தேயிலையை மட்டும் வடிகட்டி எடுக்கும், ‘கடும் டீயை’ குடித்து வந்தால் இதயநோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் சூழல் குறைகிறது என்று இந்தியன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் பிராக்டீஸ் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதய நோயை முறியடிக்கும் மருத்துவ குணம் கடும் டீயில் 61 சதவீதம் இருக்கிறதாம். (சிறிய வெங்காயத்தில் 13 சதவீதமும், ஆப்பிள் பழத்தில் 10 சதவீதமும்தான் இருக்கிறது).
வைரஸ், பாக்டீரியா, அணுக்கிருமிகளால் ஏற்படும் நோய் தன்மையை டீயில் இருக்கும் ‘பாலிபினால்’ என்ற சத்து அழிக்கிறது. ஆனால், தேநீரில் இருக்கும் கடுப்புத்தன்மை குறைய குறைய அதில் இருக்கும் குணங்கள் குறைந்துகொண்டே போகிறது. இதற்குக் காரணம் தேநீரில் பால் சேர்ப்பதுதான். தேநீரில் பால் சேர்வதால் அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் சிதைந்து போகின்றன என்கிறார்கள்.
உலகளவில் பல கோடி மக்கள் அல்சைமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூளையில் உள்ள நினைவுத்திறன் செல்களின் பாதிப்பினால் ஏற்படும் இந்நோய்க்கு தேநீர் சிறந்த மருந்து என்று கண்டறிந்துள்ளனர். பச்சை தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீர் மற்றும் பால் கலக்காத கருப்பு தேநீரில் அல்சைமர் நோய்க்கான என்சைம்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது என இங்கிலாந்தின் நியுகாஸ்டல் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
நமது உடலில் மிகப்பெரிய இரத்த நாளம் என்றால் அது ‘அரோடா’தான். அது எந்தப் பாதிப்பும் இன்றி சீராக இயங்க பால் சேர்க்காத கருப்பு தேநீர் உதவுகிறது என்கிறார்கள். ஒரு கப் பிளாக் டீயில் 200 மி.கி. புளோவினாய்டு கிடைக்கிறது. நச்சுத்தன்மை எதிர்ப்பில் இது ஒரு கப் ஆரஞ்சு பழச்சாற்றை விட 400 சதவீதம் அதிகம் பலன் தரும். சீனர்கள் உடல் பருமனை கட்டுப்பாட்டில் வைக்க ஒவ்வொரு உணவுக்கு பிறகும் ஒரு கப் கருப்பு தேநீர் பருகுவதாக டச்சு நாட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இன்சுலின் போன்றே கருப்பு தேநீர் செயல்படுவதாக இங்கிலாந்து நாட்டின் டன்டீ பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தியாப்ளேவின் மற்றும் தியாருபிஜின் எனும் சேர்மங்கள் கருப்பு தேநீரில் இருப்பதே இதற்குக் காரணம். இது டைப் 2 நீரிழிவை குணப்படுத்தும் என்கிறார்கள். இதற்கு காலையில் பால், சர்க்கரை கலக்காத சுடுநீரில் தேயிலை கலந்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள். தினமும் இரண்டு கப் பிளாக் டீ சாப்பிட சர்க்கரை நோயின் தாக்கம் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்கிறார்கள்.
உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான எடையை குறைக்க வேண்டுமா? ஒரு கப் பால் கலக்காத பிளாக் டீ குடியுங்கள் என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். பிளாக் டீ வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து நல்ல பாக்டீரியாக்களை அதிகப்படுத்துவதே இதற்குக் காரணம் என்கிறார்கள்.
தினமும் ஏதேனும் ஒரு வேளை சுடச்சுட சூடான கருப்பு தேநீர் குடியுங்கள். அது கண்களில் ஏற்படும் ‘குளுகோமா’ நோயை தடுக்கும் என்கிறார்கள் அமெரிக்காவின் நேஷனல் ஹெல்த் சர்வே ஆராய்ச்சியாளர்கள். குளுகோமா என்பது கண்களில் அதிகப்படியான அழுத்தம் காரணமாக ஏற்படும் நோய். இதனை கவனிக்காவிட்டால் கண் பார்வை கூட பறிபோகும். இந்த அழுத்தத்தை கருப்பு தேநீர் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பால் இல்லாத டீ குடிப்பது இதயத்திற்கு இதமான பலன்களைத் தருகிறது என்பதை பெர்லின் ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
கருப்பு தேநீர் பருகுவதால் வயதானவர்களின் சிக்கலான பணிகளை (சைக்கோ மோட்டார் வேகம்) செய்யும் திறன் அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. தேநீர் பருகுவது மூத்தவர்களின் மனச்சோர்வை குறைக்கும் என்பதை சிங்கப்பூர் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். தேயிலையிலுள்ள கேடசின்,
எல்-தியானனன் மற்றும் காஃபின் ஆகியவற்றின் சேர்மங்கள் மனநிலையை மேம்படுத்தும் என்கிறார்கள். மேலும், அது புற்றுநோயை தடுக்கிறது. நீண்ட ஆயுளை அளிப்பதில் முக்கிய இடம் வகிக்கிறது என்கிறார்கள்.