தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்து மக்கள் ரசாயனம் கலந்த தரை துடைப்பான்களை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்து நீண்ட காலம் ஆகிவிட்டன. ஆனால், அவற்றில் உள்ள கடுமையான ரசாயனங்கள் உடலுக்கு ஆரோக்கியக் கேட்டை விளைவிப்பது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது பலருக்குத் தெரியாது.
கடுமையான இரசாயனங்களும், பாதிப்புகளும்: நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் தரை மற்றும் குளியலறை கிளீனர்களில் கடுமையான ரசாயனங்கள் உள்ளன. இவை நமது சருமம், கண்கள் மற்றும் சுவாச மண்டலத்தை எரிச்சல் ஊட்டும். மேலும், சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். இவற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம், அமோனியா, ப்ளீச், ஆவியாகும் கரிம சேர்மங்கள் போன்றவை உள்ளன.
இந்தத் தயாரிப்புகளில் இருந்து புகையை உள்ளிழுப்பது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற நாள்பட்ட நுரையீரல் நிலைகள் உட்பட சுவாசப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். குறிப்பாக உணர்திறன் கொண்ட நபர்களுக்கு சரும எரிச்சல், தடிப்புகள் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். மேலும், அமோனியா மற்றும் ப்ளீச் போன்ற சில இரசாயனங்கள் கலக்கும்போது தீங்கு விளைவிக்கும் நீராவிகளை உருவாக்கலாம். இது ஆபத்தான சுவாச நிலைமைகள் அல்லது இரசாயன தீக்காயங்களுக்கு வழிவகுக்கும்.
இதனால் ஹார்மோன் இடையூறுகள் மற்றும் புற்றுநோய் உட்பட மிகவும் கடுமையான உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தும். எனவே, துப்புரவுப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்வது அவசியம்.
இயற்கை துப்புரவுப் பொருட்கள்: இவற்றுக்கு மாற்றாக அத்தியாவசிய எண்ணெய்கள் தாவர அடிப்படையிலான பொருட்கள் மற்றும் இயற்கை தாதுக்கள் போன்ற சுற்றுச்சூழலுக்கு நட்பாக உள்ள துப்புரவு பொருட்களைப் பயன்படுத்த வேண்டும். வெள்ளை வினிகர், பேக்கிங் சோடா, கல் உப்பு, எலுமிச்சை சாறு போன்றவற்றை பயன்படுத்தி துப்புரவு வேலைகளைச் செய்யலாம்.
வினிகர் அடிப்படையிலான கிளீனர்கள்: வினிகர் ஒரு இயற்கையான கிருமி நாசினி மற்றும் வாசனை நீக்கி ஆகும். இது தரை மற்றும் குளியலறையின் மேற்பரப்புகளை திறம்பட சுத்தம் செய்து கடின நீர்க்கறைகளை எதிர்த்துப் போராடும். இவை சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கும் பாதுகாப்பானவை. வீட்டின் தரையைத் துடைக்க தண்ணீருடன் கல் உப்பு மற்றும் வினிகரை கலந்து உபயோகிக்கலாம். நறுமணத்திற்காக சில துளிகள் அத்தியாவசிய எண்ணையை சேர்த்துக் கொள்ளலாம்.
பேக்கிங் சோடா: இது ஒரு பல்துறை துப்புரவு பொருள் ஆகும். இது கறைகள் நாற்றங்கள் மற்றும் அழுக்குகளை சுத்தமாக அகற்றும். இது ஒரு பாதுகாப்பான மற்றும் சக்தி வாய்ந்த துப்புரவு பொருள். வினிகருடன் சேர்த்து இதை பயன்படுத்தலாம்.
தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் இருந்து பெறப்படும் சுத்திகரிப்பு பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கின்றன. இவை பெரும்பாலும் இயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாதவை.
வர்த்தக சூழல் நட்பு பிராண்டுகள்: குளோரின் இல்லாத கிளீனர்களை சுத்தம் செய்யப் பயன்படுத்தலாம். சுற்றுச்சூழல் நட்பு அல்லது நச்சுத்தன்மையற்றது என்ற லேபிள் பொறிக்கப்பட்ட தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும்.
பாத்ரூம் கிளீனர்: பேக்கிங் சோடாவை வினிகருடன் சேர்த்து கடினமான கறையை சமாளிக்கும் பேஸ்டை உருவாக்கி அதை பாத்ரூம் கிளீனராகப் பயன்படுத்தலாம்.
எலுமிச்சைச் சாறு: இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்ட எலுமிச்சைச் சாற்றை பயன்படுத்தி கடின நீர்க்கறை மற்றும் சோப்பு கறை போன்றவற்றை அகற்றலாம். இதை பேக்கிங் சோடாவுடன் கலந்து உபயோகிக்கலாம்.
ஹைட்ரஜன் பெராக்ஸைட்: ஹைட்ரஜன் பெராக்ஸைட் என்பது கிருமிகளை கொல்லக்கூடிய ஒரு இயற்கையான கிருமி நாசினி. ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஹைட்ரஜன் பெராக்ஸைடை ஊற்றி குளியலறையை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தலாம்.