுத்திவிட்டு பின்னர் பூட்டுவார்கள். இதுவும் மின்சாரம் தொடர்பான விஷயமாக இருக்கக்கூடும். முற்காலத்தில் மின்சார வசதி, டார்ச் லைட் முதலான வசதிகள் இல்லாத காரணத்தினால் இரவு நேரங்களில் கடையைப் பூட்டும்போது வெளிச்சத்திற்காக கற்பூரத்தைக் கொளுத்தியிருக்கலாம்.
கற்பூரம் எரியும் வெளிச்சத்தில் பூட்டை கவனமாகப் பூட்டுவதற்காக நம் முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட அற்புதமான ஒரு விஷயமாகவே இந்தப் பழக்கம் தோன்றியிருக்கக்கூடும். தற்காலத்திலும் பல கடைகளில் இவ்விஷயம் கடைபிடிக்கப்பட்டு வருவதைக் காணலாம்.