உடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவுகள் மிகவும் இன்றியமையாதது. நம் உடலுக்குத் தேவையான ஆற்றல் நாம் சாப்பிடும் மூன்று வேளை உணவுகளில் இருந்துதான் நமக்குக் கிடைக்கிறது. நாம் சாப்பிடும் இரவு உணவு இலகுவாகவும் எளிதில் ஜீரணிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ஆனால், சிலர் இதை தவறாக நினைத்து இரவு உணவையே தவிர்க்கிறார்கள். இரவு உணவை வழக்கமாக தவிர்ப்பதால் ஏற்படும் 4 விளைவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்
1. வயிற்று வலி: இரவு உணவு சாப்பிடாமல் இருந்தால் வயிறு வெறுமையாக இருப்பதால் வயிற்றில் வாயு உருவாகி வயிற்று வலிக்கு வழிவகுத்து விடும். ஒருவேளை உடலைக் குறைக்க இரவு உணவை தவிர்க்கிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவை எளிதில் ஜீரணமாகி விடும் மற்றும் உங்களுக்கு பசி அதிகம் எடுக்காது.
2. தூக்கமின்மை பிரச்னை: தினமும் இரவு உணவு சாப்பிடாமல் தூங்கினால் இரவு நேரமாக ஆக பசி அதிகரித்து நிம்மதியாகத் தூங்க முடியாது. மேலும், எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றுவதால் இரவு நேரத்தில் எதையாவது சாப்பிட்டு விடுவதால் உடல் நலம்தான் பாதிக்கப்படும்.
இதனால் தூக்கமின்மை காரணமாக நாள் முழுவதும் சோர்வாக இருப்பதால் எரிச்சலும் கோபமும் ஏற்படும். எனவே, தூக்கமின்மை பிரச்னையை தவிர்க்க இரவு சாப்பிடுவதுதான் சிறந்த வழி.
3. ஆற்றல் பற்றாக்குறை: தினசரி இரவு உணவைத் தவிர்ப்பதால் உடலில் ஆற்றல் பற்றாக்குறை ஏற்படும். இதன் காரணமாக உடலானது கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையத் தொடங்கி நாளடைவில் எப்போதுமே சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்னைகளால் அவதிப்பட நேரிடும்.
உடல் மிகவும் பலவீனமடைந்தால், மன ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்பட்டு, இதன் காரணமாக மன அழுத்தம், பதற்றம் மற்றும் கவலை ஏற்படும்.
4. ஊட்டச்சத்து குறைபாடு: இரவு உணவைத் தவிர்த்தால் எந்த பிரச்னையும் வராது என்ற எண்ணம் பொதுவாக தவறானது. தினமும் இரவு உணவைத் தவிர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடலில் உள்ள சர்க்கரை அளவு குறைய வாய்ப்பு அதிகமுள்ளது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைந்து பல தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும்.
மூன்று வேளை உணவு என்பது ஆரோக்கியமான மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இதில் எந்த வேளை உணவைத் தவிர்த்தாலும் ஆரோக்கியக் கேடு என்பதை மேற்கூறிய பிரச்னைகளின் வாயிலாக எளிதில் தெரிந்துகொள்ள முடிகிறது.