பெண்களுக்கு மிகப்பெரும் கவலையே வயதாகும்போது தங்கள் அழகை குறைக்கும் சருமப் பிரச்னைதான். உடலைச் சுற்றி மூடி இருக்கும் சருமம் பொலிவாக இருந்தால்தான் அழகாகவும் இளமையாகவும் தோற்றமளிக்க முடியும். சருமத்துக்கு இளமை தரும் கொலாஜன் என்பது உடலால் உருவாக்கப்படும் இயற்கையான புரதமாகும். இது 20 வயதில் அதிகமாகவும் வயதாக ஆக குறையத் துவங்கும். பெண்களுக்கு இயற்கையாகவே குறிப்பிட்ட வயது வரை இளமை தரும் ஹார்மோன்கள் சரும அழகை தக்கவைக்க உதவி செய்யும்.
அதன் பின் வரும் காலங்களில் சருமத்தின் அழகை பராமரிப்பதற்கு என்று சில வழிகளை நிச்சயம் கடைபிடித்தே ஆக வேண்டும். இல்லையெனில் விரைவில் சருமம் பளபளப்பிழந்து சுருக்கங்கள் நிறைந்து இருக்கும். அழகையும் குறைத்து விடும். 40 வயதைக் கடந்தும் இளமை அழகுடன் இருக்க சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வறட்சி போன்ற பிரச்னைகளைத் தீர்க்க சரியான சருமப் பராமரிப்புக்கான பொருட்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் சருமப் பராமரிப்புக்கான சில அத்தியாவசிய பொருட்கள் குறித்து இனி காண்போம்.
க்ளென்சர்: உங்கள் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை அகற்றாமல் அழுக்கு மற்றும் அசுத்தங்களை திறம்பட நீக்கும் லேசான, மென்மையான க்ளென்சரைப் பயன்படுத்தவும். அலோ வேரா, ரோஸ் வாட்டர் மற்றும் அதிமதுரம் போன்ற பொருட்கள் சிறப்பு.
கண் கிரீம்: உங்கள் கண்களைச் சுற்றியுள்ள சருமம் மென்மையானது. எனவே, மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் வீக்கத்தைக் குறைக்க ஹைட்ரேட்டிங் பொருட்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்த தரமான கண் கிரீம்களைப் பயன்படுத்தவும்.
மாய்ஸ்சரைசர்: ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உங்கள் சருமத்தின் இயற்கையான தடைச் செயல்பாட்டை எதிர்க்கவும் ஊட்டமளிக்கும் மாய்ஸ்சரைசர் இன்றியமையாதது. ஹைலூரோனிக் அமிலம், செராமைடுகள் அல்லது நியாசினமைடு போன்ற பொருட்கள் அடங்கிய செறிவான, ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சரைசரைத் தேர்வு செய்து பயன்படுத்தவும்.
சன்ஸ்கிரீன்: சூரியனின் சேதப்படுத்தும் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க பரந்த - ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் (SPF 30 அல்லது அதற்கு மேற்பட்டது) உபயோகிக்கலாம். மேகமூட்டமான நாட்களில் கூட தினமும் இதைப் பயன்படுத்துவதால் தவறில்லை.
ஆன்டி ஏஜிங் சீரம்: ரெட்டினோல், வைட்டமின் சி அல்லது பெப்டைட்கள் அடங்கிய ஆன்டி-ஏஜிங் சீரம் ஒன்றை சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்கள் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் மற்றும் சரும நிறமாற்றம் ஆகியவற்றைக் குறைக்க உதவும்.
இதில் ஒவ்வொருவரின் சருமமும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, உங்கள் சரும வகை மற்றும் பாதிப்புகளுக்கு ஏற்ற தயாரிப்புகளைக் கண்டறிய சில சோதனைகள் தேவைப்படலாம். தேவைப்பட்டால் சரும மருத்துவரை அணுகவும் தயங்க வேண்டாம்.
இவற்றுடன் கீழ்க்காணும் சில ஆரோக்கிய வழிகளையும் கடைப்பிடிப்பது நல்லது. முதலில் நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான நல்ல கொழுப்புள்ள உணவை தேர்வு செய்யுங்கள். இது உங்களது சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் உணவுகளைக் குறையுங்கள்.
எண்ணெயில் பொரித்த ஸ்நாக்ஸ் உணவுகள், அதிக அளவிலான காபி போன்ற பானங்கள் ஆகியவற்றை கூடுமானவரை தவிருங்கள். காய்கறிகளை உணவில் அதிகம் சேருங்கள். முக்கியமாக, வயது கூடுவதும் அழகு, குறைவதும் இயற்கை என்பதையும் உணர்ந்து பதற்றமின்றி இந்த வழிகளைப் பின்பற்றுங்கள். நிச்சயம் பலன் தெரியும்.