தற்காலத்தில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன. ஆசையாய் வளர்த்த பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இத்தகைய இல்லங்களில் சேர்த்து விட்டுப் போய்விடுகிறார்கள். இதற்கு யார் காரணம்? அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
நகர்ப்புறங்களில் வசிக்கும் பல பெற்றோர்களின் கனவு, தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து எஞ்சினியராக்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பது, லட்ச லட்சமாக பணம் சம்பாதிப்பது, டாக்டர், எஞ்சினியர் இந்த இரண்டு படிப்பு மட்டுமே நமது நாட்டில் பெரிய படிப்பு என்பதை நாம் முடிவு செய்து வைத்திருக்கிறோம். பெரிய கல்வி நிறுவங்களில் பி.இ. எம்.பி.ஏ. முதலான கல்விகளில் பிள்ளைகளைச் சேர்க்க ஆறாம் வகுப்பிலிருந்தே கோச்சிங் கொடுத்து எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராக இருக்கிறோம். காரணம் பெரிய கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் எஞ்சினியர்களை பன்னாட்டு நிறுவனங்கள் தேர்வு செய்து மாதத்திற்கு இருபது லட்சம் முதல் நாற்பது லட்சம் வரை சம்பளத்தை அள்ளிக் கொடுக்கிறார்கள்.
விளைவு என்ற ஒன்று இருந்தால் எதிர்விளைவு என்ற ஒன்றும் இருக்குமல்லவா? குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போதே, ‘நீ நல்லா படிக்கணும். பெரிய படிப்பெல்லாம் படிச்சி வெளிநாடு போகணும்’ என்று சொல்லியே வளர்க்கிறார்கள். அந்தக் குழந்தைக்கு கல்வி என்றாலே என்னவென்று கூடத் தெரியாது. பெற்றோர் சொல்லும் வெளிநாடு எந்த திசையில் இருக்கிறது என்பதும் தெரியாது. பணத்தைப் பற்றிய மதிப்பும் தெரியாது. ஆனால், இத்தகைய அறிவுரைகள் எல்லாம் பிஞ்சுகளின் மனதில் ஆழமாகப் பதியும் நஞ்சுகள் என்பதை பெற்றோர் மறந்து விடுகின்றனர்.
வாழ்க்கை என்றால் பணம் ஒன்றுதான் என்பதும், பணமே வாழ்க்கையில் உயர்வான விஷயம் என்பதும் அவர்களின் மனதில் ஆழப்பதிந்து விடுகிறது. அதுவும் வெளிநாடுகளுக்குச் சென்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணமும் அவர்களின் மனதில் பதிந்து விடுகிறது. மேலும், குழந்தைகளை விளையாடக் கூட விடாமல் எப்போது பார்த்தாலும் படி படி என்று நச்சரிக்கும் பல பெற்றோர்களை நாம் பார்க்கிறோம். குழந்தைப் பருவத்தில் விளையாடாமல், விளையாடும் சக நண்பர்களைப் பார்க்கும்போது நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்கித் தவிப்பார்கள். படித்து முடித்து பெற்றோர்களின் ஆசைப்படியே வெளிநாட்டிற்குச் சென்றவர்கள் அங்கேயே நிரந்தரமாகக் குடியேறி விடுகிறார்கள். காரணம், வெளிநாடுகளில் காணப்படும் உயர்தர வாழ்க்கை சூழ்நிலை முறை அவர்களின் மனதை மாற்றி விடுகிறது.
தமது பிள்ளைகளின் வெளிநாட்டு வாழ்க்கை, சம்பளம் முதலானவற்றை பிறரிடம் கூறி பெருமைப்படுவது எல்லாம் அறுபது வயது வரைதான். அதற்குப் பின்னர் ‘நம்மிடம் எல்லாம் இருக்கிறது. நமது பிள்ளைகள் நம் கூட இல்லையே’ என்ற எண்ணம் மனதில் படிப்படியாகப் படரத் தொடங்கும். கூடவே வாழ்க்கை மீது வெறுப்பும் மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கும்.
நமது பிள்ளைகளுக்கு பணத்தாசை காட்டியதும், அவர்களை வெளிநாடு சென்று சம்பாதிக்கச் சொன்னதும், பணம் ஒன்றுதான் இந்த உலகில் உயர்ந்தது என்பதை அவர்களுக்கு போதித்தது நாம்தானே? எல்லா தவறுகளையும் பெற்றோர்களாகிய நாமே செய்துவிட்டு வயதான காலத்தில் ‘நான் தூக்கி ஆசையாக வளர்த்த பிள்ளைகள் எங்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டுப் போய்விட்டார்கள்’ என்று நம் பிள்ளைகளை குறை கூற நமக்கு என்ன தகுதி இருக்கிறது. அடிப்படையில் எல்லா தவறுகளையும் நாமே செய்து விட்டு பிள்ளைகளின் மீது பழி போடுவது நியாயமில்லைதானே?
பிள்ளைகளுக்கு நாம் உறவுகளின் மேன்மையை புரிய வைத்து வளர்க்க வேண்டும். அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். நமது நாட்டை நேசிக்க வேண்டும். பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். சக மனிதர்களுக்கு உதவி வாழ வேண்டும். நேர்மையாக வாழ வேண்டும் என நல்ல நல்ல பண்புகளை எடுத்துக் கூறி மனதில் ஆழப்பதிய வைத்து வளர்க்க வேண்டும்.
‘என் பிள்ளை இந்தியாவிலேதான் வேலை செய்யணும். என் பிள்ளையோட அறிவு இந்தியாவுக்குத்தான் பயன்படணும்’ என்று நினைக்கும் சில பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மைதான். இந்த எண்ணம் உடைய பெற்றோர்களே ஆகச் சிறந்தச் பெற்றோர்கள். அவர்களுக்கு ஒரு குறையும் வராது. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்? நம் நாட்டில் நமக்கு இருக்கும் சுதந்திரம் உலகின் வேறு எந்த நாட்டிற்குச் சென்றாலும் நிச்சயம் கிடைக்காது. இந்தியாவில் மாதம் ஐம்பதாயிரம் சம்பாதிப்பதும் வெளிநாடுகளில் ஐந்து லட்சம் சம்பாதிப்பதும் ஒன்றுதான்.
யோசித்துப் பாருங்கள். நாம் பெற்ற பிள்ளைகளை விட சிறந்த செல்வம் இந்த உலகத்தில் உள்ளதா? உங்கள் பிள்ளைகளை அன்பால் கட்டிப்போடுங்கள். உங்கள் பிள்ளைகள் உங்கள் வயதான காலத்தில் நீங்கள் கம்பீரமாக நடந்து செல்ல உங்களுக்குக் கால்களாகவும் நீங்கள் நிம்மதியாக வாழ உங்களுக்குத் தேவையானதைச் செய்து தர உங்களுக்குக் கைகளாகவும் உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர்களே யோசிப்போம்.