காரை ஓட்டிப் பழகுபவர்கள் ‘L’ போர்டை மாட்டிக்கொண்டு ஓட்டிப் பழகுவார்கள். அதைப் பார்த்தவுடன் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் அவர்களை எளிதாகக் கடந்து செல்வார்கள். அதேபோல், கார்களில் கொரோனாவுக்குப் பிறகு, ‘E’ என்ற எழுத்து ஒட்டப்படுகிறது. இந்த ‘E’ என்ற எழுத்து ஒட்டப்படுவதன் காரணம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
இன்று வாகனம் ஓட்டும் பெரும்பாலானோருக்கு பொறுமை என்பதே கிடையாது. கார் அல்லது டூவீலர்களில் வேகமாகச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டும் என்று நினைத்து வாகனங்களை ஹாரன் அடித்துக் கொண்டே வேகமாக இயக்குகிறார்கள். இதனால் நேரம் மிச்சமானாலும் ஆபத்தில் போய் முடிந்து விடுகிறது.
ஒரு வாகனத்தை முந்துவதற்கோ அல்லது குறுக்கே ஏதேனும் வாகனங்கள் அல்லது விலங்குகள் வந்தால் அவற்றை எச்சரிப்பதற்கும் ஹாரன் அடித்து எச்சரிக்கை செய்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதிகப்படியான சத்தத்தை எழுப்பும்போது, அதாவது திடீரென ஹாரன் அடிக்கும்போது வாகனம் ஓட்டும் முதியவர்களுக்கு நெஞ்சு வலி, பதற்றம் போன்றவை ஏற்பட்டு உயிர் பிரியக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு.
எனவே, முதியவர்கள் ஓட்டும் கார்களுக்கு பின்னால் ‘E’ என்ற எழுத்தைக் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இப்படியான கார்களில் ஒட்டப்பட்ட ‘E’ சிக்னல் கொண்ட கார்களைப் பார்த்தால் ஹாரன் போன்றவற்றை இயக்காதீர்கள். இப்படிப்பட்டவர்கள் காரை ஓட்டினால் மதிக்க வேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.
புதிதாகக் கார் கற்பவர்கள், கற்றுக் கொண்டவர்களுக்கு எப்படி ‘L’ என்று இருக்கிறதோ, அதுபோல், முதியவர்களுக்கு இருக்கும் கார் என்பதை பிறருக்குத் தெரியப்படுத்தவும், அவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் வாகனத்தை இயக்கவும் ‘E’ என்ற எழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது.
முதியவர்களுக்கு சாலையில் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதற்காக முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் விளம்பரங்களிலும் நடித்திருந்தனர். சரி, ‘L’ என்ற எழுத்துக்கு ‘Learner’ என்று அர்த்தம் தெரியும். ‘E’ என்ற எழுத்துக்கு ‘Elder’ என்று பொருள் கொள்ளலாம்.
இனிமேல் காரிலோ, டூவீலரிலோ ‘E’ என்ற ஸ்டிக்கரை பார்த்தால் முதியவர்களுக்கு மரியாதை கொடுத்து தொந்தரவு செய்யாமல் ஹாரன் இயக்குவதை தவிர்த்து விடுங்கள்.