மேற்கத்திய கலாசாரத்தின் தொற்றாக இப்பொழுது நம் நாட்டிலும் ‘லிவ் இன்’ உறவுகள் அதிகரித்து வருகின்றன. இந்த உறவில் காதல் இருக்குமா என்றால் இருக்கலாம். கல்யாணத்தில் முடியுமா என்றால் அதுவும் நிச்சயமாகத் தெரியாது. இந்த உறவில் எத்தனை காலம் நீடிப்பார்கள் என்றால் அதற்கும் சரியான பதில் கிடையாது. இந்த உறவில் சுதந்திரம் ஒன்றுதான் குறிக்கோளாக உள்ளது. நீ என்னை ஆளக்கூடாது; நானும் உன்னை ஆள மாட்டேன். நீ உன் இஷ்டம் போல் இருக்கலாம்; நானும் அதுபோல் என் இஷ்டம்போல் இருப்பேன். இது என்ன உறவு என்பது கடவுளுக்குதான் வெளிச்சம்!
இந்த உறவில் காதல், காமம் இரண்டுமே உண்டு. இந்த உறவில் எந்தவிதமான பிடிமானமும் கிடையாது. பிடித்தால் சேர்ந்திருக்கலாம். பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி விடலாம் என்ற நிலை. இது நம் கலாசாரத்திற்கு முரண்பாடான ஒன்றல்லவா?
சமுதாயத்தில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் அவரவர்கள் இஷ்டம் போல் வாழ்வது என்பது சமூகத்திற்கும், இந்த நாட்டிற்கும் தீங்கல்லவா? திருமணத்திற்கு முன்பு ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சிலரும், எந்தவிதமான கமிட்மென்ட் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம் என்ற எண்ணத்திலும் சிலர் இம்முறையை தேர்ந்தெடுக்கின்றனர்.
இத்தகைய உறவுகள் பெரும்பாலான சமயம் கசப்பான அனுபவமாகவோ, ஆபத்தானதாகவோ முடிய வாய்ப்புள்ளது. ஆண், பெண் என இரு தரப்பினருமே ஏமாற்றங்களையும், வருத்தங்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் மன அழுத்தம், பெற்றோர்களின் மனநிலை ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் கருத்தில் கொள்வதே இல்லை.
தற்போது இந்த உறவிற்கு ஒப்பந்தங்கள்(அக்ரிமென்ட்) வேறு போடப்படுகிறது. இந்த ஒப்பந்தங்கள் செல்லாது என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் திருமணம் ஆனவர்களும் இந்த ‘லிவ் இன்’ உறவில் இருப்பது அதிர்ச்சியை தருகிறது.
காதலர்கள் திருமணத்திற்கு முன்பே ஒரே வீட்டில் இணைந்து வாழ முடிவெடுத்து ஒருவேளை அது சரியாக செல்கிறது என்றால் திருமணத்தை நோக்கியும், இல்லையென்றால் பிரிவை நோக்கியும் செல்ல முடிவெடுக்கின்றனர். திருமணத்திற்கு முன்பே அவர்களுக்கு நல்ல புரிதல் வந்து விடும் என்றும், எதைச் செய்தால் எதிர் தரப்பினருக்குப் பிடிக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள உதவுகிறது என்றும் நினைக்கிறார்கள். சேர்ந்து வாழும்பொழுது மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா, சண்டை சச்சரவு இல்லாமல் அனுசரித்துச் செல்ல முடிகிறதா என்பதைத் தெரிந்துகொள்ள உதவுவதாக எண்ணுகிறார்கள்.
ஆனால், திருமணமாகாமல் இருக்கும் இந்த உறவில் பார்ட்னர் மீதான நம்பிக்கை எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கும். எந்த நேரத்தில் நம்மை விட்டுச் சென்று விடுவாரோ என்ற அச்சத்தில் இருக்க வேண்டி வரும். இந்த உறவில் பிரேக் அப் வாய்ப்புகளும் அதிகம். கசப்பான சூழல்களும் ஏற்படும். இந்த உறவினில் பொறுப்புகள் என்பது பெரிதாக இருக்காது.
பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதை இரு தரப்பினருமே உணர்வார்கள். அத்துடன் இந்த ‘லிவ் இன்’ உறவில் இருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் ஏன் பெற்றோரிடம் கூட மறைத்து வாழ்வார்கள். இது பின்பு பல பிரச்னைகள் உருவாக வழி வகுக்கும். இப்படிப்பட்ட கலாசார சீர்கேடு மிக்க இந்த உறவு தேவையற்றது. வேண்டாத பிரச்னைகளையும், மன உளைச்சல்களையும் கொண்டு வந்து விடும் என்பதை அறிந்து கொள்வது நல்லது.
திருமணத்தில் ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு ‘லிவ் இன்’ உறவு மூலம் வாழும்போது கிடைக்காது என்பது முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டிய விஷயமாகும். திருமணத்தில் பெண்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் ‘லிவ் இன்’ உறவுகளின்பொழுது கிடைப்பதில்லை.