மேலை நாடுகளில் மேற்படிப்பு படிக்க விழைபவர்கள், முதலில் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் செய்து படிப்பதற்கு நுழைவுச் சீட்டு வாங்க வேண்டும். அதன் பின்னர், அந்த நாட்டில் படிப்பதற்கு மாணவர் விசா எடுக்க வேண்டும். இந்த இரண்டிற்கும் கணிசமானப் பொருட்செலவு செய்வதுடன், ஒருசில மாதங்கள் காத்திருக்கவும் நேரிடும்.
இவ்வாறு கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்தில் நுழைவுச் சீட்டுப் பெற்று, மாணவர் விசா கிடைத்து, கனடா நாட்டிற்குச் சென்ற சர்வதேச மாணவர்களில் 49,676 மாணவர்கள், தாங்கள் அனுமதி பெற்ற கல்லூரியில் சேரவில்லை என்ற அதிர்ச்சி செய்தியை கனடாவின் ஐ.ஆர்.சி.சி. அமைப்பு வெளியிட்டுள்ளது (IRCC - Immigaration, Refugees and Citizenship Canada). இப்படி சட்டபூர்வமாக கனடா நாட்டில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் சேராத மாணவர்கள், கனடாவில் பயிலும் சர்வதேச மாணவர்களில் 6.9 சதவிகிதம்.
இதில் மேலும் அதிர்ச்சியூட்டும் செய்தி இந்த 49,676 மாணவர்களில் 19,582 மாணவர்கள் இந்தியர்கள். இது மேல்படிப்பிற்கான மாணவர் விசா பெற்ற இந்திய மாணவர்களில் 5.4 சதவிகிதம். கனடா நாட்டு சட்டத்தின்படி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் வருடத்திற்கு இரண்டு முறை. மேற்படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், அதற்கான மாணவர் விசா பெற்ற மாணவர்கள், கல்லூரியில் படிப்பதற்கு பதிவு செய்த மாணவர்கள் ஆகிய விவரங்களை ஐ.ஆர்.சி.சி. அமைப்புடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அவ்வாறு கிடைத்த விவரங்களின் அடிப்படையில், ஐ.ஆர்.சி.சி. அமைப்பு 144 நாடுகளின் மாணவர் அனுமதி விவரம், மாணவர் விசா, படிப்பதற்கு பதிவு செய்தவர்கள் ஆகியவற்றை ஆராய்ந்ததில் 49,676 மாணவர்கள் சேரவில்லை என்ற விவரங்கள் கிடைத்துள்ளன. இதில் முதலிடம் வகிப்பவர்கள் இந்தியர்கள். மற்ற நாட்டு மாணவர்கள் பற்றிய விவரங்கள்: சைனா (4279 மாணவர்கள்- 6.4 சதவிகிதம்), இரான் (1848 - 11.6 சதவிகிதம்), ரவாண்டா (802 - 48.1 சதவிகிதம்).
இந்தியாவிலிருந்து சட்டபூர்வமாக விசா பெற்று அமெரிக்க செல்ல முடியாதவர்கள், இடைத் தரகர்கள் உதவியுடன் கனடா மாணவர் விசா பெற்று, கனடாவிலிருந்து, அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைவதாக இந்திய அரசு கருதுகிறது. இதற்கு கனடாவின் சில கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள், இந்திய நிறுவனங்கள், இடைத் தரகர்கள் ஆகியோர்க்கு தொடர்பு இருப்பதாக இந்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது. பல அயல் நாடுகளில், மேல் படிப்பிற்குச் செல்பவர்கள், கல்விக் கட்டணத்தை முன்பணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், கனடாவில் அந்தக் கட்டுப்பாடு இல்லை. இந்த சலுகையைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதாக கருத்து நிலவுகிறது.
இந்த நிலையை மாற்ற, கல்விக் கட்டணம் செலுத்திய பின்னே நாட்டில் நுழைய அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள். கனடாவின் குடி வரவு நிபுணரான ஹென்றி லோடின், மாணவர் விசா கிடைத்தும் கல்லூரியில் சேராத இந்திய மாணவர்கள், கனடாவில் தங்கி, கிடைத்த வேலையில் அமர்ந்து, கனடாவின் நிரந்தர குடியிருப்பாளர் என்ற விசாவிற்கு முயற்சி செய்து கொண்டிருக்கலாம் என்று கருத்து தெரிவிக்கிறார். நிரந்தர குடியிருப்பாளர் விசா கிடைத்தால், சில வருடங்களில் கனடா நாட்டின் குடிமகன் உரிமை பெறலாம். கனடா நாட்டின் குடிமகன், தங்கு தடையின்றி அமெரிக்காவில் பணிபுரிய முடியும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட 49,676 சர்வதேச மாணவர்கள் தவிர, 23,514 மாணவர்கள் பற்றிய விவரங்களை கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் கனடா அரசுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. மாணவர் விசாவில், கனடாவில் நுழைந்த மாணவர்களில் பத்து சதவிகித மாணவர்கள் எங்கிருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை.