
திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டால் இப்பொழுதும் பூஜைப் பொருட்கள், அளவைப் பொருட்கள், தண்ணீர் வைக்கும் பொருட்கள் போன்ற அனைத்தையும் பித்தளை, வெண்கலங்களில் வாங்குபவர்கள்தான் அதிகம். பெண்ணுக்கு சீர்வரிசையில் முதன்முதலாக பலகாரங்களை அடுக்கிச் செல்வது பெரிய பெரிய வெண்கல சம்படங்களில்தான்.
பெண்கள் திருமணமாகி வீட்டிற்குள் புகுந்ததும் அவளை முதன்முதலாக ஏற்றச் சொல்லும் காமாக்ஷி விளக்கு கூட பித்தளையில்தான் இருக்கும். முதன் முதலாக கை வைக்க சொல்லும் அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் கூட பித்தளைப் பாத்திரங்களில்தான் வைக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமாகவே பித்தளை, வெண்கலப் பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது நமது மரபு. இப்பொழுதும் திருமணமான பெண்களுக்கு பொங்கல் சீர்வரிசையில் முதலாவதாக இடம்பெறுவது கலாய் பூசப்பட்ட பித்தளைப் பானைகள்தான்.
இந்தப் பொருட்களை நாள் கிழமைகளில் புளிப்பான பொருட்களுடன் உப்பு சேர்த்து சாம்பல் கொண்டு துலக்கி வைத்தால் பளீர் என்று இருக்கும். நீண்ட நாட்கள் உழைக்கும். பழசாகி விற்கும்போதும் பாதி பணம் கிடைத்துவிடும். அவற்றைக் கொண்டு அந்த விலைக்குத் தகுந்த பொருட்களை வாங்கி மகிழலாம். இதில் சிறிது சேமிப்பும் இருக்கும் என்றுதான் சொல்ல முடியும். இன்னும் வசதி குறைந்தோர் அண்டா, குண்டான் போன்ற பெரிய பொருட்களை அடகு வைத்து பணம் வாங்கி அன்றாட, அவசர, அவசியத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வதையும் காண முடியும்.
மேலும், பெரிய அண்டாக்களை பாத்ரூமில் வைத்து தண்ணீர் பிடித்து குளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அவை நீண்ட நாட்கள் உழைக்கும். இதனால் பக்கெட் வாங்கும் செலவு குறையும். பிளாஸ்டிக் உபயோகமும் இல்லாமல் இருக்கும். வாட்டர் டேங்க் ஓவர் ஃப்ளோ ஆனால் அந்தத் தண்ணீரை பிடித்து வைப்பதற்கு இந்த அண்டாக்கள் ஏற்றதாக இன்றும் செயல்படுகிறது.
மேலும், பூஜைக்கு அதிகம் பயன்படுத்தப்படுவது பித்தளை பாத்திரங்கள்தான். பெரிய பெரிய விருந்துகளில் உணவு படைக்க ஏற்றதாக இருப்பதும் இந்த பாத்திரங்கள்தான். இப்படி அதன் பயன்பாட்டை அடுக்கிக்கொண்டே போகலாம்.
எவர்சில்வர் பாத்திரங்கள் என்று வந்தால் ஒரு காலத்தில் அவை விலை உயர்ந்தவையாக இருந்ததால் அனைவருக்கும் எட்டாக்கனியாகவே இருந்தது. புதிதாக ஒருவர் வீட்டில் ஒரு தட்டு மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களை அப்பொழுது பார்த்துவிட்டால் அதிசயமாக பிரம்மித்து போவோம். எவர்சில்வர் தண்ணீர் குடங்களில் தண்ணீர் பிடிக்கும்பொழுது அதிலிருந்து வரும் ஜல் ஜல் ஒலி நம்மை திரும்பிப் பார்க்க வைக்கும். அப்பொழுதெல்லாம் திருமணங்களின்பொழுது குறைவாகத்தான் எவர்சில்வர் பாத்திரங்கள் அன்பளிப்பாக வரும்.
எவர்சில்வர் பாத்திரங்களை சாதாரணமான லிக்விட், சாம்பல், சபீனா, சோப்பு போன்றவற்றில் தேய்த்து கழுவினாலே சுத்தமாக பளிச்சென்று ஆகிவிடும். அதற்காக மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், பித்தளைப் பொருட்களை அவ்வாறு செய்ய இயலாது. சிலருக்கு உப்புடன் புளிப்பான பொருட்களை கையில் வைத்து தேய்த்தால் அலர்ஜி ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு. அதனால் அவற்றை புழங்குபவர்கள் குறைந்து வருகிறார்கள். ஆதலால் அந்தப் பாத்திரங்களைப் பரண் மேல் ஏற்றி விட எல்லோரும் துணிந்து விட்டோம்.
ஆனால், எவர்சில்வர் பாத்திரங்கள் அப்படி இல்லாது இருப்பதால் அடுக்கடுக்காக, அழகழகாக, டிசைன் டிசைனாக அவற்றை வாங்கி வைத்து, வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஏற்றவாறு பரிமாறி மகிழ்கிறோம். எவர்சில்வர் பாத்திரங்களில் சாப்பிடுவதால் களிம்பு ஏறி விடுமோ என்ற பயம் கிடையாது. அதை வாங்குவதற்கு விலையும் அதிகம் கொடுக்க வேண்டியது இல்லை. அதேபோல், எவர்சில்வர் பாத்திரங்கள் உடைந்தாலும், விரிசல் விட்டாலோ மாற்ற முடியாது. அதற்குக் கொடுத்த விலை திரும்ப கிடைக்காது. ஜீரோ வேல்யூதான்.
மேலும், எவர்சில்வர் பாத்திரங்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. அதில் இரும்பு கலந்திருப்பதால் விசேஷ நாட்களில் குறிப்பாக, பூஜை தினங்களில் அதை மற்றவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டாம் என்றுதான் கூறுவார்கள். என்றாலும் அதில் சமைத்தால் வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதால் அதை எல்லாவிதமான சமையலுக்கும் பயன்படுத்துகிறோம். எவர்சில்வர் பாத்திரத்தில் புழங்குவதால் எந்தவிதமான கெடுதியும் வருவதில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் அதைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.
பித்தளை படி, எவர்சில்வர் படி, கால் படி, ஆழாக்கு, உழக்கு போன்றவற்றை அதிகமானோர் ஸ்பூன் ஸ்டாண்டாக, பென் ஸ்டாண்டாக, கலைப் பொருட்களை வைத்து அழகு பார்க்கும் கருவியாக, மார்கழி மாதத்தில் வாசலில் பெரிய கோலம் இட்டு விளக்கேற்றி, பித்தளை படியில் நெல் வைத்து அதில் வெற்றிலையை சொருகி வைப்பதை இன்றும் கிராமப்புறங்களில் வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இப்படி இரண்டிலும் பயன்பாடு அதிகம் என்றாலும் சுத்தம் செய்வதற்கு அதிக நேரம் செலவிடாத வகையில் எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் பயன்படுத்த ஏற்ற விதத்தில் அமைந்திருப்பது எவர்சில்வர் பாத்திரங்களே என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.