

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவராய் இருக்கும்போது, அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, இருவரும் காலையில் எழுந்ததும் இயந்திரத்தனமாக செயல்படாமல், தாம் இருவரும் ஒரே திசையில் சேர்ந்தே பறக்கும் பறவைகள் போல என்றுணர்வது அவசியம். அதற்கு அவர்கள் செய்ய வேண்டிய ஏழு விஷயங்கள் என்னென்ன என்பது பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. காலையில் கண் விழித்ததும் துணையின் கண்களை நேருக்கு நேர் பார்த்து ‘குட் மார்னிங்’ சொல்வது, ஒரு கப் காபியை ஒன்றாய் அமர்ந்து, எந்தவித கவனச் சிதறலுமின்றி குடிப்பது போன்ற சிறு சிறு செயல்கள் அவர்களுக்கிடையே உறவு செழிக்க உதவும். காலை நேர வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது ஒருவரை ஒருவர் கடந்து செல்கையில் மற்றவரை இடையூறாக எண்ணக் கூடாது.
இருவருக்கும் பொதுவான வேலையை 'அவர் செய்யட்டும்' என்றெண்ணி ஒதுங்கிவிடாமல், சமயத்திற்கு ஏற்றபடி யார் வேண்டுமானாலும் முன்வந்து அந்த வேலையை செய்து முடிக்கலாம். ஒருவரை ஒருவர் கவனிக்காது இருத்தல், நாள் ஆரம்பமாகும் முன்பே, உணர்வுபூர்வமாக ஒருவர் மனதிலிருந்து மற்றவரை மறக்கச் செய்துவிடும்.
2. காலை நேரம் சீரியஸான விவாதங்களுக்கு ஏற்ற நேரமல்ல. ஏனெனில், எழும்போதே கார்டிசால் என்னும் ஸ்ட்ரெஸ் உண்டாக்கும் ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்க ஆரம்பிக்கும். அதை மேலும் அதிகரிக்கச் செய்யாமல், அமைதியாக அவரவர் வேலைகளைப் பார்ப்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.
3. காலை நேர உரையாடல் பார்ட்னரின் மன நிலையை பாதிக்காத வகையில் சிம்பிளாக இருப்பது நல்லது. இருவரில் ஒருவர் முன்கோபியாய் இருப்பின், எதிர்மறை உரையாடல் அவரின் அந்த நாளின் முழு செயல்பாடுகளிலும் எதிரொலிக்கக் கூடும்.
4. காலையில் ஒரு பத்து நிமிடம் சேர்ந்து சிறிது தூரம் நடந்துவிட்டு வருவது, இருவரில் ஒருவர் பாட மற்றவர் சமைப்பது போன்ற வழக்கங்களை தினசரி பின்பற்றுவது இருவரின் நெருக்கத்தை மேலும் அதிகரிக்க உதவும்.
5. வெவ்வேறு திசையில் பிரிந்து அலுவலகம் நோக்கிச் செல்வதற்கு முன் துணையின் கையில் முத்தமிட்டோ அல்லது சில நொடிகள் தோளில் சாய்ந்து பின் பிரிவது, அவருக்குள் சுரக்கும் ஆக்ஸிடாஸின் (Oxytocin) என்னும் காதல் ஹார்மோன் அளவை அதிகரிக்கச் செய்யும். இது நரம்பணுக்களை அமைதிப்படுத்தி இருவருக்கிடையிலான அன்பையும் பிணைப்பையும், பச்சாதாப உணர்வையும் அதிகரிக்கரிக்க உதவி புரியும்.
6. காலை நேர வேலைப்பளுவையும் அழுத்தங்களையும் ஒருவரே சுமக்காமல் சரிசமமாகப் பிரித்துக்கொள்ளுதல் தாம்பத்தியம் செழித்து வளர சிறந்த முறையில் உதவும்.
7. வேலையைத் தொடங்குவதற்கு துணையைப் பிரிவதற்கு முன் ஆதரவாக சில வார்த்தைகளை கூறிச் செல்வது நல்லது. அது, ‘இன்று ப்ராஜெக்ட் சமர்ப்பிக்கணும்னு சொன்னியே. குட் லக்’ என்றோ அல்லது ‘எது தேவைன்னாலும் என்னைக் கூப்பிட்டு கலந்தாலோசிக்க தயங்காதே’ எனும் நம்பிக்கை தரும் வார்த்தைகளாக இருக்கலாம்.