
வேலை நிமித்தமாக கணவன், மனைவி இருவரும் தனித்தனி ஊர்களில் தள்ளி இருப்பது மனவேதனை அளிக்கும் விஷயம்தான். ஆனால், ஒருவரை ஆழமாகவும், உண்மையாகவும் நேசிக்கிறோம் என்றால் தூரமும், நேரமும் ஒரு பொருட்டே அல்ல. உடலால் மட்டும் பிரிந்திருப்பது தம்பதிகளுக்கு வேதனை அளிப்பதாக இருந்தாலும் இதில் காதல், அன்பு, பாசம் போன்றவை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், சில காரணங்களால் தம்பதிகளுக்கு இடையில் பிரச்னைகள் ஏற்படலாம். அதனைத் தவிர்க்க செய்ய வேண்டிய விஷயங்கள் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.
1. சர்ப்ரைஸ் செய்வது: வேலை நிமித்தமாக தள்ளி இருந்தாலும் ஒரு பிறந்த நாள் அல்லது ஏதேனும் ஒரு விசேஷம் என்று வரும்போது சர்ப்ரைஸாக அவரைப் பார்க்க வந்து அவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியைக் கொடுக்கலாம். இந்த சர்ப்ரைஸ் வருகை என்பது சொல்ல முடியாத மகிழ்ச்சியை இருவருக்குமே தரக்கூடியது. நினைத்து பார்க்காத சமயத்தில் திடீரென வருகை தந்து எதிர் தரப்பினரை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கலாம். இதனால் அன்பும் காதலும் கூடும். தம்பதிகள் இருவருமே அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வது சிறப்பு. இருவரும் ஒன்றாக இருக்கும் சமயங்களில் மொபைல் போன்கள் மற்றும் பிற கவனச் சிதறல்களை தவிர்த்து ஒருவர் மீது ஒருவர் முழுமையான கவனம் செலுத்துவது உறவை வலுவாக்க உதவும்.
2. கலந்து பேசுவது: நீண்ட தூர உறவுகளில் சண்டைகள் ஏற்படுவது இயல்புதான். இதனால் சிலர் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதை நிறுத்தி விடுவார்கள். சண்டைகளை உடனுக்குடன் கலந்து பேசி பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆறப்போடும் எந்த விஷயமுமே மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தி விடும். எனவே, சண்டைகளை உடனுக்குடன் முடித்துக்கொள்வது நல்லது. இதனால் தவறான புரிதல்கள் ஏற்பட்டு இருவருக்கிடையேயும் பிரிவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
3. நேரம் ஒதுக்குவது: எவ்வளவு பிஸியாக இருந்தாலும், எவ்வளவு பொறுப்பான வேலைகள் தலைக்கு மேல் இருந்தாலும் பார்ட்னருக்காக என்று சிறிது நேரத்தை ஒதுக்கித்தான் ஆக வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ போன் மூலமும், வீடியோ கால் மூலமும் விஷயங்களை பகிர்ந்து கொள்வது உறவை மேம்படுத்தும். அந்த வாரத்தில் நடந்த சுவாரசியமான விஷயங்களையும், சந்தித்த புதிய நண்பர்களையும், உறவுகளையும், வீட்டில் நடந்த பிள்ளைகளின் சுவாரஸ்யமான உரையாடல்களை பற்றியும் பகிர்ந்துகொள்வது போன்றவற்றை செய்யலாம். இதனால் ஒருவருக்கொருவர் தள்ளி இருக்கிறோம் என்ற உணர்வை போக்கிக் கொள்ளலாம்.
4. சின்னச் சின்ன பரிசுகளை அனுப்புவது: எவ்வளவு தொலைவில் இருந்தாலும் பார்ட்னருக்குப் பிடித்த சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கி அனுப்பி அவர்களை சர்ப்ரைஸ் செய்யலாம். இது உறவில் அன்பை வளர்க்க உதவும். நம்முடைய பார்ட்னர் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவருக்கு உணர்த்தவும் செய்யும். ஒருவருக்கொருவர் தொலைவில் இருந்தாலும் சின்னச் சின்ன சந்தோஷங்களை அனுபவிப்பது மிகவும் முக்கியம்.
5. தொடர்பு கொள்வது: எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கம்யூனிகேஷன் என்பது இன்றியமையாத, அவசியமான ஒன்றாகும். சின்னச் சின்ன குறுஞ்செய்திகள் அனுப்புவது, ஃபோனில் அழைத்து பேசுவது போன்றவற்றின் மூலம் நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தம்பதியருக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும். கிடைக்கும் நேரத்தை குவாலிட்டியாக செலவிடுவது உறவை வளர்க்க உதவும்.
6. வெளிப்படையாக இருப்பது: இருவருமே தள்ளி இருந்தாலும் ஒருவருக்கொருவர் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படையாகப் பேசுவது நல்லது. ஒருவருக்கொருவர் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றி பேசுவதும், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதும் முக்கியம். இதற்கு இருவருமே ஒருவருக்கொருவர் உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். இருவருமே தங்களுக்குள் தோன்றும் கவலைகள், ஆசைகளை விவாதிக்க முழு மனதோடு தயாராக இருக்க வேண்டும். சில சமயங்களில் விவாதங்கள் தர்மசங்கடமாக இருந்தாலும் மனம் திறந்து பேசுவது மட்டுமே பெரிய பிரச்னைகளை தவிர்க்க உதவும்.