
முதியோர் இல்லங்களுக்குச் சென்றால் அங்குள்ளவர்களின் அவர்களின் பிள்ளைகளைப் பற்றி விசாரித்துப் பாருங்கள், ‘என் மகன் பெரிய வேலையில் இருக்கார். இஞ்சினீயர், டாக்டர், நீதிபதி, விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். ரொம்ப வசதியாக இருக்கிறார்’ என்றெல்லாம் பதில் வரும். அது மட்டுமின்றி, ‘என் மகனுக்குப் படிப்பு சரியாக வரவில்லை, சரியான வசதி இல்லை’ என்று சொல்லும் ஒரு முதியோர் கூட அங்கு அகப்பட மாட்டார்.
ஏனென்றால், படிப்பறிவில்லாத எந்த ஒரு மகனும், அவர் ஏழையானாலும் சரி தனது பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் அளவுக்குத் துணிய மாட்டார். அதுமட்டுமில்லை, நகரங்களைப் போல் கிராமங்களில் முதியோர் இல்லங்கள் அறவே இல்லை. பெரும்பான்மையான முதியோர் இல்லங்கள் நகரங்களில்தான் இருக்கின்றன.
நம்மைப் பெற்று வளர்த்து, சீராட்டி நமக்கு வேண்டியது எல்லாம் பார்த்துப் பார்த்து செய்து நம்மை உயர்த்திய பெற்றோர்களை, பெற்றோர்களாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர்களின் வயதைக் கருதி அவர்களை முதியோர்களாக நினைத்தோமானால் அவர்களுக்கு முதியோர் இல்லங்கள்தான் புகலிடமாக அமையும். பெற்றோர்களாகப் பார்த்தோமானால் நம்முடனேயே இருக்க வேண்டும் என்ற எண்ணம் எழும். நிச்சயமாக முதியோர் இல்லத்திற்கு அவர்களை அனுப்ப மாட்டோம்.
பெரும்பான்மையான மகன்கள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்புவதற்கு பல்வேறு காரணங்களைக் கூறினாலும், முக்கியக் காரணம் ஒன்றே ஒன்றுதான். பெரும்பாலும் மனைவியாக வருபவரின் பேச்சைக் கேட்டுத்தான் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்புகிறார்கள். மறுத்துப் பேசுவதோ, சண்டை போடுவது கிடையாது. மனைவிக்கு அடங்கி, பெற்றவர்களை பரிதவிக்க விடுகிறார்கள்.
அதே மனைவியர், வயது முதிர்ந்த தனது தாய், தந்தையரை பராமரிக்க தனது சகோதரர்கள் முன்வராதபோது சற்றும் யோசிக்காமல் அவர்களை தனது வீட்டிற்கு, அதாவது கணவன் வீட்டிற்கு அழைத்து வரத் தயங்குவதில்லை. கணவன் இதற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவனுடன் சண்டை போட்டாவது தனது பெற்றோர்களை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக் கொள்கிறார்கள். வேறு வழி இல்லாமல் கணவரும் அதற்க ஒப்புக்கொள்ள வேண்டியவராகிறார்.
ஆனால், எந்த ஒரு மகனும் தனது பெற்றோரை வெறுக்கும் மனைவியை எதிர்த்துப் பேசுவதில்லை. இதனால் அவர்கள் தங்களது பெற்றோர்களுக்கு மிகுந்த மன வேதனையைத் தருகின்றனர். நகரங்களில் வசிக்கும் இளைஞர்கள் இதைப் புரிந்து, இனிமேலாவது மனம் மாறுவார்களா?