
'சீக்கிரமாக படுக்கைக்கு சென்று மறுநாள் சீக்கிரமாக எழுந்திருப்பது ஒரு மனிதனை ஆரோக்கியமாகவும், செல்வந்தனாகவும், புத்திசாலியாகவும் வைக்கிறது' என்று பெஞ்சமின் பிராங்கிளின் என்ற அமெரிக்க அறிஞர் கூறியுள்ளார். நமது முன்னோர்கள் இந்தப் பழக்கத்தை தவறாமல் கடைப்பிடித்து வந்தனர்.
ஆனால் தற்போது வளர்ந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் டிவி பார்ப்பதிலும் மொபைல் ஃபோனிலும் நேரம் செலவழித்துவிட்டு இரவு வெகு நேரம் கழித்து தூங்கச் செல்வதை வழக்கமாக்கி வைத்திருக்கின்றனர். காலையில் தாமதமாக எழுந்து அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்புகிறார்கள். இதனால் அவர்களது உடல் நலமும் மன நலமும் பாதிக்கிறது. அதிகாலையில் எழுவதால் ஏற்படும் அற்புதப் பலன்கள் ஏராளம்.
1. அமைதியான சூழ்நிலை:
அதிகாலை நேரத்தில் எழும்போது அந்த அமைதியான சூழ்நிலையே மனதுக்கு இதமாக இருக்கும். யாருடைய பேச்சு சத்தமும் இன்றி குழந்தைகளின் கூச்சல் ஒலியின்றி இருக்கும். அந்த சூழ்நிலையே அலாதி நிம்மதி தரும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள் என கலைத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் மிக மிக உகந்தது. அவர்களுக்கு மட்டுமல்லாமல் தியானம் செய்ய விரும்புகிற அனைவருக்கும் இந்த நேரம் மிகவும் உகந்தது.
2. அதிகப்படியான இரண்டு மணி நேரங்கள்:
காலை 6 அல்லது 6:30-க்கு எழுவதற்கு பதிலாக நாலரை மணிக்கு எழுந்திருக்கும்போது தினமும் இரண்டு மணி நேரம் அதிகப்படியான நேரம் கிடைக்கும். இதனால் வருடத்திற்கு 30 நாட்கள் நமக்கு அதிகமாக கிடைக்கும். அந்த நாள் முழுக்க என்ன செய்யப் போகிறோம் என்பதை திட்டமிட்டு கொண்டு அதற்கேற்ப அந்த இரண்டு மணி நேரத்தையும் செலவழிக்கலாம்.
3. வெற்றியாளர்களின் ரகசியம்:
பிரபலமாகவும் வெற்றியாளர்களாகவும் வலம் வரும் மனிதர்களிடம் 'உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன? என்று கேட்டால் அதிகாலையில் எழுவதைத்தான் சொல்வார்கள். எல்லா மனிதர்களுக்கும் அதே இருபத்தி நான்கு மணி நேரம்தான். ஆனால் வெற்றியாளர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்றால் அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் வேலையை முன்னதாகவே தொடங்குகிறார்கள். அதனால் வெற்றி அடைகிறார்கள்.
4. வேலையை தள்ளிப் போடுவதற்குத் தடா:
குறித்த நேரத்தில் வேலையை செய்து முடிக்கலாம். எந்த வேலையையும் தள்ளிப்போட வேண்டிய அவசியமே இருக்காது. சொல்லப்போனால் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வேலைகளை முடிக்கலாம், இந்த அதிகப்படியாக கிடைக்கும் இரண்டுமணி நேரத்தில்.
5. உடற்பயிற்சிக்கு உகந்த நேரம்:
அதிகாலையில் சுத்தமான காற்று கிடைக்கும். அமைதியான சூழ்நிலையும் இருக்கும். அந்த நேரத்தில் சிறிது நேரம் தியானம் செய்து விட்டு உடற்பயிற்சிகளை செய்ய தொடங்கலாம். உடற்பயிற்சி செய்யும்போது உடலுக்குக் கிடைக்கும் என்டார்ஃபின்களால் மனதிற்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
6. பக்குவமும் நிதானமும்:
தினமும் காலையில் தாமதமாக எழுபவர்கள் அரக்கப் பறக்க வேலைகளை செய்துவிட்டு அலுவலகத்துக்கு கிளம்புவார்கள். அந்த நேரத்தில் வீட்டையே ஒரு வழியாக்கி எல்லோரிடமும் கத்தித் தீர்த்து விடுவார்கள். தாமதமாக எழுவதால் எந்த வேலையும் உருப்படியாக செய்ய முடியாது.
பைக் சாவியை மறப்பது, ஃபைல், பென்டிரைவை மறப்பது என்று பதட்டத்துடனும் நிம்மதியற்றும் இருப்பார்கள். ஆனால் அதிகாலையில் எழுபவர்களுக்கு இந்த சிக்கல் இல்லை.அவர்கள் நிதானமாக தம் வேலைகளை செய்கின்றனர். எனவே அதிகாலை 4:30 மணியிலிருந்து 5 மணிக்குள் எழுவது என்பது நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் சிறந்த பரிசு ஆகும்.